திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்!

திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்!

முதல் வருட திருமண வாழ்க்கையில், கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொள்ள வேண்டும், விட்டுக்கொடுக்கும் மனநிலையை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும், பிரச்னைகளை கையாள தங்களை எப்படியெல்லாம் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான  வழிகளை e1Life.com  விவரிக்கின்றது.  

காதல் திருமணமோ, பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணமோ, எதுவாக இருந்தாலும், முதல் வருடத்தில் துணையின் எதிர்பார்ப்புகளை தெரிந்து கொள்வது மற்றும் அதை நிறைவேற்றுவது என்பது இருவருக்குமே பெரிய சவால். இரண்டு வெவ்வேறு சமூகம், விருப்பு வெறுப்புகள், ஆளுமை, வெவ்வேறு மதிப்பீடுகள் மற்றும் நம்பிக்கைகள் போன்ற பல வித்தியாசங்களோடு தான், ஒரு ஆணும் பெண்ணும்  திருமண வாழ்க்கைக்குள் நுழைகின்றனர். அந்த வித்தியாசங்கள் இயல்பானவை என்றாலும், பல நேரங்களில் புரிதலின்மையால் அது தாம்பத்ய உறவுக்கு தேவைப்படும் அன்பை அசைத்துப் பார்த்துவிடும்.

எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

திருமணத்தின் முதல் ஆண்டு என்பது தாம்பத்ய வாழ்வின் பொற்காலம் எனலாம். புதிய உறவின் மயக்கம், ஹார்மோன்களின் விளையாட்டு என குதூகலமாக இருப்பீர்கள். ஒருவர் மற்றவரை உணர்வு ரீதியாக முழுமையாக சார்ந்திருப்பதால், பல வகையான எதிர்பார்ப்புகள் இக்காலகட்டத்தில் உருவாகும்.  வாரம் ஒருமுறை வெளியே செல்ல வேண்டுமென்பதில் தொடங்கி, வீட்டு வேலைகளை பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்பது வரை, அந்த எதிர்பார்ப்புகள் பல விதங்களில் இருக்கலாம்.  அவற்றை பேசினால் மட்டுமே துணைக்குப் புரியும். சிலர் ’நீயாக புரிந்து கொள்வாய் என நினைத்தேன், போகப் போக சரியாகிவிடுவாய் என இருந்தேன்’ என்றெல்லாம் பின்னால் புலம்புவார்கள். அதனால் சின்னச் சின்ன ஆசைகள் தொடங்கி பெரிய பெரிய எதிர்பார்ப்புகள் வரை, உங்கள் துணையின் மனதில் என்ன இருக்கிறது என தெளிவாக தெரிந்து முயலுங்கள்.

சேர்ந்திருக்கும் தருணங்களில் துணையை பேசவிட்டு கேளுங்கள். நீங்களும் சொல்லுங்கள்.  திருமண வாழ்க்கை பழகத் தொடங்கும் போது, செக்ஸ் ஒரு யதார்த்தமாக மாறும் போது,  விருப்பங்களை மீறி கடமைகள் பெருகும் போது, எதிர்பார்ப்புகளை எல்லா நேரமும் பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவாகும். அதனால் இருவரும் மனம்விட்டுப் பேச வேண்டும். எதை நிறைவேற்ற முடியும்…எப்போது சாத்தியம் என கலந்துரையாடும் போது தேவையற்ற எதிர்பார்ப்புகளால் மனக்கசப்புகள் உருவாவது தடுக்கப்பட்டு, அன்பு பெருக வாய்ப்பு உண்டாகும்.

வெளிப்படைத்தன்மை அவசியம்

திருமண உறவை ஆரோக்கியமான மற்றும் வெற்றிகரமானதாக ஆக்குவதற்கு,  கணவன் மனைவி இருவரும் வெளிப்படையாக பழகுவது அவசியம். ஆரம்பத்தில் கணவனுக்காக, மனைவிக்காக செய்கிறேன் என்று தங்களை வருத்திக் கொண்டு வேண்டா வெறுப்பாக  செய்து, பிறகு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அதுவே கோபமாக வெளிப்படும். பொதுவாக மணமான புதிது என்பதால், தம்பதியர் இருவருமே தமது உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்தாமல், நிறையவே ’அட்ஜஸ்ட்’ செய்து கொள்வர். சில பெண்கள் கணவரை எந்த வேலையும் செய்யவிடாமல், தானே இழுத்துப் போட்டு செய்வார்கள். சில ஆண்கள் மனைவி என்ன கேட்டாலும் செய்து முடிப்பார்கள். முடியாது என்பதையோ, பிடிக்கவில்லை என்பதையோ இந்த காலகட்டத்தில் அவர்கள் சொல்வதில்லை. ஆனால், இப்படியே இயல்பிற்கு அப்பாற்பட்டு வாழ்க்கை முழுவதும் நடித்துக் கொண்டிருக்க முடியாது. இதைத் தவிர்க்க, ‘எனக்கு வேண்டாம்’ ‘பிடிக்கவில்லை’ ‘NO’  போன்ற வார்த்தைகளை தயங்காமல் துணையிடம் சொல்லிவிடுவது நல்லது.

மேலும் வீட்டில் செய்ய வேண்டிய காரியங்களை, அதாவது சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, பணத்தை நிர்வகிப்பது, பொருட்களை வாங்குவது என, கணவன் மனைவி இருவருக்கேற்ற மாதிரி பொறுப்புகளை பிரித்துக் கொள்ளலாம். சிலருக்கு கடைகளுக்கு செல்ல பிடிக்காது, சிலருக்கு பணத்தை நிர்வகிப்பதில் குழப்பம் இருக்கும்.  அவரவர் விருப்பத்தை அறிந்து செய்வதால். சின்ன சின்ன விஷயங்களுக்காக ஏற்படக்கூடிய விவாதங்கள் குறையும்.

பிரச்னைகளை எதிர்கொள்ள தயாராகுங்கள்

கணவன் மனைவி உறவில் சண்டைகள், வாக்குவாதங்கள் வருவது இயல்பானது. முதல் வருடம் என்பதால் எதிர்பாராமல் பிரச்னைகள் அல்லது சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட கருத்து மோதல்கள் வரலாம். கணவனோ அல்லது மனைவியோ திருமணத்திற்கு முன் தெரிந்த நபராகவே இருந்தாலும்,  திருமணத்திற்கு பிறகு இணைந்து வாழும் இருவரது குணங்கள், நம்பிக்கைகள் சார்ந்து  கருத்து வேறுபாடுகள் உருவாகும். அதனால் தம்பதிகள்  இருவருக்குள்ளும்  எவ்வளவு சண்டைகள் வந்தாலும், அதை சாந்தப்படுத்தும் சில யுக்திகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு, சண்டையை வளர்க்காமல் எழுந்து செல்வது, துணைக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்வது, துணையின் கோபத்தை குறைக்க ஏதாவது பாடல்கள் ஒலிக்கச் செய்வது, துணையை ஆச்சரியப்படுத்துவது போன்ற யுக்திகளை கொண்டு பிரச்னையை திசைமாற்ற முயற்சிக்கலாம். ஓரிரு நாட்களில் சரியாகும் பிரச்னையை, வருடக்கணக்கில் மாற்றாமல் இருப்பது, கணவன் மனைவி உறவுக்குள் இடைவெளியை அதிகரிக்கவே உதவும்.

குடும்பத்தினரை பற்றி குறை கூறாதீர்கள்

திருமணமான முதல் ஆண்டில் பெரும்பாலும் மோதல் ஏற்படுவது, கணவன் அல்லது மனைவியின் பெற்றோர்களை, உறவுகளை பற்றி குறைக்கூறுவதால் தான். இவ்வாறு தேவையில்லாமல் அடிக்கடி பேசி சண்டையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அதேபோல், இருவீட்டாரின் உறவுகள் தவறே செய்திருந்தாலும், மரியாதை குறைவாக பேசாதீர்கள். மேலும் திருமணத்தன்று நடந்த பழைய பிரச்னைகளை அடிக்கடி விவாதிக்காதீர்கள். இது கணவன் அல்லது மனைவியை பற்றிய எதிர்மறை எண்ணங்களை ஆரம்பத்திலேயே உருவாக்கும். கிடைக்கும் நேரங்களில் மற்றவர்களை பற்றி பேசி வீணடிக்காமல், உங்கள் இருவருக்குள்ளும் பிணைப்பை அதிகரிக்கும் விஷயங்களை பேசி மகிழுங்கள்.

அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்

திருமணமானவுடன் ஒரு ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும், ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டளைகள் போடாமல், உங்கள் துணையின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் என்ன, குணம் என்ன, அவர்கள் எப்படிப்பட்ட ஆளுமை, அவர்களின் கருத்துகள் மற்றும் நம்பிக்கைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒருவருக்கு  ஏற்ற மாதிரி மற்றவரை மாற சொல்லி வற்புறுத்த வேண்டாம். அன்பும் புரிதலும் தானே அதை உருவாக்கும்.

இவ்வளவு நாட்கள் பழகிய வாழ்க்கைமுறையை திடீரென யாராலும் மாற்றிக் கொள்ள முடியாது. கணவனோ, மனைவியோ தங்களின் எண்ணங்களை மெல்ல மெல்ல புரிய வைக்க முயலுங்கள். ஏன்னென்றால் நாம் ஒரு விஷயத்தை செய்ய சொல்வது வேறு, திணிப்பது வேறு. முதலில் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள், அதன்பிறகு அன்பாக சொல்லி மாற்ற முயற்சி செய்யுங்கள்.

ஐ லவ் யூ சொல்லுங்கள்

எந்த சூழ்நிலைகளிலும் உங்களின் நேசத்தை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள். கணவன் அல்லது மனைவியின் உறவு, தங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். கைகோர்த்துக் கொள்வதும், தோள் மீது சாய்ந்து கொள்வதும், கட்டியணைப்பதும், முத்தமிடுவதும் ஆகியவை மூலம்,  கணவன் மனைவிக்குள் நெருக்கமும், பிணைப்பும் அதிகரிக்கும். அடிக்கடி ஐ லவ் யூ சொல்லுங்கள். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், துணையை யாரிடமும் விட்டுக்கொடுத்து பேசாதீர்கள். துணைக்கு பிடித்த வகையில் அன்பை வெளிப்படுத்துங்கள்.

புரிதலோடு இணைந்த தாம்பத்ய உறவு

முதலாம் ஆண்டில்  தம்பதிகளுக்களுக்குள் நெருக்கத்தை உருவாக்குதிலும், வெறுப்பை  உருவாக்குவதிலும் உடலுறவிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. கணவன் மனைவி இருவரின் சம்மதத்தின் அடிப்படையிலேயே தாம்பத்யம் நிகழ வேண்டும்.  இந்த உறவில் வற்புறுத்தலோ, ஆதிக்கமோ செலுத்தினால், நிச்சயமாக கணவன் மனைவி உறவில் அடிக்கடி சிக்கல் ஏற்படும். துணையின் தேவை, விருப்பங்களை தெரிந்து கொள்ளுங்கள். இருவரும் இணைந்து அனுபவிக்கும் இன்பமே உடலுறவு. ஆரோக்கியமான மனநிலையுடன், மகிழ்ச்சியாக தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது, தம்பதியர் இருவருக்குள்ளும் ஒரு பரஸ்பர பிணைப்பு அதிகரிக்கும்.

மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்குங்கள்

கணவன் மனைவி ஒன்றாக இருக்கும் நேரங்களில், மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை பேசுவதன் மூலமும், செயல்களை செய்வதன் மூலமும் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கலாம்.  வீட்டில் இருந்து கொண்டு அலுவலக வேலைகளைப் பார்ப்பது, எப்போதும் ஸ்மார்ட் போனுக்குள் அலைபாய்வது, டிவி பார்ப்பது என தனிமையில் இனிமை காணாதீர்கள். வலுவான உறவிற்கு அஸ்திவாரம் குவாலிட்டி டைம்.

கணவன் அல்லது மனைவி செய்யும் வேலைகளில் பங்கெடுத்துக் கொள்வது, ஒருவர் மற்றவரை அழகுப்படுத்திக் கொள்ள உதவுவது, ரம்மியமான இடங்களுக்கு செல்வது, சேர்ந்து விளையாடுவது, பிடித்த உணவை கணவனோ மனைவியோ சமைத்துக் கொடுப்பது, ஈகோ இல்லாமல் மனம் விட்டு பேசுவது, இன்ப அதிர்ச்சி கொடுப்பது, அன்பளிப்பு கொடுப்பது என, முதல் வருட திருமண வாழ்வில் இனிமையான தருணங்களை உருவாக்குங்கள்.  என்றும் அழியா நினைவுகளாக நம் மனதில் இடம்பெறட்டும்.

                                                                                                                                                                                                             -ராதா சாகர்

4 Comments

  1. புாிதல் வேண்டும் என்பதை இதைவிட யாரும் அழகாய் சொல்லிவிட முடியாது….அருமை ராதா சாகா்…

  2. மிக அருமையான தகவலும் அறிவுரையும்.

    1. Author

      உங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து e1life.com பாருங்கள்.. பல நல்ல தகவல்கள் வந்து கொண்டே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g