லேப் டாப் வாங்கும் முன் இவற்றை கவனியுங்கள்!

லேப் டாப் வாங்கும் முன் இவற்றை கவனியுங்கள்!

பல்வேறு அளவுகளில், விதவிதமான சிறப்பம்சங்களுடன், 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை விலைகளில், பல வகையான லேப்டாப்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றில் உங்களுக்கு தேவையான லேப் டாப் மாடலை தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுலபமல்ல. பொதுவாக, உங்கள் தேவை மற்றும் பட்ஜெட் அடிப்படையில் லேப் டாப் கணியை தேர்ந்தெடுக்கும் போது, கீழ்க்கண்ட விஷயங்களையும் அவசியம் கவனத்தில் கொள்ளுங்கள்:

எந்த நோக்கத்துக்காக?

அலுவலகப் பயன்பாட்டுக்காகவா, விளையாட்டுகளுக்காகவா, கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் போன்ற தொழில்நுட்ப வேலைகளுக்காகவா, குழந்தைகளுக்காகவா அல்லது வீட்டில் சாதாரண பயன்பாட்டுக்காகவா, இவற்றில் எந்த நோக்கத்துக்காக லேப் டாப் வாங்கப் போகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். அப்போதுதான் உங்களுக்கான சரியான லேப் டாப்பை தேர்ந்தெடுக்க முடியும்.

பட்ஜெட் 

லேப்டாப் தேர்ந்தெடுக்கும் போது, முன்பே பட்ஜெட்டை நிர்ணயம் செய்துவிடுவது நல்லது.  இல்லையெனில், எதைப் பார்ப்பது, எதைத் தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் ஏற்படுவதுடன், நேரமும் வீணாகும். ஏனெனில், ஒரே விதமான அம்சங்கள் கொண்ட லேப்டாப்கள் வெவ்வேறு பிராண்டுகளில் வெவ்வேறு விலைகளில் இருக்கும்.  ஆகவே, குறிப்பிட்ட வசதிகள், கான்ஃபிகரேஷன் கொண்ட லேப்டாப்பை பட்ஜெட்டுக்குள் வாங்க வேண்டுமானால், சில நேரங்களில் உங்கள் பிராண்ட் விருப்பத்தை தியாகம் செய்ய நேரலாம்.

இயங்குதளம் (ஓ.எஸ்.,)

கணினியின் செயல்திறனை நிர்ணயிப்பதில் பல்வேறு அம்சங்கள் பங்களித்தாலும், பயன்படுத்தும் போது சிறப்பான அனுபவத்தை அளிப்பது அதன் ஆப்பரேஷன் சாஃப்ட்வேர் எனப்படும் இயங்குதளமே.  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10, ஆப்பிளின் மேக், கூகுளின் குரோம் ஆகிய இயங்குதளங்கள் தான் தற்போது கணினிகளில் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. விண்டோஸ் தான் மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்ட, அதிகம் பேர் பயன்படுத்தும் இயங்குதளம். தொழில்நுட்ப பணிகளை செய்வோர் விரும்பும் இயங்குதளமாக ஆப்பிளின் ‘மேக்’ இருக்கிறது. ‘மேக் ஹை சியரா’ தான் இதில் புதிய வெர்ஷன். கூகுள் நிறுவனத்தின் ‘குரோம்’ இயங்குதளம், அடிப்படை அம்சங்களை கொண்ட எளிதான இயங்குதளமாக உள்ளது. குழந்தைகளுக்கு வாங்கும் கணினிகளில், குரோம் இருந்தால் எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

லேப் டாப்பா? அல்லது ‘2 இன் 1’?

திரையை மட்டும் தனியே பிரித்து டேப் போல பயன்படுத்தும் டிடாச்சபிள் லேப் டாப், 360 கோணத்தில் மடிக்கக் கூடிய லேப் டாப் போன்ற, 2 இன் 1 அல்லது ஹைப்ரிட் மாடல்கள், சாதாரண லேப் டாப் என, பல வடிவங்களில் லேப் டாப்கள் இருக்கின்றன. உங்களின் தேவையின் அடிப்படையில் இந்த அம்சத்தையும் பரிசீலியுங்கள்.

திரை அளவு

லேப்டாப் வாங்கும் போது, முதலில் பார்க்க வேண்டிய முக்கிய அம்சமே திரையின் அளவு தான். பொதுவாக 11 அங்குலம் முதல் 18 அங்குலம் வரையான திரை அளவுகளில் லேப் டாப்கள் இருக்கின்றன. இதிலும் டச் பேட் கொண்டவையும் உள்ளன. கையில் எடுத்துச் செல்வதாக இருந்தால், 14 அங்குலம் சிறந்தாக இருக்கும். கிராபிக்ஸ் போன்ற தொழில்நுட்பப் பணிகளுக்கு பெரிய திரைகள் சிறந்தவை. சாதாரண வேலைகளுக்கு எனில், சிறிய லேப் டாப்கள், நெட்புக்குகள் போதுமானவை.

புராசஸர்

கணினியின் மூளை என்று புராசஸரை சொல்லலாம். இதுதான் செயல்திறனை தீர்மானிக்கிறது. இன்டெல், செலரான், ஏ.எம்.டி. உள்ளிட்ட பிராண்டுகளின் புராசஸர்கள் அதிகம் பயன்பாட்டில் இருந்தாலும், இன்டெல் புராசஸர்கள் தான் அதிக செயல்திறன் கொண்டவையாக விரும்பப் படுகின்றன. சாதாரண பயன்பாட்டுக்கு இன்டெல் ஐ3, அதிக செயல்திறனுக்கு ஐ5, விளையாட்டுகள் மற்றும் கிராபிக்ஸ் பயன்பாடுகள் எனில் ஐ7 புராசஸர்கள் ஏற்றவை. இதுதவிர, எத்தனையாவது ஜெனரேஷன் என்பதையும் பார்க்க வேண்டும்.. தற்போது வெளிவரும் ஹை-எண்ட் லேப்டாப்களில்  8th ஜெனரேஷன் புராசஸர்கள் பயன்படுத்தப்படுகின்றன. விரைவில் 9th ஜெனரேஷன் புராசஸர்கள் வரவுள்ளன. புராசஸர்களின் செயல்திறன் அதிகரிப்பதற்கு ஏற்ப, லேப் டாப்பின் விலையும் அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

ரேம்

லேப் டாப்பின் செயல் வேகத்துக்கு போதுமான ரேம் மெமரி இருப்பது முக்கியம். சாதாரண பயன்பாட்டுக்கு 4 ஜி.பி., ரேம் போதுமானது. அதிகபட்சமாக 8 ஜி.பி., இருந்தால் போதுமானது. ஹை எண்ட் மாடல்களில் 16 ஜி.பி., ரேம் வந்தாலும், அதன் விலை மிக மிக அதிகம்.

ஹார்ட் டிரைவ்

லேப் டாப்பின் நினைவகம் தான் ஹார்ட் டிரைவ். உங்களுக்கு எத்தனை ஜி.பி., நினைவுத்திறன் இருந்தால் போதுமானது என்பதை முடிவு செய்யுங்கள். வழக்கமான ஹார்ட் டிரைவ்களைவிட, செயல்திறன் அதிகமான எஸ்.எஸ்.டி., டிரைவ்கள் தற்போது வந்துள்ளன. இதையும் பரிசீலிக்கலாம். எனினும், கிளவுட் ஸ்டோரேஜ், எக்ஸ்டர்னல் ஹார்டு டிஸ்க் என ஸ்டோரேஜ் மெமரியை அதிகரித்துக்கொள்ள பல வழிகள் உள்ளதால், சராசரியான குறைந்தபட்ச ஸ்டோரேஜ் (256 ஜி.பி.,) போதுமானதாக இருக்கும். ஹார்ட் டிரைவின் மெமரி அதிகரிக்க, விலையும் அதிகரிக்கும்.

பேட்டரி லைஃப்

வீடு அல்லது அலுவலகம் போல ஒரே இடத்தில் வைத்து வேலை செய்வதென்றால், மின் இணைப்பு அருகிலேயே இருக்குமென்பதால், பேட்டரி லைஃப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், வீடு, அலுவலகம் தவிர, போகும் இடங்களுக்கெல்லாம் கையோடு எடுத்துச் செல்வதாக இருந்தால், குறைந்தது 7 மணி நேரம் தாங்கும் பேட்டரி இருப்பது சிறப்பு. ஆகவே, தேர்ந்தெடுக்கும் போதே, 8 மணி நேரத்துக்கு அதிகமாக சார்ஜ் நிற்கும் பேட்டரியை தேர்ந்தெடுங்கள்.

டிஸ்பிளே

திரையின் அளவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியமானது திரையின் தன்மை மற்றும் ரெசல்யூஷன். சாதாரண திரை, தொடு திரை என இரண்டு வகைகள் உள்ளன. துல்லியமான காட்சி அனுபவத்துக்கு, 1920 X 1080 என்ற அளவு பிக்சல் இருந்தால் சரியாக இருக்கும். இதைவிட அதிக பிக்சல் எனில், அது பேட்டரியின் ஆற்றலை அதிகம் பயன்படுத்துவதால், சார்ஜ் விரைவாக குறையும்.

போர்ட் வசதிகள்

பொதுவாக யு.எஸ்.பி., 3 மற்றும் ஹெச்.டி.எம்.ஐ., போர்ட்கள் இப்போதுள்ள லேப் டாப்களில் நிச்சயம் இருக்கும். ஆனால் யு.எஸ்.பி., டைப்- சி அல்லது தண்டர்போல்ட் 3 போர்ட்கள் இருந்தால், யுனிவர்சல் சார்ஜர் மற்றும் டாக்ஸ்களை இணைத்துப் பயன்படுத்த வசதியாக இருக்கும்.

பிராண்டு

எண்ணற்ற பிராண்டுகளின் தயாரிப்புகள் இருந்தாலும், மிகவும் பிரபலமான, முன்னணி பிராண்டுகளின் தயாரிப்புகளே நம்பி வாங்க சிறந்தவை. ஒப்பீட்டளவில் இவற்றின் விலை அதிகமாக தெரிந்தாலும், இவற்றின் தரம், செயல்திறன், ஆயுள் மற்றும் விற்பனைக்கு பிறகான சேவை உள்ளிட்டவை சிறந்ததாக இருக்கும்.

– செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g