திருமணத்துக்கு முன்பு கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்

திருமணத்துக்கு முன்பு கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்

பொதுவாக, திருமண வாழ்க்கை எப்படி இருக்குமோ, திருமணத்துக்கு பிறகு எப்படி வாழ்க்கை மாறுமோ என்று அதிகம் யோசிக்கும் நாம், திருமணத்துக்கு முன்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி யோசிப்பதில்லை. இதுவரை உங்களுடையதாக மட்டுமே இருந்த வாழ்க்கையை, முற்றிலும் வேறு சூழ்நிலையில் இருந்து வருபவருடன் பகிர்ந்து கொள்ளும் திருமண வாழ்க்கை அற்புதமானது. இதில் ஒருவர் மற்றொருவருக்காக வாழவும், உறவுப் பிணைப்பு வலுப்படவும், பரஸ்பரம் சேர்ந்து முடிவெடுக்கவும், சில விட்டுக் கொடுத்தல்களும், சமரசங்களும் தேவைப்படுகிறது. உங்களுடைய கனவு திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைய, சில விஷயங்களில் முன்கூட்டியே கவனம் செலுத்துவது அவசியம்.

எண்ணப் பரிமாற்றமே, எல்லாவற்றுக்கும் அடிப்படை!

எந்த உறவாக இருந்தாலும், அவ்வப்போது வாக்குவாதங்களும் சண்டைகளும் வரத்தான் செய்யும். சரியான எண்ணப் பரிமாற்றமும், சமரசமும் தான், இருவருக்கிடையில் விஷயங்களை சிறப்பாக்க முடியும். ஆகவே, எவ்வித தப்பெண்ணங்களும், தவறான புரிதல்களும் ஏற்படாமல் தடுக்க, தம்பதியர் இருவரும் தங்களுக்கிடையில் எண்ணங்களையும் உணர்வுகளையும் தடையற்று, வெளிப்படையாக பரிமாறிக்கொள்ளும் நிலை இருக்க வேண்டும். ஆகவே, திருமணத்துக்கு முன்பாகவே, நீங்கள் உங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வரப்போகிறவருடன் சரியான எண்ணப் பரிமாற்றத்தை ஏற்படுத்துவது முக்கியம்.

விட்டுக்கொடுக்க முடியாதவற்றை முன்பே சொல்லிவிடுங்கள்

உங்களின் வேலை அல்லது உங்களின் பிற முன்னுரிமைகள், உங்களால் ஏஎற்றுக்கொள்ள முடியாத விஷயங்கள் போன்ற, நீங்கள் சமரசம் செய்துகொள்ள முடியாத விஷயங்களை பற்றி, உறவின் தொடக்கத்திலேயே வெளிப்படையாக சொல்லி விடுவது மிகவும் முக்கியம். இதற்கு உங்கள் எதிர்கால துணைவரும் மதிப்பளிக்க வேண்டும். அதேபோல உங்கள் துணைவரின் முன்னுரிமைகளையும், விருப்பு வெறுப்புகளையும் நீங்கள் மதிக்க வேண்டும். இந்த சின்ன விஷயங்கள், உங்களுகிடையிலான உறவு நாளுக்கு நாள் நெருக்கமாகவும் வலுப்பெறவும் உதவுவதுடன், பரஸ்பரம் புரிந்துகொள்ளவும் உதவும். ஆகவே இந்த விஷயங்கள் குறித்து முன்பே நேரில் பேசிவிடுவது நல்லது.

நிதி நிலைமையை பகிர்ந்துகொள்ளுங்கள்

உங்களுடைய நிதி நிலைமையை, உங்களின் வருமானம், தேவைகள், செலவுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் பற்றி, எதிர்கால துணைவரிடம் பகிர்ந்துகொள்வது நல்லது. உங்களின் நிலையை முன்பே தெரிந்து கொண்டுவிட்டால், தேவையற்ற எதிர்பார்ப்புகளுக்கும், கணக்குகளுக்கும் அவர் இடம் தரமாட்டார். தற்காலத்தில் திருமண முறிவுகளுக்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக நிதியை கையாள்வதில் ஏற்படும் பிரச்னைகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்கால குடும்பத்தினரை சந்தியுங்கள்

நீங்கள் திருமணம் செய்துகொள்ளப் போகும் நபரின் குடும்பம், முன்பே பழகாத, அறிமுகமில்லாத குடும்பமாக இருந்தால், அவர்களின் பழக்கவழக்கங்கள், அன்றாட செயல்பாடுகள் இவற்றை அறிந்துகொள்ள, அவர்களை முன்பே நேரில் சந்திப்பது முக்கியமாகும். மேலும், அவர்கள் உங்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் எவை, நீங்கள் எப்படிபட்டவர் என்பதையெல்லாம் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள இச்சந்திப்பு உதவும். திருமணத்துக்கு பிறகு நீங்கள், உங்கள் துணைவருடன் ஒன்றாக வாழப்போவது மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தையும் கவனிக்கப் போகிறீர்கள். ஆகவே, முன்பே அவர்களை பற்றித் தெரிந்துகொள்ள, சந்திப்பது நல்லது.

ஒன்றாக ஷாப்பிங் செய்யலாம்

எதிர்கால தம்பதியர் இருவரும், ஒன்றாக ஷாப்பிங் செல்வது பல விஷயங்களை இருவருக்கும் புரிய வைக்கும். துணைவரின் ரசனை, விருப்பங்கள், பிடிக்காதவை, எவ்வளவு செலவு செய்வார்கள் என்பதையெல்லாம், ஓரளவு இதிலேயே தெரிந்துகொள்ள முடியும். அதேபோல, கல்யாணத்துக்கு தேவையான உடைகள், பொருட்கள் வாங்கும் போதும், துணைவரின் குடும்பத்தினருடன் நீங்களும் செல்ல முடிந்தால், உங்களுக்காக வாங்கும் பொருட்களை பிடித்ததாகவும், பொருத்தமானதாகவும் வாங்க முடியும்.

துணைவரின் நண்பர்களை சந்தியுங்கள்

உனது நண்பர்கள் யாரென்று சொல்; உன்னைப் பற்றி நான் சொல்கிறேன் என்பது, எதிர்கால வாழ்க்கைத் துணைவருக்கும் பொருந்தும். அவரின் நண்பர்களை வைத்தே, அவரின் ஆளுமையையும், குணநலன்களையும் ஓரளவு புரிந்துகொண்டுவிட முடியும். வேலையில், சொந்த வாழ்க்கையில் பொறுப்பானவர்களாக அவரின் நண்பர்கள் இருந்தால், இவரிடமும் அந்த குணங்களை எதிர்பார்க்க முடியும். கட்டுபாடில்லாதவர்களாக, ஒழுக்கக் குறைபாடு கொண்டவர்களாக தெரிந்தால், அவர்களின் தாக்கம் இவரிடமும் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று உணரலாம். ஆகவே, எதிர்கால துணைவரை புரிந்துகொள்ள, அவரின் நண்பர்களை சந்திப்பதும் சிறந்த வழியாகும்.

– செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g