பிணைப்புள்ள தம்பதியரே சிறந்த பெற்றோர் ஆகின்றனர்!

பிணைப்புள்ள தம்பதியரே சிறந்த பெற்றோர் ஆகின்றனர்!

இல்லற வாழ்வில் புரிதலோடு இருக்கும் கணவன் மனைவி ஒரு சிறந்த பெற்றோராக இருக்க முடியும் என்கின்றனர் உளவியல் வல்லுனர்கள். தம்பதியரின் நெருக்கம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்வை கொடுப்பதோடு ஆரோக்கியமான மனநிலையுடன் வளர்வதற்கும் உதவுகிறதாம். சரி, நீங்கள் எப்படி?
 

பொதுவாக இந்திய குடும்பங்களில், குழந்தை வளர்ப்பை பெற்றோர்கள் இருவரும் சமமானப் பொறுப்பாகப் பார்ப்பதில்லை. பெரும்பாலும் பெண்களின் கடமையாகவே அது ஒதுக்கப்பட்டிருக்கிறது. வீட்டில் இருந்தாலும், வேலைக்கு போனாலும் குழந்தைகளின் நடவடிக்கைகளுக்கு, எப்போதும் அம்மாவே பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலைதான் நமது குடும்ப அமைப்பில் இருந்து வருகிறது.

ஆனால் இன்றைக்கு குழந்தை வளர்ப்பில், நிதி தேவைக்காக மட்டுமில்லாமல் குழந்தையின் எல்லா வளர்ச்சியிலும் அப்பாக்களும் பங்கெடுக்க ஆரம்பித்துள்ளனர். எண்ணிக்கையில் குறைவு தான் என்றாலும், நவீனத் தந்தையின் ரோலில் மாற்றம் வந்திருக்கிறது. ஆனால், இன்றும்  குழந்தைகளின் நடத்தையிலோ, ஒழுக்கத்திலோ பிரச்சனை என்றால், முதலில் தாயையே அதிகமாக குற்றம் சாட்டுகின்றனர். பிரச்னை என்று வரும் போது, பெற்றொர்கள் இருவரும் சமமாக பொறுப்பேற்றுக் கொள்வதே சிறந்த அணுகுமுறை.

எங்கு பெற்றோர்கள் இருவரும் குழந்தை வளர்ப்பில் சமமாக பொறுப்பேற்றுக்  கொள்கிறார்களோ, அந்த சூழலில் வளரும் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமையானவர்களாகவும், தன்மைபிக்கை உடையவர்களாகவும் வளர்வதாக கூறுகிறார் உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.  

டாக்டர். சித்ரா அரவிந்த்

என்னிடம் வருகிற பெரும்பான்மையான பெற்றோர்களில், குழந்தைக்கு பிரச்னை என்றால் அதிகமான ஈடுபாடும் பொறுப்பும் அம்மா தான் எடுத்துக் கொள்கிறார். அப்பா வீட்டில் அதிக நேரம் செலவு செய்யாததால், குழந்தையை பற்றி தெரிந்து கொள்ள முடிவதில்லை. அதனால் குழந்தைகளின் முடிவுகளை நீயே எடுத்துக்கொள் என்று மனைவியிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவதைப் பார்க்கிறேன். இது பழைய வழக்கம் தான்.

ஆனால் படித்தவர்களும் அப்படி இருக்கின்றனர். என்னிடம் வந்த பெற்றோரில் பலருக்கும் நெருக்கம் இல்லாததைப் பார்க்கிறேன். இது குழந்தை வளர்ப்பிலும் பிரதிபலிக்கிறது. ஆளாளுக்கு ஒரு முடிவை எடுத்து, குழந்தை முன் வாதம் செய்கின்றனர். சண்டை போடும் பெற்றோரால், குழந்தையை வழிநடத்த முடியாது. சில வீடுகளில் அம்மா வீட்டில் கீரை சாப்பிட சொல்லும் போது, அப்பா கடைக்கு சென்று பர்கர் வாங்கிக் கொடுப்பார்கள். பெற்றோரில் ஒருவர்  குழந்தைக்கு அதிகம் செல்லம் கொடுப்பது, மற்றவர் அதீதமாக கண்டிப்பது நல்லது இல்லை. இருவரும் அன்பையும் கண்டிப்பையும் அளவோடு வெளிப்படுத்த வேண்டும்’’ என்கிறார் சித்ரா

இன்று பெரும்பான்மையான பெற்றோர்கள் குழந்தைகள் முன் அதிகமாக சண்டை போட்டு கொள்கின்றனர், சீக்கிரம் சமரசம் ஆவதும் கிடையாது. இதை பார்த்து வளரும் குழந்தைகளுக்கு நடத்தைக் கோளாறுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தேவையான ஆளுமை, குணம், பண்பு, ஒழுக்கம், மதிப்பீடுகள் போன்ற விஷயங்களில், பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. அலுவலகத்தில் எவ்வளவு அழுத்தம் இருந்தாலும், வீட்டுச் சூழலில் உள்ள சிக்கல்களையும், குழந்தைகளின் பிரச்னைகளை கையாள்வதிலும், பெற்றோர்கள் இருவருக்கும் சமமான பங்கு இருக்கின்றது. அதற்கு இல்லற வாழ்வில் கணவன் மனைவி இருவருமே புரிதலை மேம்படுத்துவது அவசியம். அப்போது தான் குழந்தையை முழுவதுமாக புரிந்து முடிவெடுக்க முடியும்.

கணவன் மனைவி உறவே, குழந்தையின் சிறப்பான வளர்ச்சிக்கு அடிப்படை

 • முக்கியமாக அனைத்து பெற்றோர்கள் தங்களுக்குள் கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி, அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா என்பதுதான். பொதுவாக கணவன் மனைவி உறவில் பிரச்னைகள் இருக்கும் போது, குழந்தைகளின் பிரச்னைகளை அவர்களால் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள முடியாது.
 • உதாரணத்திற்கு, கணவனுக்கோ, மனைவிக்கோ திருமணத்தை மீறிய உறவு இருக்கும் பட்சத்தில், குழந்தைகள் மீது கவனம் குறைந்துவிடுகின்றது. பெற்றோர்கள் தங்கள் சொந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்வதால், குழந்தைகளின் வாழ்வில் நடக்கும் விஷயங்களை தெரிந்துகொள்ள முடிவதில்லை. சில இடங்களில், தங்களின் தவறை மறைக்க குழந்தைகளை பயன்படுத்திக் கொள்வதும் நடக்கின்றது.
 • கணவன் மனைவி தாம்பத்ய உறவில் பிரச்னை என்றாலும், அதனால் ஏற்படும் மன அழுத்தமும் கோபமும், பெரியளிவில் குழந்தைகளின் மீது வெளிப்படுத்துகிறார்கள். அதனால் முதலில் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்னையை சரி செய்துவிடுவது நல்லது. முடியாத சூழ்நிலையில், பிரிந்து விடுவது நல்லது. சேர்ந்திருந்து சரியாக வாழாமல் குழந்தைகளை வதைப்பது சரியல்ல.
 • குழந்தையை வளர்க்க, பெற்றோர்கள் தங்களுடைய ஆசைகளை தியாகம் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. தங்களுக்கான தரமான நேரத்தை உருவாக்கி,  அன்பையும், காதலையும், காமத்தையும் கொண்டாடப் பழக வேண்டும்.  குழந்தை பிறந்துவிட்டதால் இனி அதெல்லாம் முடியாது என்று கட்டுப்படுத்திக் கொண்டால், இதனால் கோபங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாம் ஒருநாள் அவர்களை அறியாமலேயே பிரச்னையாக வெடிக்கும். அதனால் கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை, தேவைகளை அடையாளம் கண்டு பூர்த்தி செய்வதே, குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது.
 • அதேபோல், பெற்றோர்கள் இருவரும் கலந்து பேசி பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது, இருவருமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். அந்த மகிழ்ச்சி கண்டிப்பாக குடும்பத்தில் எப்போதும் பிரதிபலிக்கும்.
 • சரியான கணவன் மனைவியாக இல்லாவிட்டாலும், சரியான அப்பா அம்மாவாக இருக்க முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியமில்லாத, மகிழ்ச்சியற்ற கணவன் மனைவி உறவு என்பது குழந்தைகளின் உடல்/மனவளர்ச்சிக்கு எந்த வகையிலும் ஏற்றதல்ல.

பெற்றோரே முன்மாதிரி

 • வீடு, பள்ளி சார்ந்த குழந்தைகளுக்கான தேவைகளை, ஒருவர் மற்றவர் மீது திணிக்காமல், கணவன் மனைவி இருவருமே பகிர்ந்து செய்ய வேண்டும். அதேபோல், குழந்தைகள் தவறு செய்தாலோ, அவர்களுக்கு பிரச்னை என்றாலோ, பெற்றோர்கள் இருவரும் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். குற்றத்தை மற்றவர் மீது சுமத்தாமல், பொறுப்பான பெற்றோராக அந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
 • இன்னும் பழைய காலம் போல அம்மா என்றால் சமையலறை, அப்பா என்றால் அலுவலகம் சென்று வந்து வீட்டில் ரிலாக்ஸாக இருப்பார் என்பதெல்லாம்,  இன்றைய காலத்திற்கு பொருந்தாது. குழந்தைகள் திறமையானவர்களாக, ஆளுமையுடையவர்களாக, வெற்றியாளாராக, நல்ல மனிதராக வரவேண்டும் என்றால், குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அப்பாவிற்கும் பொறுப்பு இருக்கின்றது. அதற்கு தகுந்த சூழலை குடும்பத்தில் உருவாக்குவதே புத்திசாலித்தனம்.
 • முக்கியமாக குழந்தைகள் சார்ந்து முடிவுகள் எடுக்கும் போது கணவன் மனைவி இருவருடைய கருத்துகளின் அடிப்படையிலேயே எடுக்கப்பட வேண்டும். மாற்றுக் கருத்து, வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்டிருந்தாலும் குழந்தையின் நலனை, எதிர்காலத்தை எண்ணி பெற்றோர்கள் சேர்ந்து முடிவு எடுப்பதே தீர்வை நோக்கி பயணிக்க உதவும்.
 • பெற்றோர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் குழந்தைகள் கவனித்துக் கொண்டே வளர்கிறார்கள் என்ற விழிப்புணர்வு, பெற்றோர்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். பேசும் வார்த்தைகள், செயல்கள், கோபம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் முறை, உறவுகளை மதித்தல், பிரச்னைகளை கையாள்வது, மற்றவரை அணுகுவது, அன்பாக இருப்பது, மகிழ்ச்சியை உருவாக்குவது என வாழ்வில் நடக்கும் அத்தனை விஷயங்களுக்கும் பெற்றோர்களே முன்மாதிரி. உதாரணத்திற்கு, அப்பா கோபப்படும் போது பொருட்களை தூக்கி எறிந்தால், குழந்தையும் அதையே பின்பற்றும். அதேபோல், அம்மா பொய் சொன்னால் குழந்தையும் தானாகவே பொய் சொல்ல கற்றுக் கொள்ளும்.
 • கணவன் மனைவியின் ஒவ்வொரு அனுபவங்களிலிருந்தே, குழந்தைகள் தங்களுக்கான வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்கின்றனர். இதைப் பொறுத்தே ஒரு குழந்தை சமூகத்தில், குடும்பத்தில், தன்னிலையில் எப்படி வாழப்போகிறது என்று விஷயம் நிர்யணக்கப்படுகிறது.

                                                                                                                                                                          – ராதா சாகர்

2 Comments

 1. இந்த தலைமுறைக்கு மிகவும் தேவையான பதிவு

  1. Author

   நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g