ஆடை, அணிகலன்களில் இருக்கும் ஆபத்தை அறிவோம்

ஆடை, அணிகலன்களில் இருக்கும் ஆபத்தை அறிவோம்

இன்றைய நவீன காலத்தில் நாம் அணியும் சன் கிளாஸ், ஃபேன்சி மெட்டல், ஹை ஹீல்ஸ் ஆகியவை எந்தளவுக்கு ஸ்டைலாக இருக்கிறதோ, அதே அளவிற்கு ஆபத்தையும் விளைவிக்கிறது. மலிவான விலையை பொறுத்து மட்டுமே ஆடை, அணிகலன்கள் வாங்கக் கூடாது. அணிகலன்கள் வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும், என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை e1life தொகுத்து வழங்குகிறது.

சன் கிளாஸ்

 • சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் அல்ட்ரா வயலெட் கதிர்வீச்சானது, நம் கண்களின்  மென்மையான லென்ஸை பாதிக்கும். இதனால் கண் புரை, பார்வை மங்குதல், கண் எரிச்சல் போன்ற பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அல்ட்ரா வயலெட் கதிர்வீச்சை பாதுகாக்கும் வகையில், யு.வி., புரட்டக்ட்டிவ் கண்ணாடிகளை வாங்குவதே நல்லது
 • பிராண்டட் கண்ணாடிகள் போன்றே ஸ்டைலாக இருப்பதாலும், சாலையோரத்தில் விற்கும் மலிவான தரமற்ற கண்ணாடிகளை வாங்கி பயன்படுத்துகின்றோம். கண்ணாடியை பயன்படுத்தாமல் ஏற்படும் பாதிப்புகளைவிட, தரமற்ற கண்ணாடிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
 • 99-100 % யுவி கதிர்வீச்சை தடுக்கும் என்று குறிப்பிடபட்டிருக்கும் கண்ணாடிகளை பார்த்து வாங்குவதே சிறந்தது.

காதணிகள்

 • காதணிகளை ஆடைக்கு பொருத்தமாக தேர்ந்தெடுப்பதில் ஆரம்பித்து, கலர், டிசைன், வடிவம் என்று பெண்கள் தேடித் தேடி வாங்கும் அணிகலன்களால் வரும் ஆபத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
 • தற்போது ஃபேஷனுக்கேற்ப காதணியின் வடிவமும், எடையும் கூடிக் கொண்டே போகிறது. அதிக எடையுள்ள தோடுகளை தொடர்ந்து அணிவதால் தொய்வு ஏற்பட்டு, துளை பெரிதாகி காது அறுபடும் அளவிற்கு ஆபத்து உள்ளது. முக்கியமாக, பெரிய மற்றும் அதிக எடையுள்ள தோடுகள் போடும் போது, அதிக நேரம் அணிவதைத் தவிர்க்கலாம்.
 • இப்போது பல்வேறு டிசைன்களில் தரமற்ற உலோகங்களால் உருவாக்கும் காதணிகளும் விற்பனைக்கு வருகின்றன. இதைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது அலர்ஜி வருவது, நாற்றம் வீசுவது, புண் ஏற்படுவது போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டால், இந்த மாதிரி காதணிகள் அணிவதை தவிர்க்கவும்.

டைட் ஜீன்ஸ்

 • இப்போது டைட் ஜீன்ஸ் அணிவது மிகப்பெரிய டிரெண்ட் ஆகிவிட்டது. இறுக்கமான உடை அணிவதால், “Tingling thigh syndrome” ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும், தொடையில் இருக்கும் ஒரு நரம்பு  அதிகம் அழுத்தம் பெற்று, அந்த இடமே மரத்துப்போகும் அளவுக்கு பிரச்னையை விளைவிப்பதாக  மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 • டைட் ஜீன்ஸ், டைட் பேன்ட் போன்ற இறுக்கமான ஆடைகள் அணிவதால், பெண்களுக்கு கர்ப்பப்பை தொற்று ஏற்பட வழிவகுக்கும். மற்றும் வெப்பம் அதிகரிப்பதால், பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்னைகள் வரும் வாய்ப்பும் இருக்கிறது. ஆண்களுக்கும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் ஆபத்து உள்ளதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.
 • ஜீன்ஸ் அணியக்கூடது என்று சொல்லவில்லை. ஆனால், அதன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளலாம். இறுக்கமான ஆடை அணிவதை தவிர்த்து, கொஞ்சம் காற்றும் புகும்படி உடை அணிய வேண்டும். மாடர்னாக வெளிப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ, ஆரோக்கியம் என்பது அதைவிட முக்கியம்.

டை

 • டை அணிவதில் பிரச்னை இல்லை, அதை எப்படி அணிகிறோம் என்பதில் தான் சிக்கல் உள்ளது. இறுக்கமாக டை அணிவதால்,, கண்களுக்கு பல விதங்களில் பிரச்சனை வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 • சமீபத்தில், ஒரு அமெரிக்க பல்கலைக்கலகம் நடத்திய ஆய்வில், இறுக்கமாக டை அணிவதால் கழுத்து வழியாக, தலைப்பகுதிலிருந்து இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ஜூகுலார் சிரை (Jugular vein) அழுத்தப்பட்டு பாதிக்கப்படுகிறது. விழித்திரையில் ஏற்படும் அழுத்தம் காரணமாக, குளுக்கோமா நோய் வர வாய்ப்புகள் அதிகம். இதனால் கண்களில் அழுத்தம் அதிகரித்து, பார்வை இழக்கவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 • பள்ளிக்கு சீக்கிரம் அனுப்ப வேண்டும் என்கிற அவசரத்தில், டையை இறுக்கிக் கட்டும் பெற்றோர்களும், டையை கட்டிக் கொண்டே அலுவலகத்துக்கு ஓடுபவர்களும் கவனத்துடன் இருங்கள்.

 ஃபேன்ஸி மெட்டல் மோதிரம்

 • பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள் என்று பலரும் தங்களின் ஆடைக்கேற்ற வண்ணங்களிலும், டிசைன்களிலும் இந்த மெட்டல் மோதிரத்தை அணிந்து கொண்டிருக்கின்றனர். 10 ரூபாய்க்கு கூட மலிவாக விற்கப்படும் இந்த மோதிரங்களில் ஆபத்தும் இருக்கின்றது.
 • மிகவும் கனமாகவுள்ள இந்த மோதிரங்களை, ‘டைட்’ ஆக அணியும்போது, அந்த பகுதிக்கு பாயும் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. அதனால், அந்த விரல் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்த்தன்மையை இழக்கிறது. சில நேரங்களில், இந்த மோதிரம் அணிந்துள்ள விரல்களில் அடிபட்டால், விரல் பெரியளவில் வீங்கி விடுகிறது.
 • இந்த மோதிரம் அணிந்துள்ள விரல், தற்செயலாக ஏதாவது ஒரு இடுக்கிலோ, துளையிலோ, கம்பிகளுக்கு இடையிலோ சிக்கிக்கொண்டால், வேகமாக விரலை எடுக்கும்போது, விரலில் இருந்து மோதிரம் விலகாது. மாறாக, விரலில் உள்ள சதை, நரம்பு அறுபடும் அளவுக்கு, இந்த மோதிரங்கள் சிக்கலாகிவிடும்.

ஹை ஹீல்ஸ்  

 • நீண்ட காலமாக ஹை ஹீல்ஸ் பயன்படுத்தி வருபவர்களுக்கு, பாதத்துக்கு மேல் உள்ள கெண்டைக்கால் தசைகள் பாதிப்படையும். ‘Calf Muscles’ என்று இதனை சொல்வார்கள். இதில் இறுக்கம் உருவாகி வலி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
 • இந்தப் பிரச்னைக்கு, ‘அக்கிலஸ் டெண்டினைடிஸ்’ என்று பெயர். ‘ப்ளான்டர் ஃபேசியா’ எனப்படும் தசைநார்தான் கணுக்கால் எலும்பில் இருந்து, கால்விரல்கள் வரை இருக்கிறது. இது ஹை ஹீல்ஸ் அணிவதால் தடிமனாகி, பாதத்தில் வலி ஏற்பட காரணமாக அமைகிறது.
 • ஹை ஹீல்ஸ் போட்டு நடப்பதால், முதுகு தண்டுவட எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். தண்டுவட எலும்புகளில் உள்ள அனுலார் சவ்வு கிழிபட்டு, முதுகு வலி பிரச்னையை ஏற்படுத்தும். ஹீல்ஸ் அணிந்து வாகனம் ஓட்டக்கூடாது.  முழு கட்டுப்பாடு கிடைக்காது.

ஷூஸ்

 • நாம் தினந்தோறும் பயன்படுத்தும் ஷூ கால்களுக்கான சரியான அளவில் இருக்க வேண்டும், ஷூ அளவு சற்று பெரிதாக இருந்தால், கால் உள்ளே முன்னும் பின்னும் உரசி தொற்று, கால் ஆணி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சிறிய அளவுடைய ஷூவை அணியும்போது, விரல்கள் வீக்கம் ஏற்பட்டு, வலி அதிகரிக்கும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         – ராதா சாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g