வீட்டில் இருக்கும் டாப்ஸ்களை ப்ளவுஸாக அணியலாம்

வீட்டில் இருக்கும் டாப்ஸ்களை ப்ளவுஸாக அணியலாம்

வெஸ்டர்ன் டாப்ஸ்-ஐ ஜீன்ஸ் பேன்ட்டுடன்  அணிவதை விடுத்து, சற்று வித்தியாசமாக புடவைகளுக்கு அணிந்து பாருங்கள்.  உங்கள் தோற்றத்திற்குப் புத்துயிர் கொடுங்கள். டிப்ஸ் இதோ…

க்ராப் டாப் மற்றும் புடவை


கிராப் டாப்பிற்கு ஈடாக பலாஸ்ஸோ, ஜீன்ஸ் என அணிந்து அலுத்துப்போனால், அதை புடவையுடன் வித்தியாசமாக  மேட்ச் செய்து பாருங்கள். அசத்தலாக தெரிவீர்கள். குறிப்பாக பிளெய்ன் டாப் என்றால் காட்டன் புடவைக்கு பொருத்தமாக இருக்கும். ஃபிரில்கள் கொண்ட ஃபேன்சி டாப்களை ஜார்ஜெட் புடவைகளோடு அணியலாம்.

குர்தா மற்றும் புடவை

உங்களிடம் இருக்கும் எண்ணிலடங்கா குர்த்தாக்களை லெகின்ஸ், ஜீன்ஸ் மற்றும் பட்டியாலாவோடு மேட்ச் செய்து பழக்கப்பட்டிருப்பீர்கள். அது உங்களுக்கு போரடிக்கவும் செய்யலாம். புது ஐடியாவிற்கு காத்திருக்கிறீர்கள் என்றால் புடவையோடு மேட்ச் செய்யுங்கள்.  ஷார்ட் குர்த்தாவை ப்ளவுஸ் மாதிரி அணிந்து, வழக்கம் போல புடவை கட்டிக் கொள்ளுங்கள். உங்கள் தோற்றம் அத்தனை ஸ்டைலாக மாறிவிடும். இதை உங்கள் அலுவலகத்திற்கு அணிந்து சென்றால், நீங்கள் தான் அன்றைய டாக் ஆக இருப்பீர்கள்.

ஷார்ட் டாப் மற்றும் புடவை


ஷார்ட் டாப்புகளை ஸ்கர்ட்டிற்கு மட்டும்தான் அணிய வேண்டுமா என்ன? இப்படி புடவைக்கும் அணிந்து அசத்தலாம். குறிப்பாக உங்களுக்குப் பிடித்த விலையுயர்ந்த டாப்கள் வாட்ரோபிலேயே உறங்குகிறதென்றால், அதற்கு இப்படியும் மறுஉயிர் கொடுக்கலாம். குறிப்பாக சில்க் காட்டன், காட்டன் மற்றும் சில்க் சாரீஸ் இதற்கு கச்சிதமாக இருக்கும்.

லாங் ஸ்லீவ் டி.ஷர்ட் மற்றும் புடவை


டிஷர்ட்டுகள் பெண்களின் சவுகரியமான உடை. ஆனால் அந்த டிஷர்ட்டை ஜீன்ஸ் பேன்ட்டிற்கு மட்டுமே எல்லோரும் அணிகிறோம்.  ஆனால் கிரியேட்டிவ் ஆக புடவையை டிஷர்ட்டுடன் ஜோடி சேர்த்துப் பாருங்கள்.  மிக ஸ்டைலான தோற்றத்தைப் பெறுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கையின் அளவு இதனால் கூடிவிடும்.  இண்டோ வெஸ்டர்ன் ஸ்டைலில், நீங்கள் நடந்து வரும் போது அத்தனை கண்களும் உங்கள் மேல் மொய்த்துக் கொள்ளும். டிஷர்ட்டுகளின் பனியன் மெட்டீரியலுக்கு காட்டன் புடவைகள் பொருத்தமாக இருக்கும். அதிக டிசைன்கள் இல்லாத புடவைகளுக்கு இதை முயற்சித்துப் பாருங்கள்.

ஷர்ட் மற்றும் புடவை


நீங்கள் ஷர்ட் பிரியராக இருந்தால் இந்த புடவை ஸ்டைல் நிச்சயம் உங்களை ஈர்க்கும். உங்கள் தோற்றத்தைத் தனித்துவமாக காட்டும். தீபிகா படுகோன், சோனம் கபூர், சமந்தா என பல முன்னணி ஸ்டைல் ஐக்கான்களும் இந்த ஸ்டைலைத்தான் சமீப காலமாக பின்பற்றுகின்றனர். சில்க் மெட்டீரியலில் கார்ஜியஸாகத் தோன்றுவீர்கள். காலர் இருக்கும் என்பதால் ஸ்டேட்மென்ட் காதணிகளும், ஹை பன் ஹேர் ஸ்டைலும் பொருத்தமாக இருக்கும்.

லாங் ஜாக்கெட் மற்றும் புடவை

லாங் ஜாக்கெட் அணிவது சமீபத்திய டிரெண்ட்.  லெஹங்கா போன்ற எத்தினிக் உடைகள் மற்றும் ஜீன்ஸ் பேன்ட்டுடன் அணிவது நமது வழக்கம். புடவைக்கு ஜாக்கெட் அணிவது பற்றி நாம் கற்பனையிலும் நினைத்திருக்க மாட்டோம். ஆனால் அதுதான் தற்போதைய டிரெண்ட்.  எந்த புடவையாக இருந்தாலும், அதற்கு எதிர் நிறத்தில் லாங் ஜாக்கெட் அணிந்தால் நன்றாக இருக்கும். கூட்டத்திலேயே நீங்கள்தான் தனி ஒருத்தியாக ஜொலிப்பீர்கள்.

டெனிம் ஜாக்கெட் மற்றும் புடவை


டெனிம் ஜாக்கெட்கள் எப்போதுமே பெண்களின் க்விக் ஸ்டைலுக்கு உதவும்.  சாதாரண டிஷர்ட் அணிந்திருந்தால் கூட, அதற்கு மேலே டெனிம் ஜாக்கெட் அணிந்துவிட்டால் ஸ்டைலிஷ் தோற்றத்துக்கு மாறிவிடுவீர்கள்.  வெஸ்டர்னுக்கு மட்டுமல்ல, புடவைக்கும் அதை செய்யலாம். புதுவிதமான ஸ்டைல்களைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொண்ட சமந்தாவைப் போல், புடவைக்கும் அணிந்து அமர்க்களப்படுத்துங்கள்.  பார்ட்டி போன்ற கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்குச் சென்றால், டிசைனர் புடவையுடன் டெனிம் ஜாக்கெட்டை மேட்ச் செய்யலாம். பின் அனைவரது பார்வையும் உங்கள் பக்கம்தான்.

டிசைனர் ஜாக்கெட் மற்றும் புடவை


டிசைனர் ஜாக்கெட்டு  அதிக வேலைப்பாடுகளுடன் பார்க்க ரிச்சாக இருக்கும். பலாஸோ மற்றும் லெஹங்காவுடன் இதை அணிவது வழக்கம். ஆனால் இம்முறை அதே அளவு வேலைப்பாடுகள் கொண்ட டிசைனர் புடவையோடு அணிந்து பாருங்கள். திருமண நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது தனித்துத் தெரிவீர்கள்.

கேப் டாப் மற்றும் புடவை


கேப் டாப் தனித்துவமான தோற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. அதுவும் புடவை போன்ற ஆடைகளுக்கு அணியும்போது, இன்னும் தனித்துவமான தோற்றத்தை ஏற்படுத்தும். டிசைனர் புடவை, பட்டுப் புடவை என எதனோடும் மேட்ச் செய்யலாம். உங்களிடம் கேப் டாப் இல்லையென்றாலும் புதிதாக வாங்கி முயற்சி செய்து பாருங்கள்.

ஃபிரில் டாப் மற்றும் புடவை

இந்த ஃபிரில் டாப்புகளை அணிந்துதான் பல பிரபலங்கள் தற்போது உலா வந்துக் கொண்டிருக்கின்றனர். காண்பதற்கும் மிக அழகாக இருக்கிறது. உங்களிடம் ஜீன்ஸ் ஆடைக்கு ஏற்ப அணியும் ஃபிரில் டாப்புகள் இருந்தால், புடவைக்கு மேட்சாக உடுத்திப் பாருங்கள். நடுத்தர வயது பெண்கள் இந்த ஸ்டைலை பின்பற்றும் போது,   வயது குறைந்து ஒரு ஃபேஷனிஸ்டாவாக மிளிர்வீர்கள்.

– ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g