e1 foodcourt ; சென்னையில் தென் ஆப்பிரிக்க சுவை; கலிட்டோஸ்!

e1 foodcourt ; சென்னையில் தென் ஆப்பிரிக்க சுவை; கலிட்டோஸ்!

தென் ஆப்பிரிக்காவின் பாரம்பரிய உணவை சென்னையில் சுவைக்க வேண்டுமா? அப்படியென்றால் கலிட்டோஸ் செல்லலாம்! அப்படியென்ன ஸ்பெஷல்…?

தீயிட்டு, வாட்டி சமைக்கும் பிளேம் கிரில்டு உணவுகளுக்குப் புகழ்பெற்றது, தென் ஆப்பிரிக்காவின் ‘கலிட்டோஸ்’ உணவகம். அண்மையில் வடபழனி, ஃபோரம் விஜயா மாலில் தனது கிளையை தொடங்கியதன் மூலம், சென்னையிலும் கால் பதித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில், 1996-ல் சிறிய உணவகமாக தொடங்கப்பட்டது, தனது பிரத்யேக சுவையாலும், சிறப்பான சேவையாலும் சில ஆண்டுகளிலேயே, அந்நாட்டின் புகழ்பெற்ற உணவகமாக மாறியது. தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் கிளை பரப்பி, உணவுப் பிரியர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது கலிட்டோஸ்.

கலிட்டோஸ் உணவகத்தில் அதிகம் விரும்பப்படுபவை சிக்கன் உணவுகள். உலகமெங்கும் இருக்கும் அனைத்து கலிட்டோஸ் உணவகங்களிலும், உணவின் செய்முறையும், சுவையும் ஒன்றாகவே இருக்கும் என்பது இதன் சிறப்பு. இதற்கு முக்கிய காரணம், இவர்களின் தனித்துவமான சாஸ். ஹாட் அண்ட் ஸ்பைஸியாக, ஐந்து வகையான சாஸ்களை, உணவுகளில் பயன்படுத்துகின்றனர்.  இதுவே, உணவுகளின் சுவைக்கான சீக்ரெட். ஆனால் இந்த சாஸ், தென் ஆப்பிரிக்காவில் மட்டுமே தயார் செய்யப்பட்டு, உலகமெங்கும் உள்ள கலிட்டோஸ் கிளைகளுக்கு அனுப்பப்படுகிறது. சமையலிலும், சாப்பிடும்போது நேரடியாகவும் இந்த சாஸ் பயன்படுத்தப்படுகிறது.

கலிட்டோஸ் சென்றால் கட்டாயம் சுவைக்கவேண்டியது பிளேம் கிரில்டு சிக்கன். இதன் செய்முறை, முந்தைய நாளே தொடங்கிவிடுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கே உரித்தான, அதிகக் காரமான  மிளகாயில் தயாரிக்கபப்டும் பெரி பெரி சாஸில் சிக்கன் சேர்க்கப்பட்டு, 24 மணிநேரம் மாரினேட் செய்யப்படுகிறது. மசாலாவில் சிக்கன் நன்கு ஊறிய பிறகே சமைக்கின்றனர். இதனால் சுவை கூடுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது.

தவிர, ரைஸ் பவுல், சாலட், சூப், ஸ்டார்ட்டர், ராப்ஸ் என அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும். ஆனால், அனைத்துமே தென் ஆப்பிரிக்காவின் சுவைப்படி என்பது ஸ்பெஷல். குறிப்பாக சிக்கன் – பைன் ஆப்பிள் சொசாட்டி, சிக்கன் எஸ்படிட்டா, கிரில்டு லிவர் மற்றும் ரைஸ் போன்றவை நிச்சயம் உங்களை ஈர்க்கும். பர்கரில் கூட, இரண்டு துண்டு சிக்கன்கள், இரண்டு சீஸ் என, ஒரு பிக் பர்கர் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும்.

கலிட்டோஸ் நிறுவன செப் இந்திரஜித்திடம் பேசும்போது, “இந்திய மக்களைப் போலவே, தென் ஆப்பிரிக்கா மக்களும் உணவுகளை காரசாரமாக சுவைப்பவர்கள் தான். அதனாலேயே, அவர்களின் உணவுகள் நம்மையும் ஈர்க்கிறது. இங்கு எந்த உணவையும் பதப்படுத்தி, அடுத்த நாள் பயன்படுத்துவதே கிடையாது. குறிப்பாக சிக்கன் லிவர் இங்கு ஸ்பெஷல். அன்றன்றைக்கு இறைச்சிகள் வாங்கி உணவுகளை தயார் செய்வதால், உணவும் பிரஷாக இருக்கும்.” என்றார்.

வித்தியாசமான சுவையைத் தேடும் உணவுப் பிரியர்களுக்கு, கலிட்டோஸ் சரியான இடம். தென் ஆப்பிரிகாவின் பாரம்பரியத்தொடு, காரசாரமாக உணவை சுவைக்க, ‘கலிட்டோஸ்’ செல்லுங்கள்.

குறிப்பு ;  உணவின் தரம், சுவை மற்றும் கட்டமைப்புகள் அனைத்துமே உங்களை கவரும். ஆனால் விலைப்பட்டியல் கிறங்கடிக்கிறது. சிக்கன் விங்க்ஸ் – 190, ரைஸ் பவுல்கள் – 275, முழு கிரில் சிக்கன் – 690, சிக்கன் ஸ்பாடிட்டா – 475, ராப்ஸ் வகைகள் – 265, பர்கர் – 175 முதல் என, உணவுப்பட்டியலில் விலை சற்று அதிகம் தான். ஆனாலும், தரமும் சுவையும் அதை ஈடு செய்துவிடும். தவிர, விஜயா மாலுக்குள் இருப்பதால், பார்கிங் கட்டணமும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g