60 வயதிலும் மிளிரும் மடோனா!

காதல் வரிகளானாலும், புரட்சி வரிகளானாலும் அதன் அதீதத்தைத் தொட்டுப் பாடுபவர்தான் மடோனா. அமெரிக்க பாப் பாடகரான மடோனா, தற்போது 60 வயதை எட்டியிருக்கிறார். 60 வயதிலும் அவரின் ஃபேஷன் ஆர்வம் இன்றளவும் இளமைத் துள்ளலாக இருக்கிறது. உலகம் கொண்டாடும் மடோனாவின் ஃபேஷன் பற்றி ஓர் அலசல்.

பொதுவாக பாப் இசைப் பாடகர்கள், பாடல்களில் மட்டுமன்றி, ஆடையிலும்  தங்களுக்கான தனி பாணியை உருவாக்கிக் கொள்வார்கள்.  பிரிட்னி ஸ்பியர்ஸ், மைக்கேல் ஜாக்ஸன்,  ஜார்ஜ் மைக்கேல் என, பல பாடகர்களை வரிசைப்படுத்த முடியும். அதில் மடோனாவின் ஆடை ஆபரணங்கள், ஃபேஷன் சகாப்தத்தில் தவிர்க்க முடியாத நீண்ட தொடர்.

ஆரம்பக் காலகட்டத்தில் மடோனா

1981 ஆம் ஆண்டு தனது பயணத்தை ஆரம்பித்த மடோனா, அன்றைய இளம் பெண்களின் டிரெண்ட் செட்டர். மினி ஸ்கர்ட், கோன் பிரா, கேப் ஜீன்ஸ் என இவர் எதை அணிந்தாலும், அது டிரெண்ட் ஆனது. குறிப்பாக ஃபேஷன் டிசைனர்களோடு நல்ல உறவு முறையை வளர்த்துக் கொண்டார். அவரின் ஆடைகள், மற்றவர்களை விட  தனித்துத் தென்படுவதற்கு அதுவும் ஒரு காரணம்.

மடோனாவின் பிரத்யேக ஸ்டைலானது அவர் 1984ஆம் ஆண்டு அறிமுகமான மியூசிக் டெலிவிஷன் சேனலில்தான் மெருகேறியது. அதில் ‘லக்கி ஸ்டார்’ மற்றும் ‘பார்டர் லைன்’ ஆகிய வீடியோக்களில், அவர் புதுவிதமான தோற்றத்தை முயற்சி செய்திருந்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. கருப்பு நிற மினி ஸ்கர்ட், மெஷ் நிட் டேங்க் டாப் (mesh knit tank tops), பிளாக் கிளவுஸ், ஹெட் பேண்ட், ஸ்டிலெட்டோ ஹீல்ஸ், பாய் டாய் பெல்ட், கைகள் நிறைய ரப்பர் பிரேஸ்லெட், கலைந்த முடி, ஹெவி மேக் அப் என, அந்த வீடியோவில் முழுமையான ஃபேஷனிஸ்டாவாக தோற்றமளித்தார் மடோனா.

அந்த ஸ்டைல்தான் அவருக்கான அடையாளமாகவும் மாறியது. பின் அந்த ஸ்டைல், உலகம் முழுவதும் உள்ள பெண்களின் மனம் கவர்ந்த ஸ்டைலாக ஆனது. அவரைப் போல் அப்படியே ஆடை அணிகலன்களை அணிபவர்களை, ‘மடோனா வானபீஸ்’ (மடோனாவாக விரும்புகிறவர்கள்’) என அழைப்பதும், அன்றைய டிரெண்ட். குறிப்பாக 1981 முதல் 1986 வரை, இவர்தான் ஃபேஷன் டிரெண்டை வரையறுத்தார் என்றே சொல்லலாம்.

டிரெண்டை உருவாக்கிய மடோனா

அதேபோல் 1985ஆம் ஆண்டு நடைபெற்ற எம் டிவியின் விருது நிகழ்ச்சியில், வெள்ளை நிற கவுன் அணிந்து, அதற்கு மணப்பெண்  நகைகளை அணிந்து, இடுப்பில் அவரின் அடையாளமான பாய் டாய் கருப்பு நிற பெல்ட்டை அணிந்திருந்தார். அந்த ஸ்டைலும் ஹிட் ஆனது. பத்திரிகைகளிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அப்போது மடோனாவின் ஆடை மற்றும் அணிகலன்கள் போன்ற கலெக்‌ஷன்களை, உலகின் பிரபல பிராண்டான மேசி’ஸ், ‘மடோனா லேண்ட்’ என்று பெயர் வைத்து, தனி செக்‌ஷனையே அமைத்திருந்தது. அதேபோல், மடோனாவின் தீம் பேஸ்ட் பொட்டிக்குகளும் அப்போது பிரபலம். இப்படி, பிராண்டுகள் தொடங்கி, ஃபேஷன் ஷோக்களில் ராம்ப் வாக் ஸ்டைல் வரை, மடோனாவின் ஸ்டைலைத்தான் பின்பற்றினர்.

ஃபேஷன் ஐக்கான்களை நினைவு கூர்ந்த மடோனா

மடோனா தனக்கென ஒரு ஆடை பாணியை வகுத்துக் கொண்டதோடு, அவருக்கு முன் இருந்த மர்லின் மன்றோ போன்ற ஃபேஷன் ஐக்கான்களைப் போல் தோற்றமளித்து அசத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.  உதாரணமாக 1985 ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட,  ‘மெட்டீரியல் கேர்ள்’ என்கிற ஆல்பத்தில், ’Gentlemen Prefer Blondes’ என்கிற படத்தில் மர்லின் மன்றோவின் பிரபலமான ஸ்டைலை அப்படியே பின்பற்றியிருந்தார். அதில் ஸ்ட்ராப்லெஸ் பிங்க் கவுன், மேட்சிங் லாங் க்ளவுஸ், டைமண்ட் நெக்லஸ் மற்றும் காதணிகள் என, அவரைப் போலவே அணிந்து மர்லினாகவே தோற்றமளித்தார். இப்படி விருது நிகழ்ச்சிகள், வீடியோக்கள் என பல முறை மர்லின் மன்றோவை நினைவுக் கூறும் வகையில் தோற்றமளித்து தன் ரசிகர்களை மகிழ்வித்தார்.

ஸ்டீரியோடைப்பை உடைத்த மடோனா

மடோனா, 1990களில் ஆடைகளில் இருக்கும் ஜெண்டர் ஸ்டீரியோடைப்பை உடைக்க, ஆண்களின் ஆடைகளை அணிந்து ஆண் பாவனைகளோடு தன்னை வெளிபடுத்திக் கொண்டார். அந்த சமயத்தில் பல வீடியோக்களை அவர் வெளியிட்டார். அப்போது அவரின் எக்ஸ்பிரெஸ் யுவர் செல்ஃப் வீடியோ, ட்ரூத் ஆர் டேர் திரைப்படம், அவர் எழுதிய ’செக்ஸ்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி என எல்லா நிகழ்வுகளிலும், ஆண்களுக்காக வரையறுக்கப்பட்ட உடைகளையே அணிந்தார்.

 மடோனாவின் அடையாளம் கோன் பிரா

மடோனாவின் புகழ் பெற்ற ஆடையான கோன் பிரா ஸ்டைலை, 1990களில் அறிமுகப்படுத்தினார்.  பிரபல கோட்யூர் டிசைனர் ஜீன் பால் கால்தியர் வடிவமைத்தார்.  பல நாடுகளுக்குச் சென்று மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிஸியாக இருந்த மடோனாவிற்கு, தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உருவானது. கோன் பிரா அவரது பிரத்யேக ஸ்டைலாக அமைந்துவிட்டது. அதுமட்டுமன்றி  உள்ளாடைகளை மட்டும் அணிந்தே மக்கள் மனதில் இடம் பிடித்தார். ஒரு கட்டத்தில் ஆண்களின் உள்ளாடைகளைக் கூட அணிந்து மேடையை அலங்கரித்தார். இப்படி உள்ளாடையையும் அவுட்டர்வேர் ஆடையாக மாற்றிய மடோனா, அன்றைய ஃபேஷன் உலகை ஆட்டுவித்தார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

“நான் ஆடை அணியும் விதம் உங்களுக்கு உறுத்துகிறதென்றால், உங்களின் விருப்பு வெறுப்புகளில்தான் தவறு இருக்கிறது. என்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு புதிய பாதையை காட்ட நான் அச்சப்படவில்லை. அவர்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் நிறைந்த பெண்கள். அமெரிக்கப் பாடகர் நினா சிமோன்,  சுதந்திரம் என்பது உங்களுக்குள் இருக்கும் அச்சம் விலகுவதுதான் என்கிறார்” என்று தனது தனித்தன்மையான போக்கு குறித்து சொல்கிறார் மடோனா.

டிசைனர்களோடு நல்லுறவை வளர்த்துக் கொண்ட மடோனா

மடோனாவை அறிந்த பலரும், அவர் டிசைனரோடு ஏற்படுத்திக் கொண்ட உறவை பற்றியும் தெரிந்திருக்கக் கூடும். அவர் காலூன்றிய சமயத்தில், ஒரு பாப் பாடகராக டிசைனர் ஆடைகளை அதிகமாக அணிந்தவர் மடோனாதான். அதனால்தான், அவர் மற்றவர்களைவிட தனித்து வெளிப்பட்டார். அப்போது, ஜீன் பால் கால்தியர் என்பவர்தான், மடோனாவின் உலக அளவிலான மேடைப் பாடல்களுக்கு ஆடைகளை வடிவமைத்தார். மேலும், இத்தாலிய டிசைனர்கள் டோல்ஸ் மற்றும் கப்பானா (Dolce & Gabbana), ஜியானி வெர்சாஸ்( Gianni Versace), ஸ்டெல்லா மெக்கார்ட்னி (Stella McCartney) என, 10க்கு மேற்பட்ட டிசைனர்களோடு ஒன்றிணைந்து, தன் ஆடைகளை வடிவமைத்தார். அவர்களுடன் நல்ல நட்பு பாராட்டியும், அவர்களுடன் உலக சுற்றாலா சென்றும், உறவை தக்க வைத்துக் கொண்டார். தற்போது வரையிலும், அவர் டிசைனர்களுடனான உறவை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

தற்போதும் தொடரும் ஃபேஷன்

மடோனா, அன்றைய காலகட்டத்திலேயே கண்ணைப் பறிக்கும் ஆடைகளை அணிந்தவர். இன்றைய ஃபேஷன் வளர்ச்சியையும், இன்னும் அழகாக தனதாக்கிக் கொண்டிருக்கிறார். தற்போதும் எங்கு சென்றாலும் தலைப்புச் செய்தியாகும் தகுதி கொண்ட, தவிர்க்க முடியாத ஆடைகளைத்தான் அணிந்து வருகிறார். சமீபத்தில் நியூயார்க் நகரத்தில் நிதி திரட்ட நடத்தப்படும் மெட் காலா நிகழ்ச்சிக்கு, அவர் கத்தோலிக் தீமில் கருப்பு நிற ஆடையில் மிளிர்ந்தார். அதேபோல் இன்ஸ்டா பக்கத்தில், நாளுக்கு நாள் அவர் ஷேர் செய்யும் புகைப்படங்கள், 1980களில் பார்த்த மடோனாவைத்தான் அப்படியே பிரதிபலிக்கின்றன.

ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g