குழந்தைகளை கொண்டாடும் ‘ரோல் மாடல்’ அப்பாக்கள்!

குழந்தைகளை கொண்டாடும் ‘ரோல் மாடல்’ அப்பாக்கள்!

வீட்டுப் பாடத்தில் உதவி செய்வது தொடங்கி, அவர்களின் அன்றாட தேவைகளான டயப்பர் மாற்றுவது, குளிக்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது, கதை சொல்வது, தூங்க வைப்பது என, குழந்தை வளர்ப்பில்  சமமாக பங்கெடுக்கும் இன்றைய இளம் அப்பாக்கள் தங்களின் அனுபவங்களை e1life -யிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இன்றைய  இளம் அப்பாக்கள், முந்தைய தலைமுறையை விட அதிகமாகவே தங்கள் குழந்தைகள் வாழ்வின் எல்லா பொறுப்புகளிலும் பங்கெடுக்கின்றனர். குழந்தை வளர்ப்பில் ஒரு குறிப்பிடதக்க மாற்றத்தை கொண்டு வர விரும்பும் அப்பாக்களின் அணுகுமுறை என்ன ? காலங்காலமாக குழந்தை வளர்ப்பில் பின்பற்றபப்டும் பழக்கத்தை உடைத்து பாதுகாப்பையும், தேவைகளையும் பூர்த்தி செய்வதை தாண்டி, குழந்தைகளின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களை ஊக்கப்படுத்தி முன்னேற்றும்  அப்பாக்களின் தொகுப்பு இதோ…

ரத்னவேல் – நானே என் மகளுக்கான விளையாட்டு பொம்மை !

நான் கல்லூரி பேராசிரியராக பணிபுரிகிறேன். என் மகள் சாய்மிதாவுக்கு, 9 வயது ஆகிறது.  அவள் பிறந்ததிலிருந்தே, குழந்தை வளர்ப்பில் நான் செய்ய வேண்டியது, மனைவி செய்ய வேண்டியது என்று நான் பொறுப்புகளை பிரித்துக் கொண்டதில்லை. சிறு வயதில் அவளுக்கு பல் துலக்கி விடுவது முதல் குளிப்பாட்டுவது, சமைத்து கொடுப்பது, சாப்பாடு ஊட்டுவது, சுத்தம் செய்வது என, அவளின் அன்றாட வேலைகளை செய்வதில் எனக்கொரு மகிழ்ச்சி.

என்னுடைய குழந்தை வளர்ப்பில் நான் பின்பற்றும் சில விஷயங்கள்…

காது கொடுத்து கேட்பது

என் மகள் எப்போது பேசினாலும், அவள் பேசும் போது நிராகரிக்க மாட்டேன். பொதுவாக சாய் நிறைய கேள்விகள் கேட்பாள். எனக்கு தெரிந்தால் சொல்வேன் அல்லது தெரியவில்லை என்று ஒத்துக் கொள்வேன். எவ்வளவு பிஸியாக இருந்தாலும், அவள் பேச வரும் போது 1 நிமிடம் கேட்டுவிட்டு, அதன்பிறகு அவளை திசைமாற்றுவேன்.

டிவி மற்றும் மொபைல் பயன்பாட்டில் கண்டிப்போடு இருப்பேன் 

சிறு வயதிலிருந்தே, மகளோடு விளையாடுவதற்கு தனியே நேரம் ஒதுக்கிக் கொள்வேன். பொம்மை வைத்து விளையாடுவதைவிட, என்னை பொம்மையாக்கி விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும். விளையாட்டுப் பொருட்கள் மற்றும் கேட்ஜெட்களுடன் அதிக நேரம் செலவு செய்ய விடுவதில்லை. அப்படியே செலவு செய்தாலும், குறிப்பிட்ட நேரம் மட்டுமே உண்டு. எவ்வளவு அடம் பிடித்தாலும் நான் அந்த விதியை தளர்த்த மாட்டேன்.   அவளுடன் அதிக நேரம் செலவு செய்வதன் மூலமாக, டிவி பார்க்கும் நேரத்தை குறைத்துவிடுவேன்.

மிஸ் பண்ண மாட்டேன்

அலுவலகத்தில் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், வீட்டுக்கு வந்தவுடன் அவளோடு சேர்ந்து கிராஃப்ட் வொர்க், கதை சொல்வது, கண்ணாமூச்சி ஆட்டம், செஸ் என, ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி செய்வதை கண்டிப்பாக தவற விடமாட்டேன்.

இத்தகைய அணுகுமுறையால் மட்டுமே, அவளை பற்றி என்னால் நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது. இன்று எனக்கும் மகளுக்கும் இருக்கும் உறவு மிகவும் வெளிப்படையானது. எப்போதும் என் மகள் சொல்வாள், அவளின் பெஸ்ட் ஃப்ரெண்டு நான் தான் என்று. இதற்கு மேல் என்ன வேண்டும் எனக்கு…

செல்லய்யா – அவள் ஆளுமையானவள்!

நான் தொலைகாட்சியில் பணிபுரிகிறேன். என் மகள் அமுதவாணி, வயது 12. சிறு வயதிலிருந்தே  எதையும் வற்புறுத்தி என் மகளை செய்ய வைத்ததில்லை. சாப்பாடு, தூக்கம், விளையாட்டு என  அனைத்தும் இயல்பாக நடக்க வேண்டும் என்று விரும்புவேன். அவளை ஒரு பெண் குழந்தையாக வளர்ப்பதை விட, குழந்தையாக அவளுக்கு தேவையான சுதந்திரம், மகிழ்ச்சி, மரியாதை, கவனம் இவற்றை ஒரு அப்பாவாக நான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அமுதவாணி ஆரம்பத்தில் கூச்ச சுபாவியாக இருந்தாள். அவளை பள்ளியில் நடக்கும் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்க ஆர்வத்தைத் தூண்டினேன். இரண்டொருமுறை பெயர் கொடுத்துவிட்டு நாள் நெருங்கும்போது, பதட்டத்தில் பின்வாங்கிக் கொண்டாள். இதைப் போக்க, அவள் பேசுவதை முதலில் கேமராவில் ஷூட் செய்து போட்டுக் காட்டினேன். ரசித்தாள். அவளது தோழிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் வாட்ஸ்ஆப்பில் அனுப்பினேன். அவர்கள் அதற்கு அளித்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கண்டபின், அவளுக்குள் தன்னம்பிக்கை வந்தது. அதற்கு அடுத்தடுத்து வந்த பேச்சுப் போட்டிகளில் தானே பங்கேற்கத்தொடங்கி, பரிசும் வாங்கத்தொடங்கினாள்.

அவளுடைய தனித்தன்மைகள்

நடனம், இசை, மொழி, விளையாட்டு இதெல்லாமே அவள் கற்றுக் கொள்ள விரும்பும் துறைகள். அதனால், பாலே டான்ஸ், மியூசிக் கிளாஸ், ஃப்ரென்ச் கிளாஸ், டென்னிஸ் கிளாஸ் இதெல்லாமே எனது மகள் விருப்பப்பட்டு சென்று கொண்டிருக்கிற  பயிற்சிகள். மகளுக்கு ஏன் இவ்வளவு செலவு செய்கிறாய் என்று மற்றவர்கள் கேட்பதுண்டு. ஏன்னென்றால் இதெல்லாமே அவளுடைய  குழந்தைமைக்குள் இருக்கும்  திறன்களாகவே பார்க்கிறேன்.  இதில் ஒன்றுகூட நானோ, என் மனைவியோ சொல்லி அவள் தேர்வு செய்யவில்லை. இதில் அவள் தேர்வு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது மற்றும் ஊக்கமூட்டுவது  மட்டுமே, ஒரு அப்பாவாக நான் செய்த பணி.

அசைவ உணவை விரும்பி சாப்பிடுவாள். அதுவும் நான் சமைத்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும். நானும் என் மகளும் சேர்ந்து சமைக்கும் போது, மகிழ்ச்சியாக இருக்கும். அப்போது அப்பா மகள் உறவை தாண்டிய ஒரு நட்பை இருவரும் உணர்வோம். அம்மாவை விட என்னிடம் அதிகம் பகிர்ந்து கொள்வதே, என்னுடைய அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன்.

புவன் – நான் ஒரு கங்காரு அப்பா!

நான் ஒரு தொழிலதிபர். என் மகன் தரன் 27 வாரத்தில் பிறந்ததால் ஆரம்பத்தில் அதிகமாகவே செல்லம் கொடுத்தேன். ஏனென்றால் அவனுடைய ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்தையும், என்னை பொறுத்தவரையில் பரிட்சை போல் உணர்ந்தேன். கங்காரு தன் வயிற்றில் குழந்தையை வைத்திருப்பது போல, நான் அடிக்கடி உணர்வதுண்டு

இப்போது அவனுக்கு 3 வயதாகிறது. அவனை சாப்பிட வைப்பது என்பது  இன்றுவரை எனக்கு சவாலான விஷயம். இந்த விஷயத்தில் என்னை எளிதாக ஏமாற்றிவிடுவான். தரனை பற்றிய எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். முக்கியமாக அவன் ப்ரீ-மெச்சூர் குழந்தை என்பதால், அவனுக்கேற்ற பள்ளியை தேந்தெடுப்பது எனக்கு கடினமாக இருந்தது.  நிறைய பள்ளிகள் தேடி அலைந்தேன். முதல் பத்து நாட்கள் அவன் பள்ளிக்கு அழுது கொண்டே போனது வருத்தமாக இருந்தது. ஆனாலும் நான் இவ்வளவு சென்ஸிடிவ் ஆக இருந்தால் தரன் கஷ்டப்படுவான் என்பதால், என்னை நானே மாற்றிக் கொண்டேன்.

என் அப்பாவுக்கும் எனக்கும் நடுவில் முதன்மையாக இருந்தது பயம். என்னோட விருப்பங்களை என் அம்மா மூலம் மட்டுமே நிறைவேற்றிக் கொள்ள முடியும். நாம் சொல்லி 4 நாட்கள் கழித்து தான் ரிசல்டு தெரியும். ஆனால் எனக்கும் என் மகனுக்கும் நடுவில் இருப்பது உரிமை, பகிர்தல், நட்பு என சொல்லிக் கொண்டே போகலாம். அவனுக்கு எது தேவையோ, அதை என்னிடம் நேராக வெளிப்படுத்துகிறான். இந்த நெருக்கம் எனக்கு பிடித்திருக்கிறது.

தினமும்,  குறைந்தது 2 மணி நேரமாவது அவனுடன் செலவு செய்வதை தவிர்க்க மாட்டேன். என்னோடு  பயணம் செய்வது அவனுக்கு பிடிக்கும்.  வீட்டு காலிங் பெல் அடித்ததும் அவன் ’பு’(அவன் செல்லமாக என்னை கூப்பிடுவான்) என ஓடி வந்து என்னை கட்டிக் கொண்டு டான்ஸ் ஆடும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

                                                                                                                                                                                                                  – – ராதா சாகர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g