தேனிலவுக்கு எங்கே போகிறீர்கள்?

தேனிலவுக்கு எங்கே போகிறீர்கள்?

திருமணத்தைத் திட்டமிடுவதை விடவும் குழப்பமானது தேனிலவுக்கு எங்கு செல்வது என்பது. கடற்கரை பிரதேசங்களா? காஸ்மோபாலிடன் நகரங்களா? வெளிநாடா? குளிர் மலைகள் இருக்கும் போது, நீங்கள் இப்படி குழப்பிக்கொள்ளத் தேவையே இல்லை. இதமான காலநிலையில், இயற்கைழகு எங்கும் பரவிக் கிடக்க, அன்புக்குரியவருடன் அன்னியோன்னியமாக, குளிர்மலைகளைவிட சிறந்த இடங்கள் இருக்க முடியாது.

மயங்க வைக்கும் மூணாறு

கேரள மாநிலத்தில், கம்பீரமான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கடைக்கோடியில் அமைந்திருக்கிறது, மயங்க வைக்கும் மூணாறு. எங்கும் பசுமை, எப்போதும் குளுமை என உங்களை வரவேற்கும் மூணாறில், தேயிலை தோட்டங்களும், புல்வெளிகளும் உங்கள் காதல் உணர்வை கூர்தீட்டும். அழகிய அட்டுக்காட் நீர்வீழ்ச்சி, பிரமாண்டமான மேட்டுப்பட்டி அணை, அல்லது ராஜமலைக்கு ஒரு ரொமான்டிக் நடை என புதுமணத் தம்பதியருக்கு விருந்தளிக்கும் மூணாறு.

ஆண்டு முழுவதும் செல்லலாம். குளிர்காலத்தில் மிகுந்த குளிர்ச்சியுடன் ரம்மியமாக இருக்கும்.

உவகையூட்டும் ஊட்டி

மலைகளின் ராணியான ஊட்டிக்கு தனி அறிமுகம் தேவையில்லை. மலை ரயிலில் இயற்கையின் அழகில் மலைத்துப் போகலாம், சிலிர்க்க வைக்கும் தொட்டபெட்டாவில் காதல் கதைகள் பேசலாம், ஊட்டி ஏரியில் குளிர்ந்த நீரில் நிதானமாக படகுச் சவாரி செய்தபடி பறவைகளின் ஒலிகளை ரசிக்கலாம், இதமான நாளுக்கு பைகாரா, காதலருடன் கைக்கோர்த்து கதைகள் பேசி நடக்க தாவரவியல் பூங்கா, பைகாரா, அருகே கோத்தகிரி, குன்னூர், பசுமை போர்த்திய மலைகள், தேயிலை-காபி தோட்டங்கள், புல்வெளிகள் என மறக்க முடியாத நினைவுகளை அளிக்கும் எண்ணற்ற இடங்கள் ஊட்டியில் உள்ளன. இவற்றுடன் அற்புதமான உணவகங்கள், தங்குமிடங்கள் என, உங்கள் காதல் வாழ்க்கைக்கு நல்ல தொடக்கத்தை அளிக்கும் ஊட்டி.

ஆண்டு முழுவதும் செல்லக் கூடிய ஊட்டி, ஜூலை-மார்ச் காலகட்டத்தில் இதமாக இருக்கும்.

இதமான குலு – மணாலி

பனி மூடிய மலைகளுக்கு நடுவே, பசுமைப் போர்த்திய மலைகளும், தூய்மையான காற்றும் சூழ்ந்திருக்கும் இரட்டை மலைநகரங்கள் தான், இமாச்சல் பிரதேசத்திலுள்ள குலு மற்றும் மணாலி நகரங்கள். மண வாழ்க்கையின் மகிழ்வை கொண்டாடி தொடங்க ஏற்ற இடம் இது. சோலங் பள்ளத்தாக்கில் சாகச விளையாட்டுகள், மணாலி பறவைகள் சரணாலயம், பழைய கோவில்கள் என சுற்றிப் பார்க்கலாம் அல்லது சாகச விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளில் ஒன்றாக ஈடுபட்டு நெருக்கத்தை பறைசாற்றலாம். இங்கு அமைதியாக சுற்றித்திரிவதும் அலாதியான அனுபவத்தைத் தரும்.

இதமான காலநிலைக்கு மே – ஜூலை மாதங்களும், பனிப்பொழிவில் விளையாட, நவம்பர் – ஜனவரி மாதங்களும் ஏற்றவை.

சிலிர்ப்பூட்டும் சிம்லா

தேனிலவுத் தம்பதியருக்கு மிகப் பொருத்தமான இடமாக நீண்ட காலமாக நினைவில் இருப்பது சிம்லா. அண்மைக்காலமாக நிறைய சுற்றுலா பயணியர் வருவதாலும், வணிகச் செயல்பாடுகளால் நெரிசல் மிகுந்த இடமாக மாறிவிட்டாலும், இன்னமும் அதன் அழகையும், அமைதியையும் சிம்லா தக்க வைத்திருக்கிறது. துணைவருடன் கைக்கோர்த்தபடி மால் ரோடில் ஷாப்பிங், ஜக்கு ஹில் டிரெக்கிங், ஹனுமன் கோவில், சாகச விளையாட்டுகள், என தம்பதியர் சுற்றித்திரிந்து களிக்க ஏராளம் உண்டு. எதுவும் செய்யாமல் இதமான காலநிலையை மட்டுமே அனுபவிக்க நினைத்தாலும், தம்பதியருக்கு நீங்கா நினைவுகளை தரக்கூடியது சிம்லா.

மே – ஜூலை மாதங்களும், பனிப்பொழிவில் விளையாட, நவம்பர் – ஜனவரி மாதங்களும் ஏற்றவை.

காதல் கொள்ள வைக்கும் கொடைக்கானல்

இயற்கை அதன் முழு அழகில் வெளிப்படும் இடங்களில் ஒன்றான கொடைக்கானல், புதுமணத் தம்பதிகளுக்கு இனிய அனுபவங்களை தர காத்திருக்கிறது. புல்வெளிகள், பள்ளத்தாக்குகள், ஓங்கி உயர்ந்த மரங்கள், காடுகள், நீரோடைகள் என, தம்பதியர் இயற்கையை இணைந்து அனுபவித்தபடி, சுவையான உணவுகளையும் சுவைக்கலாம். பொங்கிப் பாயும் சில்வர் பால்ஸ், ரொமான்டிக் உணர்வை அதிகரிக்கும் குவாக்கர்ஸ் வாக், பைன் மரக்காடுகள், எல்லாமும் தம்பதியருக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அருகிலுள்ள வட்டக்கானலுக்கு சென்றால், அமைதியான புதிய உலகத்தை காணலாம். சிக்கனமான தேனிலவு அனுபவத்துக்கு கொடைக்கானல் ஏற்றது.

ஆண்டு முழுவதும் செல்லலாம். கனமழைக் காலம் தவிர்த்து, அக்டோபர்-மார்ச் மாதங்கள் இதமானவை.

காவிரி கொண்ட குடகு (எ) கூர்க்

புதிதாக திருமணமான தம்பதியர் காதலை தொடங்க அற்புதமான இடம், கூர்க். எப்போதும் நிலைத்திருக்கும் குளிர்ச்சி, அவ்வப்போது தலைக்காட்டும் மெல்லிய வெயில், சூழலை இதமாக்க வலிக்காமல் அடித்துவிட்டுப் போகும் சாரல் என உங்களை மெய்ச் சிலிர்ர்க்க வைக்கும் கூர்க், கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. பசுமைமாறாக் காடுகள், பொங்கி வழியும் நீர்வீழ்ச்சிகள், கொள்ளைக்கொள்ளும் ஓடைகள், ஆறுகள், அழகைப் போர்த்தியிருக்கும் காஃபி, டீ எஸ்டேட்கள் நிச்சயம் மனம் மயக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், துணைவருடன் கைக்கோர்த்து நடப்பதைவிட வேறென்ன சுவாரசியம் இருக்க முடியும்?

காவிரி உற்பத்தியாகுமிடம் அருகில் தான் உள்ளது. ரொமான்டிக் அனுபவத்தை மேலும் அழகூட்ட இரவு கேம்பிங், ட்ரெக்கிங், ராஃப்டிங் என த்ரில்லிங் பொழுதுபோக்குகள். அப்பே ஃபால்ஸ், இருப்பு ஃபால்ஸ், நாம்ட்ரோலிங் நியிங்மாபா திபேத்திய பவுத்த மடம், கோல்டன் டெம்பிள் ஆகியவை அருகிலுள்ள சுற்றுலா இடங்கள். கண்டுகளிக்க சிறந்த காலம்: ஆண்டு முழுவதும்.

– செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g