மகிழ்ச்சியான மண வாழ்க்கை வேண்டுமா? இந்த 10 விஷயங்களை கைவிடுங்கள்

மகிழ்ச்சியான மண வாழ்க்கை வேண்டுமா? இந்த 10 விஷயங்களை கைவிடுங்கள்

திருமணம் என்னும் வாழ்நாள் உறவு வெற்றிகரமாக அமைய வேண்டுமானால், அதற்கு தம்பதியர் இருவரும் அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும். ஒரு மரம் வளர்ந்து செழிக்க, நீருற்றி, பாதுகாத்து, பராமரிக்க வேண்டியது எப்படி அவசியமோ, அதுபோல திருமண உறவும் அக்கறையுடன் போஷித்து வளர்க்கப்பட வேண்டிய உறவாகும்.

தம்பதியருக்குள் சரியான எண்ணப் பரிமாற்றம் இல்லாதது, அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகள், மற்றும் நம்பிகையுன்மை என எல்லாமும் சேர்ந்து, தினசரி வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை குலைத்து, விவாகரத்து வரை கொண்டுச் செல்வதைப் பார்க்கிறோம். இதைத் தவிர்த்து, திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்ற, மனப்பூர்வமான முயற்சி தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தது போல, உங்கள் கணவன் அல்லது மனைவியுடனான உறவில், இப்போது மகிழ்ச்சியும் திருப்தியும் குறைந்து வருவதாக உங்களுக்கு தோன்றினால், கீழ்க்கண்ட விஷயங்களை நீங்கள் உடனடியாக நிறுத்தியாக வேண்டும்:


1. துணைவரின் மனதை அறியாமல், அவரின் கருத்தைக் கேட்காமலேயே, நீங்கள் செய்வதை எல்லாம் சரியென்று அவர்கள் ஏற்றுக்கொள்வதாக நினைத்துக்கொள்வது தவறு.

வாழ்க்கைத் துணைவர் என்பதற்காக நாம் நினைப்பதையே அவர்களும் நினைக்க வேண்டும், நாம் செய்வதை அவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தவறான எதிர்ப்பார்ப்பு. உங்களுக்காக அவர்கள் சில விஷயங்களை விட்டுக் கொடுக்கலாம் அல்லது அவர்களின் எண்ணத்தை வெளிப்படுத்த நீங்கள் வாய்ப்பு தராமல் இருந்திருக்கலாம். இதைப் பற்றி யோசிக்காமல், நீங்கள் செய்வதை உங்கள் துணைவர் ஆதரிக்கிறார் என்றோ, ஏற்றுக்கொண்டார் என்றோ கருதுவது தவறு.

ஒவ்வொருவருக்கும் தனித்துவமும், ஒவ்வொரு விஷயம் குறித்து சொந்தக் கருத்துகளும் இருக்கவே செய்யும். அதை நாம் அங்கீகரிக்க வேண்டும். அதை வெளிப்படுத்த அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் அல்லது நீங்களாகவே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து, நீங்கள் சொல்வதையும் செய்வதையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று நீங்களாகவே முடிவுக்கு வருவது, மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு தடையாக மாறிவிடும்.

2. மற்றவர்கள் முன்பாக துணைவரை பற்றித் தவறாக அல்லது குறைகூறி பேசுவது. 

அது ஒரு விருந்தோ அல்லது பிசினஸ் சந்திப்போ அல்லது கடைத்தெருவுக்கு ஒரு நடை பயணமோ, எதுவாக இருந்தாலும், உங்களுக்கிடையிலான பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக பொது இடத்தில் நடந்துகொள்ளுங்கள். கைப்பிடித்து நடந்து செல்லுங்கள். நேருக்கு நேர் பார்த்து புன்னகையுங்கள், தோளைச் சுற்றிக் கையைப் போடுங்கள். எப்போதும், எப்போதுமே உங்கள் துணைவரை பொது இடத்தில் மற்றவர் முன்பாக கிண்டல், கேலி செய்யாதீர்கள். மற்றவர்கள் அதைச் செய்யவும் அனுமதிக்காதீர்.

3. நீங்கள் வாய் திறந்து சொல்லாமலேயே, உங்கள் மனதில் இருப்பதை துணைவர் புரிந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பது.

தம்பதியருக்குள் பரஸ்பர புரிதல் இருக்கும் தான். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள் என்று உங்கள் சரியாக யூகிக்கலாம். இது சாதாரண சூழ்நிலைக்கு ஓரளவு பொருத்தமாக இருக்கலாம். ஆனால், உங்களின் உணர்ச்சி வேகம், அன்றைய நிகழ்வுகள், மற்றவர்களின் நடத்தைகள், இப்படி பல விஷயங்கள், ஒரு குறிப்பிட்ட கணத்தில் உங்களின் நடத்தையை தீர்மானிக்கலாம். அப்படியிருக்கும் போது, உங்கள் துணைவரால் எப்படி நீங்கள் இதைத் தான் நினைக்கிறீர்கள் அல்லது இதைத்தான் விரும்புகிறீர்கள் என்று அறிந்துகொள்ள முடியும்?

 4. பழைய விஷயங்களை எப்போதும் கிளறிக் கொண்டிருப்பது.

வாழ்க்கையில் முடிவுகள் எடுப்பதற்கு, கடந்தகால அனுபவங்களும் தவறுகளும் உதவும். ஆனால், கடந்தகாலம் என்பது மாற்ற முடியாது; முடிந்துவிட்டது. அப்படியிருக்க, கடந்தகாலத்தின் கசப்பான அனுபவங்களை, தவறுகளை, சோகங்களை மீண்டும் மீண்டும் கிளறிக் கொண்டிருப்பது, நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை பாழ்படுத்தும்.

 5. எப்போதும் ஒருவர் மீது ஒருவர் பழி சொல்வது, ‘நீ தான் காரணம்’ என்று குற்றம் கண்டுபிடிப்பது.

தவறுகளுக்கும், கஷ்டங்களுக்கும் எப்போது மற்றவரை சுட்டிக் காட்டுவது, பழிபோடுவது தீர்வாகாது. ‘என் மீது தவறில்லை. நான் எப்போதும் சரியாகத்தான் செய்கிறேன். தவறுகளுக்கெல்லாம் நீ தான் காரணம்,’ என்பது பொதுவாக பிரச்னையை தீர்க்க முடியாதவர்களின் வார்த்தைகளாகத்தான் இருக்கும். இது ஒருவகை தப்பித்தல் உத்தி. இதனால் உறவில் விரிசல் ஏற்படுமே தவிர, மகிழ்ச்சி ஏற்படாது. ஆகவே, இந்த குறைகூறும் பழக்கத்தைக் கட்டாயம் கைவிட வேண்டும்.

6. தவறுகளை மன்னிக்காமல் பொருமிக் கொண்டிருப்பது

பரஸ்பரம் ஒருவர் மற்றவரின் தவறுகள், குறைகள், கோபதாபங்களை மன்னிப்பதற்கு பதிலாக, எப்போதும் பொருமிக் கொண்டும், புலம்பிக் கொண்டும் இருப்பது வாழ்க்கையை சோகமாக்கும். தெரியாமல் தவறு செய்பவர், மீண்டும் மீண்டும் தவறு செய்யப் போவதில்லை. ஏன், நீங்களும் கூட தவறு செய்யலாம். அப்படியிருக்க, எப்போதோ செய்த தவறுகளை நினைவூட்டிக் கொண்டு, எல்லாவற்றுக்கும் அதைத் தொடர்புப்படுத்தி புலம்பிக் கொண்டிருந்தால், நிம்மதியாக வாழ்வதெப்போது?

7. உங்கள் துணைவரை, மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது.

ஒவ்வொருவரும் தனித்துவமானவர். ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகளும், சிறப்பு குணங்களும் இருக்கும். உங்கள் துணைவரும் அவ்வாறே. அதுபோல உங்கள் வாழ்க்கை சூழலும் மற்ற தம்பதியரிடம் இருந்து வேறுபட்டிருக்கலாம். அப்படி இருக்கும்போது, உங்கள் துணைவரை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது எப்படி சரியாக இருக்கும்? இது முற்றிலும் தவறான அணுகுமுறை. இதனால் மனக்கசப்பும், சலிப்பும் ஏற்பட்டு உறவு பலவீனமடையும். ஆகவே, எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு, உங்கள் துணைவரை பேசுவதைத் தவிருங்கள்.

8. எப்போதும் உங்களை பற்றியே சிந்திப்பது, உங்கள் சுதந்திரத்தைப் பற்றி மட்டுமே கவலைக் கொள்வது.

திருமண வாழ்க்கை என்பது ஒரு வாழ்நாள் கமிட்மென்ட்.  ஒரு குடும்பத்தை நிர்மாணிக்கும் இந்த வாழ்க்கை பல பொறுப்புகள் சேர்ந்தது. இந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற, பரஸ்பர புரிதலும், விட்டுக்கொடுத்தலும் தேவைபபடுகிறது. இதற்காக நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்தை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கலாம். இதில் இழப்பு ஒன்றுமல்ல. திருமணத்துக்கு முன்பு இருந்தபடியே இப்போதும் கட்டுப்பாடற்ற சுதந்திரத்துடன் இருக்க வேண்டுமென்று நினைப்பது நடைமுறைக்கு பொருந்தாது. திருமண வாழ்க்கை என்பது ஒரு பரிணாம வளர்ச்சி. இதற்கேற்ப நீங்கள் தான் உங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டும்.

9. உங்கள் துணைவரை, அவரின் இயல்புகளுடன் அப்படியே ஏற்றுக்கொள்ளாத மனநிலை.

திருமணம் ஆனதாலேயே ஒருவர் தனது இயல்பை முற்றிலும் மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. சில விஷயங்களை விட்டுக் கொடுக்கலாம், அனுசரித்து நடக்கலாம். அதே நேரத்தில் திருமணத்துக்கு பிறகு, தனது இயல்பான குணங்களையும், ஆர்வங்களையும் உடனடியாக அல்லது முற்றிலும் மாற்றிக்கொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பது தவறு. இது நல்லுறவுக்கு உதவாது.

மேலும், ஒருவரது பலவீனம் அல்லது அவரது உணர்ச்சிகளை தூண்டும் விஷயங்களை, மற்றவர் மதிப்பது நல்ல உறவுக்கு அடையாளம். உதாரணமாக கணவருக்கு அவரது தாயைப் பற்றிய விமர்சனத்தை பொறுத்துக்கொள்ள  முடியாமல் இருக்கலாம். அல்லது உடல் எடையைக் குறைக்க எவ்வளவு முயன்றும் மனைவியால் முடியாமல் போகலாம். இதையெல்லாம் கிண்டலாக, பலவீனமாக கொள்ள வேண்டாம். இந்த விஷயங்களில் அடுத்தவருக்கு எப்படி உதவுவது என்பதைப் பற்றிச் சிந்திப்பது உறவுக்கு பாலம் அமைக்கும்.

10. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொறுப்பில்லாமல், துணைவரிடம் நேர்மையற்று இருப்பது.

தற்காலத்தில், எல்லாமே விலைக்கு வாங்கும் சரக்காகிவிட்ட நிலையில், தம்பதியினருக்குள் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு, பண விவகாரங்களும் ஒரு காரணமாக இருக்கிறது.  வருமானத்தை குடும்பத்துக்காக செலவிடுவதில் இருவருக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளது. அப்படியில்லாமல், என்னுடைய தேவைக்கு எடுத்துக்கொண்டு தான் குடும்பத்திற்கு செலவிடுவேன் என்பதும், தேவையற்ற அல்லது தவறான விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்துவிட்டு, அதை மறைக்க துணைவரிடம் பொய்கள் சொல்வது, ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் என்று தொடர்ந்து செய்வது, துணவருக்கு தெரியாமல் கடன்கள் வாங்குவது என, பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டால், அது மணவாழ்வின் ஒவ்வொரு நாளையும் பெருந்துயரம் ஆக்கிவிடும்.

மணவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள தம்பதியர் இருவரும், அந்த உறவு மகிழ்ச்சிகரமானதாக அமைய ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் பங்கெடுக்க வேண்டும். திருமண வாழ்க்கையின் வெற்றி என்பது ஒரே நாளில் நடந்துவிடாது: அதற்கு காலமும், முயற்சியும், பரஸ்பர பாராட்டுகளும் தேவைப்படுகின்றது.

 – செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g