வெற்றிடமாய் இருக்கும் வீட்டுக்கூரைகளை அழகாக்குங்கள்!

வெற்றிடமாய் இருக்கும் வீட்டுக்கூரைகளை அழகாக்குங்கள்!

இன்று வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, கட்டிய வீட்டை வாங்குவதாக இருந்தாலும் சரி, வீட்டு உள் அலங்கார விஷயங்களில், மக்கள் அதிக அக்கறையும், கவனமும் எடுத்துக் கொள்கிறார்கள். குறிப்பாக, வீட்டு உட்கூரைகளை(சீலிங்) சிரத்தை எடுத்து அழகுபடுத்துவது தற்போது டிரெண்டாகி இருக்கிறது. இன்டீரியர் டிசைனர்களும், பல்வேறு சீலிங் டிசைன்களை பரிந்துரை செய்கிறார்கள். நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கக்கூடிய சீலிங் டிசைன்கள் பற்றிய விவரங்களை உங்களுக்காக e1life.com விவரிக்கிறது.

“வீடு வாங்கும்போதே வீட்டின் உள் அலங்காரத்துக்கு என்று ஒரு தொகையை ஒதுக்கி வைத்துக்கொள்கின்றனர். தரைகள், சுவர்கள் மற்றும் அறைக்கலன்கள் ஆகியவற்றுக்குச் செலுத்தும் அதே அளவு அக்கறையை உட்கூரையிலும் செலுத்துகின்றனர். அதனால்தான் பெரிய பெரிய ஷோரூம்கள் மற்றும் மால்களில் மட்டுமே காணப்பட்ட அழகிய உட்கூரைகள், இப்போது வீடுகளையும் அழகுபடுத்த ஆரம்பித்திருக்கின்றன. வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் இவ்வகை உட்கூரை அமைக்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருக்கிறது.

பிளாஸ்டர்ஆஃப் பாரிஸ் வகை உட்கூரை தற்போது மிகவும் பிரபலமாக இருக்கிறது. இதில் ஏற்கனவே உள்ள உட்கூரையில் சட்டமிட்டு, அதன் மீது இரும்பு வலை அமைக்கப்படுகிறது. பின்னர், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு அலங்கரிப்படுகிறது. மேலும் அழகுபடுத்த பிளாஸ்டர்ஆஃப் பாரிஸ் மீது, வால் பேப்பர் அல்லது பெயின்ட் பூச்சு பயன்படுத்தப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று நிலைகளாக அல்லது பல அடுக்குகளாக இவற்றைக் கொண்டு வடிவமைக்கலாம். இந்த அடுக்குகளில் மறைவாக விளக்குகள் அமைத்து அழகிய பரிமாணத்தை ஏற்படுத்தலாம்”.

சந்தோஷ், இன்டீரியர் டிசைனர்.

பளபளக்கும் ஃபால்ஸ் சீலிங்!

உத்திரத்துக்கு மேலேயே இரண்டாவது உட்கூரை போல அமைக்கப்படுவதுதான் ஃபால்ஸ் சீலிங் டிசைனில் இருக்கும் ஸ்டைல். பொதுவாக ஃபால்ஸ் சீலிங் என்றதும், பழைய அலுவலகங்களில் காணப்படும் கட்டம் கட்டமான சலிப்பூட்டும் கூரையே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் அந்தக் காலம் மலையேறிவிட்டது. தற்போது வித விதமான, அழகிய, நூதன, கண்ணைக் கவரும் கூரைகள் வந்துவிட்டன. உங்கள் ரசனைக்கேற்ற வடிவில் தேர்வு செய்து, வீட்டில் அமைக்கலாம். இந்த டிசைன்கள் பார்ப்பதற்கு எளிமையாகவும், கவரும் வகையிலும் இருப்பதாலும், விலை குறைவு என்பதாலும் அதிகம் விரும்பப்படுகிறது.

மரம் மற்றும் தெர்மாகோல் சீலிங்!
மரத்தாலான பலகைகளைக் கொண்டு அமைக்கப்படும் உட்கூரைகள் தனித்துவம் வாய்ந்தவை. பார்ப்பதற்கு ஆடம்பரமான தோற்றத்தை இந்த உட்கூரைகளை வழங்கும். இந்த வகை உட்கூரைகள் வரவேற்பு அறைக்கு ஏற்றவையாக இருக்கும். விலை குறைந்த மரப்பலகைகளின் மீது, நல்ல தரமான மரப்பலகைகள் பதித்து, பின் அலங்கார விளக்குகள் அமைக்கப்படுகின்றன. அதே போல, தெர்மோகோல் கொண்டு அமைக்கப்படும் கூரைகள் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும், பயனுள்ளதாக இருக்கும். மிகவும் மலிவான சீலிங் என்பதால், அலுவலகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

வீட்டில் இந்த வகை சீலிங்கை அமைப்பதன் மூலம் வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது. அறைகளின் வெளிச்சமும் அதிகரிக்கிறது. அதுமட்டுமில்லாமல், சீலிங்கில் அழகற்ற முறையில் தொங்கிக்கொண்டிருக்கும் வயர்களை மறைத்து, வீட்டின் அறைகளுக்கு ஒரு நேர்த்தியை வழங்குகிறது.

புதுவரவு சீலிங் டிசைன்கள்!
இன்று ஜன்னல், கபோர்ட்களுக்கு பயன்படுத்தப்படும் பிவிசி போர்டுகளை கொண்டும் சீலிங் அமைப்பது பிரபலமாக இருக்கிறது. இந்த பிவிசி பைப்புகளை வைத்து, நினைத்த சீலிங் டிசைன்களை செய்ய முடியும் என்பதாலும், மலிவானவை என்பதாலும், பராமரிப்பதற்கு எளிதானவை என்பதாலும், மக்கள் இதைப் பெரிதும் விரும்புகிறார்கள்.

அதேபோல, ஜிப்சம் கொண்டு தயாரிக்கப்படும் உட்கூரை அனைவராலும் விரும்பப்படுகிறது. கட்டுப்படியாகும் விலை கொண்ட இது, ஒலி மற்றும் ஈரப்பதத் தடுப்பானாகவும் செயல்படுகிறது. சுலபத்தில் பொருத்தலாம், தீப்பிடிக்கா தன்மை, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பல வடிவங்களில் கிடைக்கும் என்பது இவ்வகை சீலிங்கின் சாதகமான விஷயம்.

சாதக, பாதகங்கள்!
உட்கூரைகளில், ஒன்றோ இரண்டோ ட்யூப் லைட்கள் மாட்டுவதை விட, உயர்ந்த ரக LED விளக்குகள் பலவற்றை மறைவாகவோ வெளிப்படையாகவோ பொருத்தி அறையை அலங்காரமாக்கலாம்.  இவை சுற்றுச்சூழலுக்கும் உகந்தவை, மின்சார செலவும் குறையும். நடுவே ஒய்யாரமாகமாக தொங்கு சரவிளக்கு (chandelier)  கொண்டும் அலங்கரிக்கலாம். கிரிஸ்டல்களால் ஆன சரவிளக்கு என்றால் கூடுதல் சிறப்பு.  அதுமட்டுமில்லாமல், உட்கூரையானது வெப்பக் காப்பாகவும் செயல்படுகின்றது. உட்கூரையின் இடையில் உள்ள இடைவெளியில் உள்ள காற்று, அறையைக் குளுமைப்படுத்துகின்றது. காற்று வெப்பத்தைத் தடுத்து, அதிக ஏசி பயன்பாட்டைத் தவிர்க்கின்றது.

ஆனால், உட்கூரை அமைப்பதால் அறையின் அளவு சிறிதாவதுடன், வேறு சில அசவுகரியங்களும் ஏற்படுகிறது. நுட்பமான வேலை என்பதால், திறன் மிக்கவர்களைக் கொண்டே அமைக்க வேண்டும். இல்லையெனில், கீழே விழ வாய்ப்புள்ளது. பொதுவாக உட்கூரையானது பொருத்தப்பட்ட பின் காய்வதற்கு நாட்கள் ஆகும். குறைவான உயரம் கொண்ட வீடுகளுக்கு உட்கூரை அமைப்பது பொருந்தாது. ஏனெனில் ஒரு அடி அல்லது அதற்கு மேற்பட்ட இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதால் அறையின் உயரத்தை அது குறைத்து விடும். 

– தன்யதீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g