டீன் ஏஜ் பிள்ளைகளே – தூக்கத்தை கட்டுப்படுத்தாதீர்கள்!

டீன் ஏஜ் பிள்ளைகளே – தூக்கத்தை கட்டுப்படுத்தாதீர்கள்!

பதின் பருவ வளர்ச்சியில் தரமான தூக்கம் அவர்களின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. தூக்கத்தை தவிர்ப்பதால் உங்கள் தோற்றம் சோர்வாக இருக்கும், எதிர்மறையான மனநிலை மற்றும் செயல்களில் மந்தநிலை உண்டாகும்.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு தூக்கம் என்றாலே தொண்டையை அடைக்கும் அளவிற்கு, அவர்களுடைய வாழ்க்கைமுறை மிகவும் பிசியாக இருக்கின்றது. மனிதர்களுடைய தொடர்பைவிட மொபைல் போனும், சமூக வலைதளங்களும் நெருக்கமாக இருக்கின்றன. இன்றைய சூழலில் பிள்ளைகளுக்கு தூக்கத்தின் அருமையை புரிய வைப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. வாட்ஸ்ஆப், ட்விட்டர் என,  நேரம் பார்க்காமல் மூழ்கி இருக்கும் இன்றைய தலைமுறைக்கு, ஆரம்பத்திலேயே சில புரிதல்கலை உருவாக்க வேண்டிய தேவை பெற்றோர்களுக்கு இருக்கின்றது.

பெற்றோர்களின் மெனக்கெடலும், அணுகுமுறையும் நிச்சயமாக பிள்ளைகளுக்கு தேவைப்படுகின்றது. ஏற்கனவே, பதின் பருவத்தில் அவர்களுக்குள் நடக்கும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களை புரிந்து கொள்ள சிரமப்படுவார்கள். அதனால் இந்த பருவ வளர்ச்சிக்கு, தரமான தூக்கம் என்பது அவர்களுடைய கோபம், அழுத்தம், குழப்பம், கவனம் போன்ற விஷயங்களை கையாளவும், சீராக்கவும் உதவுகின்றது.

பெற்றோர்கள் எந்த வகையில் உதவலாம்?

உடலுக்கேற்ற தூக்கம் இல்லையென்றால் வரக்கூடிய விளைவுகள்

நூறு ஆண்டுகளுக்கு முன், மனிதரின் சராசரி தூங்கும் நேரம், 9 மணி நேரமாக இருந்தது. அது இப்போது குறைந்து 5 மணி நேரம், இன்னும் சில பேர் இரவில் கண் விழித்துவிட்டு பகலில் வகுப்பறையில் தூங்கி விழுவார்கள். இதில் இன்னொரு பிரச்சனை, 7 மணி நேரம் தூங்கினேன் என்று சொல்வார்கள். ஆனால் சோர்வாக காணப்படுவார்கள். காரணம் தரமான இரவு தூக்கமின்மையின் வெளிப்பாடு இது.

பொதுவாக 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவதால் மன அழுத்தம், கோபம், சிந்திக்கும் திறன் இழத்தல், ஞாபக சக்தி இழத்தல், கவனச்சிதறல், டென்ஷன், உடல் பருமன் இப்படி நாளுக்கு நாள் பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே தான் போகும் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் நம் மூளையில் தங்கும் தேவையில்லாத எண்ணங்கள் கழிவுகளாக சேர்கின்றன. தூக்கம் தான் இந்த கழிவுகளை மூளையிலிருந்து அகற்றும் மருந்து என்கின்றனர். கழிவுகள் சேர்ந்து கொண்டே இருந்தால், நம்முடைய மூளை என்னவாகும் என்பதை நாமே சிந்தித்து பார்க்க முடியும். நாம் திறமையாக செயல்பட, நினைத்ததை அடைய, ஆனந்தமாக வாழ தூக்கம் அடிப்படையான ஒன்று.

மொபைலும் தூக்கமின்மையும்

இன்றைய பெரும்பாலான பெற்றோர்களின் கவலை, எப்போதும் டீன் ஏஜ் பிள்ளைகள் மொபைல் போனும் கையுமாக இருக்கின்றார்கள் என்பதே. மொபைல் போனும் வாங்கி கொடுத்து, தூங்கவில்லை என்ற புகாரும் சொல்வதால், யாருக்கும் பலனில்லை. ஆரம்பத்தில் எப்போதும் மொபைலுடன் இருப்பதை கண்டிக்காமல், டீன் ஏஜ் பருவத்தில் பிள்ளைகளை இறுக்கிப்பிடிக்க முயற்சி செய்தால், பெற்றோர்களுக்கு தான் ஏமாற்றம் உண்டாகும்.

மொபைல் பார்ப்பதற்கான நேர அவகாசத்தை திட்டமிட சொல்லுங்கள். பிள்ளைகளுடன் கலந்து பேசி  இவ்வளவு நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை பின்பற்ற சொல்லுங்கள். அதோடு நின்றுவிடாமல், ஏதாவது விளையாட்டை அறிமுகப்படுத்தி, தினமும் செய்ய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுங்கள். பிள்ளைகளுக்கு பொழுதைக் கழிக்க தெரியவில்லை என்றாலும், வேறு வாய்ப்புகள் இல்லை என்றாலும், மொபைலை தான் நாடுவார்கள். அதனால் பள்ளி முடிந்தவுடன் பிள்ளைகளின் படிப்பு, ஆர்வம், விளையாட்டு சார்ந்து, வேறென்ன செயல்பாடுகளை செய்யலாம் என்பதை திட்டமிட சொல்லி, அவர்கள் செய்வதற்கான சூழலை பெற்றோர்கள் உருவாக்கிக் கொடுங்கள்.

தூக்கத்தை திணிக்காதீர்கள் – தூக்கத்தின் அருமையை உணர வையுங்கள்

இப்போதுள்ள டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, இளைய தலைமுறை பெற்றோர்களுக்கும் தூக்கத்தின் அருமை தெரிவதில்லை. அதற்கு முதலில் பெற்றோர்கள் நாம், தூங்கும் நேரத்தை கடைபிடிக்க வேண்டும். அப்போது மட்டுமே பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கவனிப்பார்கள். உணவுக்கான, டிவி/மொபைல் பார்ப்பதற்கான, தூக்கத்திற்கான நேரத்தை வீட்டில் உள்ள அனைவரும் திட்டமிட்டு பின்பற்றுங்கள். தூங்கு, தூங்கு என்று சொல்லிக் கொண்டே இருந்தால் தூக்கம் வராது, எரிச்சல் தான் வரும்.

உங்களுடைய தூக்க சுழற்சியை கவனியுங்கள். தூங்க முடியாத காரணத்தை கேட்டு பின், அந்த தொந்தரவுகளை அகற்ற வழிகாட்டுங்கள். தரமாக தூங்குவதன் மூலம் பிள்ளைகளின் ஆர்வமுள்ள விஷயத்தில் எப்படி இன்னும் விவேகமாக, திறமையாக செயல்பட  முடியும் என்பதை பாசிட்டிவ்வாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

சுகமாக தூங்க சில வழிகள்

  • இயற்கையாக வரும் தூக்கத்தை கட்டுப்படுத்த கூடாது. தூக்கத்தை அடக்கி வேலை செய்வது, கணிணி/மொபைல் போன் /டிவி பார்ப்பது, பாடம் படிப்பது போன்ற செயல்களை தொடர்ந்து செய்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரக்கூடும். தூக்கம் வராமல் நாளைடைவில் தூக்கமின்மை நோயாகவும் மாற வாய்ப்புகள் உண்டு.
  • பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள். சில நேரங்களில் மனதில் ஏதாவது பிரச்னையோ, கோபமோ உறுத்திக் கொண்டிருந்தாலும் தூக்கம் வராது. அதேபோல், இரவில் பிள்ளைகள் தூங்கப்போகும் முன் விவாதம், சண்டைகளை, புகார்/குறை கூறுவதை தவிர்க்கவும். பெற்றோர்கள் நம்முடைய பிள்ளைகள் சுகமாக தூங்குவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.
  • தூங்கும் நேரத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். ஒரு சில சந்தர்ப்பச் சூழ்நிலைகள் தவிர, அடிக்கடி மாற்ற கூடாது. இரவு 10 முதல் காலை 6 மணிவரை தூங்கும் பழக்கம் இருந்தால், அதை மாற்றாமல் பின்பற்றவும்.
  • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் தூங்குவதை தவிர்க்கவும். அதே போல் டிவி பார்த்துக் கொண்டே, மொபைலில் சாட் செய்து கொண்டே தூங்குவதை தவிர்க்கவும்.
  • டென்ஷன், மன அழுத்தம் இருந்தாலும் எளிதில் தூக்கம் வராது. இப்போதுள்ள வளர் இளம் பருவம் விளையாட்டுக்கு நேரம் ஒதுக்குவது மிகக்குறைவு. பிள்ளைகள் நன்கு ஓடி ஆடி விளையாடுவதால் உடலுக்கு ஆற்றல் கிடைப்பதோடு உடலுக்கும் வேலை கிடைக்கிறது. அதனால் அசதியில் இரவில் நன்றாக தூக்கம் வரும். அதேபோல் வீட்டில் வேலைகளை பகிர்ந்து செய்யலாம். வீட்டை சுத்தம் செய்யலாம், வண்டியை துடைக்கலாம், சமைக்கலாம் போன்ற செயல்கள் இதெல்லாம் மனதை ரிலாக்ஸாக வைக்க உதவுகின்றது.
  • மாலை 6 மணிக்கு மேல் காபி, டீ, செயற்கை குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது. இவற்றில் உள்ள காஃபைன் (Caffeine) என்ற வேதிப்பொருள் தூக்கத்தைக் கெடுக்கும். இதற்கு பதிலாக பால் குடிப்பது நல்லது.
  • உறங்குவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு முன்பே, உணவை முடித்துவிட வேண்டும். எளிதில் செரிக்கக்கூடியதாக இருக்கும் இரவு உணவு நல்லது. மதுபானங்கள் தவிர்ப்பது நல்லது.
  • தூங்கப்போகும் முன் வெதுவெதுப்பான நீரில் குளித்தால் சுகமாக தூங்கலாம். புத்தகம் வாசிப்பது, இதமான இசையை கேட்பது தூக்கத்தை அதிகரிக்க உதவும்.

தூக்கத்தை அதிகரிக்கும் உணவுகள்

வாழைப்பழம் – இதில் இயற்கையாகவே தசைகளை தளர்த்தும் ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. தூக்கத்தை தூண்டும் டிரிப்தோபன் என்ற அமினோ அமிலம் மூளையில் செரடோனின், மெலடோனின் ஹார்மோன்களை சுரக்க செய்து மன அமைதியையும், தூக்கத்தையும் உருவாக்குகின்றது.

பசலைக் கீரை – இதில் இரும்பு சத்து அதிகம். படபடப்பு மற்றும் மன அமைதியின்மையை போக்க உதவுகின்றது.

செர்ரி ஜூஸ் – இயற்கையாக மெலடோனின் அளவை அதிகரிக்கின்றன.  வேகமாக தூங்க வைக்க உதவுகிறது.

பீன்ஸ், அவரை மற்றும் பட்டாணி வகைகள் – இதில் B6, B12 உள்ளிட்ட வைட்டமின் சத்துகள், போலிக் ஆசிட் போன்றவை அதிகம் உள்ளதால், மனிதரின் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகின்றது.

இறால் மீன் – சிறந்த ருசிமிக்க கடல் உணவான இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு, நம் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறன் பெற்றிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றது.

பால் மற்றும் தேன் பால் மற்றும் சிறிதளவு தேன் கலவை, தூக்கத்தை அதிகரிக்கக்கூடிய திறன் கொண்டது.

                                                                                                                                                                                                                              -ஆ.ரா 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g