மழைக்கால சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்கள்!

மழைக்கால சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்கள்!

மழைக்காலத்தில் பயணிப்பதில் சில சிரமங்கள் இருந்தாலும், இந்தியாவின் அழகை சுற்றிப்பார்க்க சிறந்த காலம் இதுவே. பச்சை பசேல் மலைகள், இதமான காற்று, சுட்டெரிக்காத காலநிலை, ஆப் சீசன் என்பதால் ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா பேக்கேஜ்களில் தள்ளுபடி சலுகைகள் என, மழைக்காலத்தில் பயணிப்பதில் சாதகங்களும் நிறைய உண்டு. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில், சுற்றிப்பார்க்க ஏற்ற சில இடங்களை இங்கே.

கோவா

மழைக்காலத்தில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்களில், கோவாவுக்கே முதலிடம். இயற்கை ஆர்வலர்கள், சாகசப் பிரியர்கள், கடற்கரை காதலர்கள், பார்ட்டி விரும்பிகளுக்கு இது பொருத்தமான இடம். கடற்கரைகளின் நிலமான கோவாவில், மணல் விளையாட்டுகள், மழைத்தூறலில் குதூகலம், அழகிய இடங்களை கண்டுகளிப்பது, தனித்தன்மையான உணவுகள் என, மழைக்காலத்தில் கோவா உங்களுக்கு களிப்பூட்டும்.

பிரமிப்பூட்டும் தூத் சாகர் நீர்வீழ்ச்சி, அழகிய அகுவாடா கோட்டை, டால்பின் ஷோ, குரூஸ் கப்பல் பயணம், பாகா பீச்சில் நீர் விளையாட்டுகள், கேளிக்கைக்கு காசினோக்கள், பறவைப் பார்த்தல், டிரெக்கிங், ஷாப்பிங் என, கோவாவில் உங்களை கவரும் இடங்கள் உள்ளன. சென்னையில் இருந்து, 910 கி.மீ., தொலைவில் இருக்கும் கோவாவுக்கு சாலை வழியாகவும், ரயில் மற்றும் விமானத்திலும் பயணிக்கலாம்.

அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

அடர்ந்த காடுகள், பளிங்கு நீர் கடல், வெள்ளி மணல் கடற்கரைகள், மலைகள், பிரமிப்பூட்டும் இயற்கை அழகு, பழங்குடி மக்களின் வாழ்க்கை, இவை எல்லாவற்றையும் ஒருங்கே காண வழி செய்கின்றது, 570 தீவுகள் அடங்கிய இந்த யூனியன் பிரதேசம். இயற்கை ஆர்வலர்கள், சாகசப் பிரியர்கள், கடற்கரை காதலர்களுக்கு மிகப் பொருத்தமான இடம்.

வரலாற்று சிறப்புமிக்க செல்லுலார் ஜெயில், ஜெட் ஸ்கீயிங், ஸ்கூபா டைவிங், ஸ்நோர்க்ளிங், சர்பிங் உள்ளிட்ட நீர் விளையாட்டுகளுக்கு பிரபலமான ஹவ்லாக் தீவு மற்றும் லிட்டில் அந்தமான் என, பார்த்து அனுபவிக்க இங்கு ஏராளம் உண்டு. சென்னையில் இருந்து நேரடி கப்பல் மற்றும் விமான சேவை உண்டு.

ஷில்லாங் – மேகாலயா

ஹனிமூன் தம்பதியினர், இயற்கை விரும்பிகள், கானுயிர் காதலர்கள், மற்றும் புதிய கலாச்சாரங்களை அறிய ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்ற சுற்றுலா தலம் இது. அதிக மழைப்பொழிவை பெறும் ஷில்லாங் நகரம், காசி பள்ளத்தாக்கும், ஜயந்தி மலைகளும் சூழ்ந்திருக்க, இயற்கை அழகின் சங்கமமாக, பச்சை பசேலென இருக்கும் ஷில்லாங்கை சுற்றி நிறைய நீர்வீழ்ச்சிகளும் உண்டு.

காடுகளுக்கு பயணம், டிரெக்கிங், படகுச்சவாரி என, ஷில்லாங் உங்களுக்கு களிப்பூட்டும். வடகிழக்கில் வெகு தொலைவில் அமைந்திருக்கும் ஷில்லாங்குக்கு அருகில் உள்ள ரயில் நிலையம், அங்கிருந்து 100 கி.மீ., தொலைவில் இருக்கும் குவஹாத்தி நகர ரயில் நிலையம் தான்.

மவுன்ட் அபு – ராஜஸ்தான்

இயற்கைக் காதலர்களுக்கும், ஹனிமூன் தம்பதியினருக்கும் ஏற்ற இடம், ராஜஸ்தானின் ஒரே மலை நகரமான, மவுன்ட் அபு. ஆண்டு முழுவதும் காணத்தகுந்த இடமாக இருந்தாலும், மழை மேகங்கள் சூழ்ந்திருக்கும் அழகையும், மழைப் பொழிவையும் மவுன்ட் அபுவில் காண்பது சிறப்பானது.

இயற்கையின் அழகு நிறைந்து, ஆன்மிக மற்றும் சாகச உணர்வுகள் அளிக்கும் மவுன்ட் அபுவில், சுற்றிப்பார்ப்பதுடன் டிரெக்கிங்கும் போகலாம். ஏரிகளில் படகுச்சவாரி செய்துகொண்டே அற்புதமான காலநிலையை அனுபவித்து பொழுதைப் போக்கலாம். புதுடெல்லி, ஜெப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரயில் சேவைகள் உண்டு.

ஜோக் நீர்வீழ்ச்சி – கர்நாடகா

இயற்கையின் பிரும்மாண்டத்தை நேரில் காண விரும்புகிறவர்கள், இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சியான ஜோக் நீர்வீழ்ச்சியை காணலாம். ராஜா, ராணி, ரோவர், ரோக்கெட் என நான்கு அருவிகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாக உருவெடுக்கின்றன. நீர்வீழ்ச்சியை சூழ்ந்திருக்கும் பசுங்கானகம, அருவியின் அழகை மேலும் கூட்டுகிறது. அருவியின் சாரலில் நனைந்து கொண்டே அதன் அழகை அனுபவிப்பது ஆனந்தம்.

மழைக்காலத்தில் காண வேண்டிய முக்கிய இடமான இங்கு நேச்சர் வாக், பறவைப் பார்த்தல் செயல்பாடுகளும் உண்டு. டாப்பெ நீர்வீழ்ச்சி, லிங்கனாமக்கி அணை, துங்கா அணைக்கட்டு, திவாரே கோப்பா சிங்கம் மற்றும் புலிகள் ரிசர்வ் வனப்பகுதி, ஷ்ராவதி நதி ஆகியவை அருகில் உள்ளன. பெங்களூரில் இருந்து, 430 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.

கட்ச் – குஜராத்

முடிவற்ற பாலை நிலமான கட்சி பகுதியில், பார்க்க என்ன இருக்கும் என்று சந்தேகம் வேண்டாம். கட்சில் மழைக்கால மேகங்களை காண்பதே அற்புத காட்சியாகவும், அனுபவமாகவும் இருக்கும். முடிவற்ற நிலத்தின் தொடுவானமே அற்புத அழகுடன் காட்சியளிக்கும்.
அதுமட்டுமல்ல, மழைநீர் சூழந்த கட்ச் நிலமே தனி அழகுடன் தான் இருக்கும். சுற்றிப் பார்ப்பதற்கும், கேம்பிங்குக்கும் ஏற்ற இடமிது. பூஜ் நகரம் தான், கட்சிற்கு அருகிலுள்ள விமான நிலையம். மேலும் மும்பை, அகமதாபாத் நகரங்களிலிருந்து ரயில் சேவை உண்டு.

அலிபாக் – மஹராஷ்டிரா

மஹாராஷ்டிரா மாநிலத்தில், கொங்கன் பகுதியில் அமைந்திருக்கும் அழகிய நகரம் தான், அலிபாக். இந்நகரத்தின் அற்புத அழகை நாடி பயணியர் வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இந்நகரின் வரலாற்றுப் பாரம்பரியம், நாவூறச் செய்யும் கடல் உணவுகள், கலாச்சாரம் ஆகியவையும், பயணியர் இங்கு படையெடுக்க முக்கிய காரணிகளாகும்.

கடற்கரை காதலர்கள், இயற்கைக் காதலர்கள் ஆகியோருக்கு பிடித்தமான இடமான இங்கு, குலாபா கோட்டை, அலிபாக் பீச், முராத் பீச், கந்தேரி உள்ளிட்டவை உள்ளன. ஜெட் ஸ்கீயிங், குதிரைச்சவாரி போன்ற விளையாட்டுகளும் இங்குண்டு. மும்பையில் இருந்து ரயில், சாலை வழியாக பயணிக்கலாம்.

மலர்களின் பள்ளத்தாக்கு, உத்தரகண்ட்

உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும், ‘வேலி ஆப் பிளவர்ஸ்’, இமயத்தின் மேற்கு, கிழக்கு மற்றும் சன்ஸ்கார் மலைத்தொடர்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. உயர்ந்திருக்கும் இமயத்தில் அமைந்திருக்கும் இந்த அமைதியான இடத்தை புவியின் சொர்க்கம் எனலாம். நெடிய பசும் புல்வெளிகள், அவற்றில் நிறைந்திருக்கும் எண்ணற்ற பூக்கள் மற்றும் அங்கு வாழும் அரிய வகை விலங்கினங்கள் என இயற்கை செறிவுற்றுக் காணப்படும் இடமிது.


பூக்கள் முழுமையாக பூக்கத் தொடங்கும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள், இங்கு சுற்றுலா செல்ல சிறந்த காலமாகும். டேராடூன் மற்றும் டெல்லியில் இருந்து சாலை வழியாக பயணிக்கலாம்.

இவற்றை மறக்காதீர்…


தொடர்ச்சியான, பலத்த மழைப்பொழிவால் பயணங்கள் தாமதமாகலாம்; ஏன் தடைபடவும் நேரலாம். ஆனாலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால், இடர்பாடுகளை சமாளித்து, பயணத்தை அனுபவிக்கலாம்.

1. மழைக்காலத்தில் பயணிக்கும் போது, எளிதில் உலரக் கூடிய பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழை ஆடைகளை அதிகம் அணியலாம்.
2. பூச்சி மற்றும் கொசு விரட்டிகள் எப்போதும் கைவசம் இருக்க வேண்டும். அதுபோல, உங்களுக்கு தேவையான அவசர கால மருந்துகளை தவறாமல் எடுத்துச் செல்லவும்.
3. மழைக்காலத்தில் பாட்டிலில் அடைக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட அல்லது காய்ச்சி வடிகட்டிய பாதுகாப்பான குடிநீரையே பயன்படுத்தவும்.
4. சாலையோர உணவுகளை தவிருங்கள்.
5. காலநிலை அறிவிப்புகளையும், செய்திகளையும் கண்காணித்தபடி இருங்கள்.
7. குடைகள், ரெயின் கோட்கள் கட்டாயம் உடன் இருக்க வேண்டும்.

9. வழுக்காத, சரியான காலணியை அணியுங்கள்.
10. எல்லாவற்றுக்கு மேலாக, உங்கள் உடல்நிலை மழையை தாங்குமா, உண்மையிலேயே உங்களுக்கு மழை பிடிக்கும் என்றால் மட்டுமே, சுற்றுலா செல்லுங்கள்.
10. பயணத்தின் போது பாதுகாப்புக்கே முன்னிரிமை அளியுங்கள். அதிகம் பயணப்படாத பாதைகளை தவிருங்கள்.

                             – செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g