மெட்டர்னிட்டி போட்டோகிராபி: கர்ப்ப காலத்தின் கலை

மெட்டர்னிட்டி போட்டோகிராபி: கர்ப்ப காலத்தின் கலை

மண வாழ்வில் காதலின் பரிசாக கருவுற்றது முதல், பத்து மாதங்கள் உயிரைச் சுமந்து பெற்றெடுப்பதுவரை, மனைவியும் கணவரும் இணைந்து அனுபவிக்கும் வாழ்வின் அற்புதத் தருணங்களை விட்டுவிடுவோமா என்ன?  ‘மெட்டர்னிட்டி போட்டோகிராபி’ தற்போது டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் டிரெண்ட் ஆகிவருகிறது. 

தாய்க்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் இடையே நிலவும் பிணைப்பு விவரணைக்கு அப்பாற்பட்டது. கர்ப்பக்காலம் என்பது ஒருவரது வாழ்க்கையில் மறக்கமுடியாத காலகட்டம். இதனால் தான் , இந்த அற்புதமான தருணங்களை உறைய வைத்து, வாழ்க்கை முழுவதும் கண்டுகளிக்க, புகைப்படங்கள் எடுப்பதை சிறந்த வழியாக தம்பதியினர் கருதுகின்றனர். மேற்கத்திய நாடுகளில் பிரபலமான இந்த டிரெண்டில், இந்திய போட்டோகிராபர்களும் கலக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

கருவைச் சுமக்கும் பெண்ணின் முகத்தில் தனிப்பொலிவையும் அமைதியையும் காண முடியும். குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தாய், தந்தையரின் உணர்வு வெளிப்பாடுகளும், உணர்ச்சிகளும் தனித்துவமானவை. உள்ளிருக்கும் குழந்தைக்கு, இதமாக நேசத்துடன் வயிற்றை மென்மையாக தேய்த்துக் கொடுக்கும் காட்சி அழகானது. அதுபோலவே, மனைவியின் வயிற்றை வியப்புடன் பார்க்கும் கணவரின் பார்வையும்… அதன் பின்னுள்ள உணர்வுகள்…கர்ப்பமடைதல் என்பது அத்தகைய ஒரு அந்தரங்கமான, சக்திமிக்க அதிசயம். இந்த உலகத்துக்குள் ஒரு புத்தம் புதிய நபர் வரப்போவதற்கான அடையாளம் அது. இத்தகைய தருணங்களையே காட்சிப்படுத்தித் தருகிறார்கள் இந்த போட்டோகிராபர்கள்.

சிசுவை தாங்கியிருக்கும் தங்கள் உடலின் மாற்றங்களை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம், இன்றைய பெண்களுக்கு இருக்கிறது. முன்புறமாக துருத்திக்கொண்டு வீங்கியது போல அல்லது பெருத்துக் காணப்படும் வயிறை அழகாக, ஸ்டைலாக வெளிப்படுத்த அவர்கள் தயங்குவதில்லை. விரும்பும் விதத்தில் சௌகரியமான போஸ்களை கொடுக்கலாம். கருத்தரித்த எட்டாவது மாதத்தில் போட்டோ ஷூட் செய்யும் போது, தாய்மையின் அழகு முழுமையாக வெளிப்படுவதுடன், தாயும் சிரமமாக உணரமாட்டார் என்கின்றனர் மெட்டர்னிட்டி புகைப்பட கலைஞர்கள். உங்கள் மெட்டர்னிட்டி போட்டோக்கள் சிறப்பாக அமைய கீழ்க்காணும் யோசனைகளை பின்பற்றலாம்.

வீட்டுக்குள் எடுப்பதே அழகு

தன் வீட்டுக்குள், சவுகரியமாக உணருவாள், தாய். இயல்பான வாழ்க்கை, எதார்த்தமான சூழல், தம்பதியினருக்குள் அன்னியோன்னியம், என அனைத்தையும் வெளிப்படுத்த வீடே சிறந்த லொக்கேஷன். அந்த குடும்பத்துக்குள் இணையப்போகும் குழந்தைக்கு, தான் கருவில் இருக்கும் போது குடும்பம் எப்படி இருந்தது என்பதையும் இப்படங்கள் வெளிப்படுத்தும்.

அவுட்டோரிலும் எடுக்கலாம்

பிரைவசி பாதுகாக்கப்படுவதால், பொதுவாக வீட்டில் அல்லது ஸ்டுடியோவில் எடுப்பதையே பலரும் விரும்புகிறார்களாம். எனினும், பிரைவசி காக்கப்படும் அவுட்டோர் இடங்களில் எடுத்தாலும், இப்புகைப்படங்கள் சிறப்பாக அமையும். உலகுக்கு புதிய உயிரைக் கொண்டுவரப் போகும் தாயின் பேரழகை, இயற்கையான சூழலில், இயற்கை வெளிச்சத்தில் படம்பிடித்தால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா?

உறவுகளை ஹைலைட் செய்ய வேண்டும்

அன்புமயமான வீட்டுக்கு நம்பிக்கையுடன் வரப்போகிறது, ஒரு புதிய உயிர். ஆகவே தாய்மையை முதன்மைபடுத்தும் அதே நேரத்தில், தாய்க்கும் தந்தைக்கும் இடையே இருக்கும் அற்புதமான உறவை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் வேண்டும். மேலும், பிறக்கப் போகும் குழந்தையின் சகோதர சகோதரிகள், கருவுற்றத் தாயுடன் பாசத்தைப் பகிர்ந்துகொள்வதும் பதிவுச் செய்யப்பட வேண்டும். குட்டிநாயோ பூனையோ, செல்லப் பிராணிகள் இருந்தால், அவையும் இடம்பெறுதல் நலம்.

உடைகளிலும் கவனம் தேவை

குழந்தையை பாதுகாத்து வளர்த்துக் கொண்டிருக்கும் வயிற்றை காண்பிப்பதே இந்த ஷூட் அவுட்டின் நோக்கம். அதை மறைக்கத் தேவையில்லை. வயிற்றை வெளிப்படுத்தும் உடைகள், சில்அவுட் காட்சிகள் என திட்டமிடுங்கள். வண்ணங்களை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் தேவை. உதாரணத்துக்கு கணவர் அடர் நிறமென்றால், மனைவி வெளிர் நிறத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அப்போது அந்தப் பிணைப்பு நன்கு வெளிப்படும்.

சரியான போட்டோகிராஃபர்

எல்லாவற்றுக்கும் மேலாக புகைப்படக்கலைஞர், தாய்மையையும், தம்பதியினருக்கிடையிலான பிணைப்பையும், உணர்வுபூர்வமாக புரிந்துகொண்டு, அர்ப்பணிப்புடன் அந்த உணர்வுகளை காட்சிகளாகப் பதிவு செய்யும் போது, அது மறக்கமுடியாத நினைவுகளாக காலத்தில் உறைகிறது. எனவே இதை வெறும் தொழிலாக மட்டும் கருதாமல், உணர்வுகளை புரிந்துகொள்ளும் கலையுணர்வு கொண்ட நபரை கண்டுபிடியுங்கள்.

– செலீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g