e1 food court: பாப்பா ரொட்டியில், பன்னும் டீயும் ரெண்டு கண்ணு!

e1 food court: பாப்பா ரொட்டியில், பன்னும் டீயும் ரெண்டு கண்ணு!

டீக்கடை என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் விஷயம், டீயும் பன்னும் தான். இவற்றுக்காகவே, பிரத்யேகமாக செயல்பட்டுவரும் உணவகமே, பாப்பா ரொட்டி. வேளச்சேரி பீனிக்ஸ் மாலின் ‘பலேடியம்’ பகுதியில் அமைந்திருக்கிறது, இந்த உணவகம். அப்படி இந்த உணவகத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

பன்னும், டீயும் தான் இங்கு ஸ்பெஷல். மலேசியாவில் தொடங்கப்பட்ட இந்த உணவகம், இப்போது பல நாடுகளில் பரவி புகழ் பெற்றிருக்கிறது. தமிழகத்தில், சென்னையில் தான் முதலில் தொடங்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களின், ‘பன்’ தயாரிப்பு முறையை ரகசியமாக வைத்திருக்கின்றனர். அதனால் தலைமையிடமான கோலாலம்பூரிலேயே பன் தயார் செய்யப்பட்டு, சென்னை உள்பட உலகமெங்கும் உள்ள அதன் கிளைகளுக்கு அனுப்பப் படுகின்றது.  இந்த பன்னை, வேறு எங்கும் சுவைக்க முடியாது என்பதே, இதன் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

சீஸ், டேட்ஸ், ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட், தேன், நட்ஸ் என, பலவித சுவைகளை பன் மீது டாப்பிங் செய்கிறார்கள். தவிர, ஸ்ட்ராபெர்ரி, வெனிலா, சாக்லேட் போன்ற பிளேவர்களில் ஐஸ்கிரீம் பன் கூட சுவைக்கலாம். சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் பன் போல, இதன் சுவை இருக்காது. இனிப்பு சுவையும் அதிகமாக இருக்காது. ஆனால் பிட்டு, சுவைக்க தொடும்போதே, அதன் மிருதுவான தன்மையும், சுவையும், மற்ற பன்னை விட இது கொஞ்சம் வித்தியாசமானது என்பதை உணர வைக்கும். இதற்கு பொருத்தமாக, பாப்பா ரொட்டி மில்க் சாய் சரியான தேர்வு. பாலை சுண்ட காய வைத்துத் தயாரிக்கப்படும் டீ தான், ‘பாப்பா ரொட்டி மில்க் சாய்’ என்றழைக்கப்படுகிறது. இந்த பன்னும் டீயுமே சுவைக்க போதுமானது. இதுதவிர, பழச்சாறுகள், மில்க்‌ஷேக், கிட்ஸ் மெனு, வெஜ், எக் மற்றும் சிக்கன் என பட்டியல் நீளுகிறது.

பாப்பா ரொட்டி சென்னை உணவக பொறுப்பாளர் சத்யாவிடம் பேசும்போது,“ தேநீர் காதலர்களுக்கு உயர்தர சுவையில் தேநீரையும், அதற்கு தொடுசுவையாக பன், பீட்ஸா, சான்விட்ச் போன்றவற்றை சுவைக்க பெஸ்ட் இடம் இது. இங்கு வரும் பலரும் கேட்கும் முதல் கேள்வி, பன் எப்படி தயார் செய்கிறீர்கள் என்பதே? அந்த கேள்விக்கான பதில் எங்களுக்கும் தெரியாது. அந்த அளவிற்கு தலைமையிடம் அதை ரகசியமாக வைத்திருக்கிறது. பாப்பா ரொட்டி என்றால் ‘Father of Bun’ என்று அர்த்தம். நாங்கள் தரும் பன் சுவையை வேறு எவறாலும் தரமுடியாது என்று தைரியமாக சொல்வோம்.” என்றார் சத்யா.

ஆப்பிள், அன்னாசி, எலுமிச்சை, மாம்பழம், மாதுளை உள்ளிட்ட பழங்களை தண்ணீர் கலக்காமல் அப்படியே ப்ரெஷ் பழச்சாறாக அளிக்கின்றனர். விரும்புவர்களுக்கு பாலுடன் மில்க்‌ஷேக் ஆகவும் தருகின்றனர். அடுத்ததாக குழந்தைகள் விரும்பும் வகையில் தயார் செய்யப்பட்ட கிட்ஸ் மெனு. இதில் பிஷ் அண்ட் சிப்ஸ், பிரெஞ்ச் ஃப்ரைஸ், சிம்பிள் சீஸ் பீட்ஸா, ஃபிஷ் ஃபிங்கர் ஆகியவற்றை சுவைக்கலாம். அடுத்ததாக வெஜ்ஜில் பாஸ்தா ஸ்பகட்டி, மெக்ஸிகன் வெஜ் ஃபோகசியா, காட்டேஜ் சீஸ் ராப், சாலட் சான்விட்ச், ஸ்பினாச் & கார்ன் சீஸ் சான்விட்ச் போன்றவையும், அசைவத்தில் சிக்கன் பாஸ்தா, சிக்கன் செட்டிநாடு, ஜிஞ்சர் சிக்கன் ஓபன் சான்விட்ச், பார்பிக்யூ சிக்கன் பீட்ஸா ஆகியவையும் கிடைக்கிறது.

முட்டைக்கென தனி மெனு இன்னும் மெர்சல். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்காட்ச் எக், சில்லி பன் ஆம்லெட், ஃப்ரெஞ்ச் டோஸ்ட், எக் சாக்‌ஷூகா, எக் சான்விட்ச் போன்றவை கிடைக்கிறது. இதில் எக் சாக்‌ஷூகா நிச்சயம் சுவைக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் ஒரு கடாயில் தக்காளி சாஸ் ஊற்றி, அதன்மீது முட்டையை ஊற்றி அப்படியே வேகவிடுகின்றனர். பின், அந்த கடாயை அப்படியே பரிமாறுகிறார்கள். கடாய் சூடாக இருக்கும் என்பதையும் முன்பே சொல்லிவிடுவதால், உஷாராக சாப்பிட வேண்டியதுதான். இது நம்ம ஊர் முட்டை கலக்கி போன்ற சுவையை தருகிறது. இந்த ஷாக்‌ஷூகா. அதுபோல பன் வைத்து ஆம்லெட் செய்வது, நம்ம ஊர் ஸ்டைலுக்காக செட்டிநாடு ஃபிளேவரில் சான்விட்ச் செய்வது என, ஒவ்வொன்றும் தனி சுவையே.

மற்றபடி… டீ பிரியர்களே, வித்தியாசமான சுவையில் டீயும், பன்னும், வெரைட்டியான தின்பண்டங்களும் சுவைக்க விரும்பினால், நிச்சயம் இந்த பாப்பா ரொட்டி உணவகத்திற்கு செல்லலாம். அவர்களின் அன்பு கவனிப்பும், அசத்தல் சுவையும், உணவகத்தின் உள் அலங்காரமும் நிச்சயம் உங்களை குஷிப்படுத்தும்.

குறிப்பு: உணவுகளின் விலை கொஞ்சம் அதிகம் தான். அதுமட்டுமின்றி, வழக்கமான உயர்தர உணவகத்தில் இருப்பதுபோல, இங்கும் தண்ணீர் பாட்டில் முதல் அனைத்தையும் விலைகொடுத்தே வாங்கியாக வேண்டும் என்பது மட்டுமே குறை.

– நீலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g