திருமணத்துக்கு சம்மதிக்கும் முன், பரிசீலிக்க வேண்டிய 5 விஷயங்கள்

திருமணத்துக்கு சம்மதிக்கும் முன், பரிசீலிக்க வேண்டிய 5 விஷயங்கள்

திருமணம் செய்ய ஆசை இருந்தாலும், கடைசி வரை பிரியாமல் இருக்கும் உறவுக்கு பலரும் தயாராக இருப்பதில்லை. ஆகவே, உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கும் முன்பாக இந்த விஷயங்களை ஆழமாக யோசித்து, பின் முடிவெடுங்கள்.

1. திருமணம், உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

திருமணம் பற்றிய நேர்மறையான எண்ணம் உங்களுக்கு இருப்பதால் தான், மண வாழ்க்கையில் ஈடுபட விரும்புகிறீர்கள். ஆனால், உங்கள் வாழ்க்கையில் இப்போது இருப்பதைவிட, திருமணம் எதைக் கூடுதலாக அளிக்கும் என்று நினைக்கிறீர்கள்? அல்லது உங்களின் தற்போதைய வாழ்கையில் இல்லாத எதை திருமண வாழ்க்கை அளிக்கும் என்று நினைக்கிறீர்கள்? வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திலும் உடனிருக்கும் ஒரு துணைவரை எதிர்பார்க்கிறீர்களா? அப்படியெனில், பின்வரும் விஷயங்களையும் பரிசீலித்துவிட்டு, சம்மதிக்கலாமால் வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.

முதலில் திருமண வாழ்க்கை அளிக்கப்போகும் சாதகமான விஷயங்களை யோசியுங்கள். அதேநேரத்தில் பாதகங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக, திருமணத்துக்கு பிறகு உங்களுக்கு நிறைய பொறுப்புகளும் கடமைகளும் இருக்கும். அல்லது நீங்கள் உங்கள் சுதந்திரத்தை இழக்க வேண்டி இருக்கும். இதுவரை இருந்தது போல எதற்கும் கவலைப்படாமல், யாரைப் பற்றியும் கவலையின்றி நீங்கள் இருக்க முடியாது. உங்களால் இதைச் செய்ய முடியுமா? திருமணம் என்பது ஒரு வாழ்நாள் கமிட்மென்ட். என்பதால் இதைப் பற்றி நன்கு யோசித்து முடிவு செய்யுங்கள்.

2. உங்கள் துணைவருக்கே முதல் முன்னுரிமை

மண வாழ்க்கையில் உங்களுடன் கடைசிவரை இணைந்திருக்கப் போகும் துணைவருக்கு, நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். எந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றாலும், எதைப் பரிசீலித்தாலும், நீங்கள் அவர்களையும் கவனத்தில் கொண்டே, அவர்களின் பங்களிப்புடன் தான் செய்ய வேண்டியிருக்கும். குடும்ப நிகழ்வுகள் முதல் நிதி விஷயங்கள் வரை, துணைவருடன் ஆலோசித்து முடிவெடுப்பதே சிறந்ததாக இருக்கும். இதற்கு நீங்கள் தயாரா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

3. சமரசங்கள், அனுசரனைகள் செய்துகொள்ள தயாரா?

அனுசரனைகள் இல்லாமல் திருமண வாழ்க்கை இல்லை. உங்கள் திருமண வாழ்க்கைக்காக அனுசரனைகள், சமரசங்கள் செய்துகொள்ள திறந்த மனத்துடன் இருக்கின்றீர்களா? இதற்காக நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று அர்த்தமல்ல. ஒரு குழுவாக இணைந்து தம்பதியர் செயல்பட வேண்டுமானால், சில தனிப்பட்ட விஷயங்களில் சமரசமும் விட்டுக்கொடுத்தல்களும் தேவைப்படும். இதற்கு நீங்கள் தயாராக இருந்தால், திருமண வாழ்க்கையின் சிறப்பான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

4. உங்கள் பெரிய இலக்குகளை எட்டிவிட்டீர்களா?

காதல் எல்லாவற்றையும் வென்றுவிடும் என்பதும், திருமணத்துக்கு பிறகும் நமக்கு தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அந்த முக்கியமான நாளுக்கு முன்பாக, நீங்கள் செய்து முடிக்க விரும்பும் பெரிய பட்டியல் உங்களிடம் இருந்தால், அவற்றைப் பரிசீலிப்பது மிகவும் முக்கியம். உதாரணத்துக்கு வீடு வாங்க வேண்டும், ஏதாவது படிப்பை முடிக்க வேண்டும், அல்லது ஓர் ஆண்டாவது வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் – இப்படி உங்களுக்கு முக்கியமாக தெரியும் விஷயங்கள் இருக்கலாம். உங்களுக்கு வாழ்க்கை துணையாகப் போகும் நபரிடம் இதைப் பற்றிப் பேசுங்கள். சரியான முடிவுக்கு வாருங்கள்.

அந்த முடிவானது, உங்கள் விருப்பத்தை முடித்துவிட்டு திருமண வாழ்க்கையை தொடங்குவதாக கூட இருக்கலாம். அன்புக்கும் காதலுக்கும் முடிவே கிடையாது. தம்பதியர் சேர்ந்தே இலக்குகளையும், லட்சியங்களையும் வென்று முடிப்பது சாத்தியம் தான். ஆனால் இவை உங்களின் தனிப்பட்ட, சுதந்திரமான விருப்பங்களாக இருக்கையில், அதை முடித்துவிட்டு அல்லது சரியான முடிவெடுத்துவிட்டு, மண வாழ்க்கையை தொடங்குவதான் சிறப்பாக இருக்கும்.

5. காதலா? தேவையா? எதன் அடிப்படையில்

தவறான காரணங்களுக்காக பலர் திருமணம் செய்து கொள்கின்றனர். பாதுகாப்பு, பொறுமையின்மை, குடும்ப நிர்ப்பந்தம், சுயமதிப்பு குறைவாக இருக்கிறது, வாழ்க்கையில் கடைசி காலத்தில் தனியாக இருப்போம் என்ற அச்சம், மதிப்புக்காக, செல்வாக்குக்காக, வசதிக்காக, இப்படிபட்ட காரணங்களுக்காக திருமணம் செய்துகொள்வது சரியல்ல.

ஆரோக்கியமான உறவுக்கு, ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தவும், திருமண வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், இரண்டு ஆரோக்கியமான தனிநபர்கள் தேவை. திருமண வாழ்க்கைக்கு தயாராக இருப்பது என்பது, உங்களுக்கு பிடித்த, நீங்கள் நேசிக்கும் ஒரு நபருடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது. ஆகவே, சரியான துணையை, அறிவுப்பூர்வமாக யோசித்துத் தேர்ந்தெடுங்கள். அப்போது உங்கள் மண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g