கிரெடிட் கார்டு கடனை கையாள்வது எப்படி?

கடன் வாங்காமல் வாழ வேண்டும் என்று எவ்வளவு தான்  திட்டமிட்டாலும், இன்றைய நவீன வாழ்க்கை முறை பல விதங்களில் நம்மை கடனில் சிக்க வைத்துவிடுகிறது.  அதில் ஒன்று தான் கிரெடிட் கார்டு கடன். எப்போது அதை பயன்படுத்த வேண்டும், எவ்வாறு அந்த கடனை  கட்டுப்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.. கிரெடிட் காட்டு கடனை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை கூறுகிறார்,  தனியார் வங்கியின் துணை மேலாளர்  ராஜா ரெங்கராஜ்.
ராஜா ரெங்கராஜ்

இன்றைக்கு கடன் வாங்குவது மிகவும் சுலபமாகிவிட்டது. நம்மை கடனாளியாக்குவதற்கு வங்கிகளும், நிறுவனங்களும் போட்டிப் போட்டு வாங்க முயற்சி செய்கின்றனர். அக்கம் பக்கத்தில் கடனுக்கு 100 அல்லது 200 ரூபாய் வாங்குவதில் தொடங்கி கிரெடிட் கார்டு கடன், கார் லோன், நகை கடன், பர்சனல் லோன், வீட்டுக் கடன் என  இன்று அவசியத்திற்காக மட்டுமின்றி,  அநாவசியமாகவும் கடன் வாங்க நாம் தயங்குவதில்லை.

பொதுவாக கடன் வாங்கும் போது, அடுத்து சில மாதங்களில் கட்டிவிடலாம் என்று எண்ணியே வாங்குகிறோம். ஆனால் சரியான திட்டமிடல் இன்றி, இறுதியில் கடன் சுமை அதிகமாகி மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். இதுவே சிலரை தற்கொலை வரை  கொண்டு சென்றுவிடுகின்றது. எவ்வளவு தான் சம்பாதித்தாலும், பணத்தை சரியாக நிர்வாகம் செய்ய தெரியவில்லை என்றால் கடனில் மூழ்க வேண்டிய சூழலே நேரும்.

தேவையுள்ள கடன் /தேவையில்லாத கடன்

கிரடிட் கார்டை தேவைகேற்ப பயன்படுத்துவதற்கும் , ஆசைகளை நிறைவேற்ற கணக்கில்லாமல்  பயன்படுத்துவதற்கும்  வித்தியாசம் இருக்கின்றது. எல்லா கடனும் கெட்டது என்று சொல்லவிட முடியாது. நிதி தேவையை பொறுத்து தீர்மானிக்க வேண்டும். உதாரணத்திற்கு, அவசர நேரத்தில் ரொக்கமாக பணம் கையில் இல்லாத போது  கிரெடிட் கார்டை  பயன்படுத்தலாம். மற்றும் ஒரு மாதத்தில் நம்மால் எவ்வளவு தொகை செலுத்த முடியுமோ, அதை கணக்கிட்டு கார்டை கொண்டு பொருட்கள் வாங்கலாம்.

ஏற்கனவே கிரடிட் கார்ட் தொகையை நிலுவைவில் வைத்துக் கொண்டே,   இன்னொரு காரோ, பைக்கோ வாங்குவது அல்லது சக்திக்கு மீறிய ஆடம்பர பொருட்களை வாங்குவது தேவையில்லத கடன். இது மென்மேலும் கடன் தொகையை அதிகரித்துக் கொண்டே போகும்.   மேலும் கிரெடிட் கார்டு மூலம் மிகையாக செலவு செய்வதால்,  நாளைடைவில் பெரிய கடனாளியாக அது வழிவகுக்கும்.

தவணை முறையாக மாற்றிக் கொள்ளுங்கள்

 இன்று அதிகமானோர் கிரெடிட் கார்டு கடனில் மாட்டிக் கொள்கின்றனர். காரணம் கிரெடிட் கார்டை  தேடி வந்து கொடுக்க, பல தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இருக்கின்றன. இப்போதெல்லாம் பொருட்கள் வாங்கும் போது, கடைகளில் கிரெடிட் கார்டையே அதிகம்  பயன்படுத்துகிறோம். அதாவது நாம் ஒவ்வொரு பொருளையும் கடனாக வாங்குகிறோம் என்பதே அதன் பொருள். மேலும் கிரெடிட் கார்டு வாங்க ஆர்வப்படும் எல்லோரும், அதன் விதிமுறைகள் குறித்து முழு தகவல்களையும் அறிந்து கொள்வதில்லை. மேலோட்டமான தகவல்களை மட்டும் கேட்டுக் கொண்டு, பின்னாளில் சிக்கல் வரும்போது வழிகாட்டி இல்லாமல் சிரமப்படுகிறோம்.

உதாரணத்திற்கு, குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் கிரெடிட் கார்டு தொகையை செலுத்தாவிட்டால், அந்த நிறுவனம் எவ்வளவு வட்டியை கூட்டுகிறது, தொடர்ந்து செலுத்தாமல் போகும் போது வட்டி, கூடுதல் வட்டி, அபராதம், ஓவர் லிமிட் கட்டணம் எல்லாம் சேர்ந்து எவ்வளவாக கூடுகின்றது போன்ற எந்த  தகவலும் நம் கவனத்திற்கு வருவதில்லை.  மற்ற கடன்களை ஒப்பிடும் போது, கிரெடிட் கார்டில் அதிக வட்டி வசூலிப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

  • கிரெடிட் கார்டு கடனை, கெடு தேதிக்குள்  செலுத்திவிடுவது நல்லது. ஒருவேளை, அந்த தேதியில் செலுத்த முடியவில்லை என்றால், அதன் பின் கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
  • மேலும் கடனை செலுத்த முடியாமல் தொகை லட்சக்கணக்கில் பெருகிவிட்டது என்றால், வங்கியில் பேசி  தவணையாக (இ.எம். ஐ) மாற்றிக் கொள்ளுங்கள். அல்லது அந்த தொகையை பர்சனல் லோனாக மாற்றிக் கொள்ளலாம்.
  • பொதுவாக கிரெடிட் கார்டின் வட்டி விகிதம் 36 % என்றால், தவணையாக மாற்றும் போது 15%  அல்லது 16% ஆகின்றது. வட்டி பிரச்னை குறைவதுடன், தவணையாக செலுத்துவது எளிதாக இருக்கும்.
  • சில வங்கிகள், நிதி நிறுவனங்கள் முன்கூட்டியே முழுத் தவணையையும் கட்டி, கணக்கு முடிக்க நினைக்கும் போது, அபராதமாக சில தொகையை வசூலிக்கின்றன. அதை பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு மாதத் தவணையாக மாற்றலாம்.
  • தவணையாக செலுத்தும் போது, உங்களுக்கு ஏற்ற தவணை முறையை திட்டமிட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக வட்டி பற்றிய விவரங்களை முன் கூட்டியே விசாரித்துவிட்டு, மொத்தத் தொகையை கணக்கிட்டு தவணையாக பிரித்துக் கொள்ளுங்கள்.

நிதியை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்

கிரடிட் கார்டில், ‘லிமிட்’ தொகை அதிகமாக இருக்கையில் நாம் எப்போதும் செலவு செய்ய தயங்குவதில்லை. யோசிக்காமல் கார்டை நீட்டுவதை பெருமையாக வேறு நினைக்கின்றோம். ஆனால் கடன் வசதி இருக்கிறது என்று கட்டுப்பாடில்லாமல் இருப்பதால், பாதிப்புகளை நாம் தான் சந்தித்தாக வேண்டும் . கடனில்லாமல் இருக்க வேண்டும் என்பதே பலரின் ஆசை. ஆனால் அதை கடைப்பிடிப்பதற்கு, நமக்கு நாமே விதிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.

  • பெரும்பாலும் உங்களுடைய வாழ்க்கைமுறையை கடனில்லா தேர்வாக அமைத்துக் கொள்ளுங்கள். கடைகளுக்கு அல்லது வெளியே செல்லும் போது, கையில் ரொக்கமாக பணத்தையும் கொஞ்சம் எடுத்துச் செல்லுங்கள். பணத்தை நேரடியாக கையாளும் போது, இயல்பாகவே ஒரு கட்டுக்குள் வரும்.
  • கடன் வாங்குவதையும், கடனை அடைக்க மேலும் கடன் வாங்குவதையும் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடனை அடைக்கும் வரை பொறுமையாக திட்டமிட்டு, அடுத்த கடனை வாங்க முயற்சி செய்யுங்கள். அல்லது ஒரு கடனை முடித்துவிட்டு தான், அடுத்ததை வாங்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கப் பழகுங்கள்.
  • எல்லா வங்கிகளிலும் கிரடிட் கார்டு தருகிறார்கள் என்று மூன்று நான்கு கார்டுகள் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். உங்களின் வருமானம், நிதி நிலைமையை பொறுத்து கிரடிட் கார்டுகளை வாங்குங்கள். ஒன்று அல்லது இரண்டு கார்டு இருந்தால், திட்டமிட்டு பயன்படுத்த வசதியாக இருக்கும்.

பட்ஜெட் ப்ளானிங்

கிரடிட் கார்டு கடனை கட்டுக்குள் வைப்பதற்கு பட்ஜெட் ப்ளானிங் பெரிய அளவில் உதவுகின்றது. எப்போதுமே உங்கள் வருவாயின் முதல் செலவாக கடன் தொகையை திருப்பி செலுத்துவதும், சேமிப்பு செய்வதும் இருக்கட்டும். வருமானத்தை எப்படி திறம்பட செலவு செய்வது என பட்ஜெட்டை வகுத்துக் கொள்வதன் மூலம், கடன் தொகையை சீராக செலுத்த முடியும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பட்ஜெட்டை திட்டமிடுவது, குடும்பத்தின் நிதி நிர்வாகத்தை சிறப்பாக வழிநடத்த உதவும்.

எப்போதுமே உங்கள் பட்ஜெட்டில் செலவுகளுக்கு என்று ஒரு தொகையை ஒதுக்கிக் கொண்டு, அதற்குள் வீட்டுச் செலவு, அடிப்படை தேவைகளுக்கான செலவு, அவுட்டிங்கிற்கான செலவுகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். தேவைப்படும் நேரங்களில் மட்டும், கிரடிட் கார்டை பயன்படுத்துங்கள். அப்படியே பயன்படுத்தினாலும் அந்தத் தொகையை நிலுவையில் வைக்காமல் கட்டி முடித்துவிடுங்கள். தொகையை கட்டி முடிக்கும் வரை அந்த கார்டை பயன்படுத்துவதை, தவிர்ப்பதே நல்லது.

 – ராதா சாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g