புதுமண தம்பதியருக்கு என்ன பரிசளிக்கலாம்?

புதுமண தம்பதியருக்கு என்ன பரிசளிக்கலாம்?

பரிசுகள் இல்லாமல் திருமண நிகழ்வு நிறைவடைவதில்லை. திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள், மணமக்கள் வீட்டார் இருவருமே பரிசுகளை பரிமாறிக் கொள்வது, நம் கலாசாரத்தின் முக்கிய அம்சம். அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்துபவை பரிசுகள். ஏதோவொரு பரிசு என்று கடமைக்காக கொடுக்காமல், அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, நினைவில் கொள்ளத்தக்க பரிசுகளை அளிக்கலாம். தனியாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து தேர்ந்தெடுத்து, பரிசுகளை வாங்கிக் கொடுத்து தம்பதியரை வாழ்த்தலாம். இதோ அதற்கான சில ஆலோசனைகள்:

பிடித்ததை வாங்கிக்கொள்ள, ‘கிப்ட் வவுச்சர்கள்’

திருமணத்தின் போது, ஒன்றுக்கு மேற்பட்ட கடிகாரங்கள், போட்டோ பிரேம்கள், நைட் லேம்ப்கள் போன்ற பரிசுகள் அளிக்கப்படுவதை பார்க்கிறோம். ஆசையாக அளிக்கப்பட்ட பரிசுகளாக இருந்தாலும், ஒரே பொருள் தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் இருக்கையில், அவை வீணே பயன்படுத்தப்படாமல் இருக்கும்.

இதைத் தவிர்க்க, தம்பதியர் அவர்களுக்கு பிடித்த அல்லது தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள உதவும் வகையில், ஷாப்பர்ஸ் ஸ்டாப், வெஸ்ட்சைட், பான்டலூன்ஸ், பிக் பஜார் போன்ற பெரிய அங்காடிகளில் அல்லது அமேசான் , பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களில் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில், கிப்ட் வவுச்சர்களை வாங்கிப் பரிசளிக்கலாம். இதைக் கொண்டு ஆடைகள், காலணிகள், அலங்காரப் பொருட்கள், புத்தகங்கள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கேட்ஜெட்கள் என, அவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு வாங்கிக் கொள்வார்கள்.

பயனுள்ள பணப் பரிசு

திருமணத்துக்கு பணத்தை ரொக்கமாகப் பரிசளிக்கும், ‘மொய்’ வைக்கும் முறை, இங்கு பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுவது. பரிசை பணமாகக் கொடுப்பதால், நிதி நெருக்கடி உள்ள மணமக்கள் குடும்பத்தினருக்கு அது பயனுள்ளதாக இருக்கும். மணமக்களுக்கு பிடிக்காத அல்லது ஒரே மாதிரியான பரிசுகள் அளிப்பதை, இதன் மூலம் தவிர்க்கலாம். தம்பதியர் தங்களுக்கு பிடித்த பொருளை வாங்கிக்கொள்ளவும் பணப் பரிசு உதவும். ஆகவே, அழகான உறையில், அன்பு நிறைந்த மனதுடன் பணத்தைப் பரிசளித்து வாழ்த்துங்கள்.

தேனிலவு / விடுமுறை பயணம்

நண்பர்கள் சேர்ந்தோ அல்லது குழுவாக சேர்ந்து கொஞ்சம் விலை மதிப்பு அதிகமான பரிசு கொடுக்க விரும்பினால், அழகிய இடத்துக்கு மணமக்களை ஹனிமூன் கொண்டாட எற்பாடு செய்து அனுப்பி வைக்கலாம் அல்லது அவர்கள் செல்ல ஆசைப்பட்ட இடத்துக்கு சுற்றுலா அனுப்பலாம். அது ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைநகரங்களில் தங்குவதாக இருந்தாலும் சரி அல்லது பாலி, மொரீஷையஸ் போன்ற ரொமான்டிக் கடற்கரை பிரதேசங்களாக இருந்தாலும் சரி, தேனிலவுப் பயணம் தம்பதியருக்குள் அன்பை அதிகரிக்கும். இது வாழ்வில் மறக்கமுடியாத திருமணப் பரிசாக, தம்பதியர் மனதில் நிலைக்கும்.

ஸ்பா அனுபவம்

ஏகப்பட்ட சடங்குகள், எண்ணற்ற சம்பிரதாயங்கள், பல நாட்கள் நடக்கும் நிகழ்ச்சிகள் என, இந்திய திருமணங்கள் சோர்வூட்டக்கூடியவை. ஆகவே, புதிதாக மணமுடித்தவர்கள் புத்துணர்ச்சியுடன் வாழ்க்கையை தொடங்க, சிறந்த ஸ்பா மையத்தில், ஸ்பா அனுபவத்தைப் பரிசளிக்கலாம். வழக்கமான ஸ்பா சிகிச்சையுடன் அரோமா தெரப்பி, மண் குளியல் எல்லாம் செய்தால், மொத்த களைப்பும் பறந்தே போய்விடும்.

வீட்டு உபயோகப் பொருட்கள் / பர்னிச்சர்ஸ்

மின்னணு சாதனங்கள் இல்லாமல் தினசரி வாழ்க்கை இல்லை. டிவி, ஹோம் தியேட்டர், பிரிஜ், இண்டக்‌ஷன் குக்கர், மிக்சர் கிரைண்டர் போன்ற பொருட்களை வாங்கிப் பரிசளிக்கலாம். ஆனால், இவற்றை வாங்குவதற்கு முன்பாக அவர்களிடம் நீங்கள் வாங்கப்போகும் பரிசுப் பொருள் இல்லையென்பதை உறுதிச் செய்துகொள்ளுங்கள்.
ஒரு அழகான பெட், இண்டோர் ஸ்விங், நாற்காலி செட் போன்ற பர்னிச்சர் பொருட்கள் பரிசளித்தால், உங்கள் நினைவாக அது அவர்கள் வீட்டில் பல்லாண்டுகள் இருக்கும்.

அலங்காரப் பொருட்கள் /அணிகலன்கள் / நறுமண பொருட்கள்

உங்களுக்கு தம்பதியரை முன்பே நன்கு தெரிந்திருந்தால், திருமணத்துக்கு முந்தைய இனிய நினைவுகளை, போட்டோ கொலாஜ் ஆக செய்து கொடுக்கலாம். இதுதவிர, போட்டோ பிரேம், வால் ஹேங்கிங், போட்டோ கடிகாரம், அல்லது காபி மக்கில் தம்பதியரின் போட்டோக்களை பதித்து பரிசளிக்கலாம்.

தங்கச் சங்கிலி, பிரேஸ்லெட், மோதிரம் போன்ற் நகைகளும் மணமக்களுக்கு பரிசளிக்க ஏற்றவை. தம்பதியர் இருவருக்கும் பொருந்துமாறு வடிவமைக்கப்பட்ட, ‘கப்புல்ஸ் வாட்ச்’ கூட சிறந்த பரிசே.

வாழ்க்கையில் புதிய பயணத்தைத் தொடங்கப் போகும் தம்பதியினருக்கு, உயர்தர பெர்பியூம்கள் பரிசளிப்பது புத்துணர்வுடன் தொடங்க பொருத்தமாக இருக்கும். கால்வின் க்ளைன், டோல்ஸ் அண்ட் கப்பானா, ரோபெர்டோ கவாலி இப்படி பல சர்வதேச பிராண்டுகள், இரு பாலருக்கும் ஏற்ற அழகான பெர்ப்யூம் கிப்ட் செட்களை விற்பனை செய்கின்றன.

பிடித்த புத்தகங்கள்

தம்பதியர் இருவருக்கும் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் இருந்தால், புத்தகங்களைவிட அவர்களுக்கு சிறந்த பரிசு இருக்க முடியாது. அவர்களுக்கு மிகவும் பிடித்த வரிசையில் ஒரு புத்தகத்தையும், அவர்கள் இருவருக்கும் பிடிக்கும் என்று நீங்கள் கருதும் ஒரு [புத்தகத்தையும் சேர்த்து பரிசளிக்கலாம்.

பூக்களும் வாழ்த்துச் செய்திகளும்

மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் ஆசிரிவாதங்களையும் தெரிவிக்க, பூக்கள் எப்போதுமே சிறந்தவை தான். புது மண வாழ்க்கையை தொடங்கும் தம்பதியருக்கு, உற்சாகமூட்டும் வாழ்த்துச் செய்தி அடங்கிய அட்டையுடன் பூக்களையும் சேர்த்து பரிசளிக்கலாம்.

– செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g