கார்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு…. தவிர்ப்பது எப்படி?!

கார்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு…. தவிர்ப்பது எப்படி?!

தற்போது தொழிற்சாலைகளைவிட, வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால் தான் நம் சுற்றுச்சூழலும் காற்றும்  அதிகமாக மாசுபடுகிறது.  வாகனப் பெருக்கம், குறிப்பாக கார்களின் பயன்பாடு இன்று அதிகரித்துவிட்டது. குடும்பத்துக்கு ஒரு கார் என்று இருந்த நிலை மாறி, ஒவ்வொருவருக்கும் ஒரு கார் என்ற நிலையை நோக்கிப் போய் கொண்டிருக்கிறோம்.  கார்களின் பயன்பாட்டை குறைப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. ஆனால், சில விஷயங்களை அக்கறையுடன் செய்தால், மாசுபாட்டின் அளவை குறைக்கலாம். இதோ e1life.com அளிக்கும் யோசனைகள்…

“சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில், வாகனங்களை பயன்படுத்தும் பக்குவத்துக்கு நாம் ஒவ்வொருவரும் வந்தாக வேண்டிய கட்டம் இது. கார் உற்பத்தியாளர்கள் அதற்கான தங்களது பங்களிப்புகளை வழங்கிவரும் நிலையில், நாமும் நமது கார்கள் பயன்பாடு மற்றும் பராமரிப்பில் பல மாற்றங்களை செய்ய வேண்டும். கார் பயன்பாடு குறித்த, நமது எண்ணங்களை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்…இதன் மூலம் சுற்றுச்சூழல் ஆபத்துகளை குறைக்க வேண்டும்”.

– சஞ்சீவ் அகர்வால், துணைத் தலைவர்,
நிஷான் மோட்டார் இந்தியா நிறுவனம்.

ஒரு ஆரோக்கியமான கார், கார்பன் உமிழ்வுகளை அதிகம் வெளிப்படுத்தாது. அதனால், கார் பயன்படுத்தும் ஒவ்வொருவரும், இந்த விஷயத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.  அதில், முதலாவது மற்றும் முக்கியமான செயல்பாடு, கார் இன்ஜினை அடிக்கடி சோதனை செய்வதாகும். அதுவே, குறைவான எரிவாயு எரிப்பின் வழியாக, கார்பன் உமிழ்வுகளை குறைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

போதுமான அளவு காற்றழுத்தம் கொண்ட டயர்கள், காரின் எரிபொருளை மிச்சப்படுத்துவதுடன்,  நல்ல மைலேஜை வழங்கும். எனவே, ஒவ்வொரு மாதமும் அல்லது மாதம் இருமுறையேனும், கார் டயர்களில் காற்றழுத்தம் சரியாக இருக்கின்றதா என்று உறுதி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

ஸ்பார்க் பிளக்குகள் உட்பட காரின் பராமரிக்கப்பட வேண்டிய பிற முக்கிய பாகங்களை, அவ்வப்போது பரிசோதித்தல், ஏர் ஃபில்டர்களை மாற்றுதல் என, இன்னும் பல அமைப்புகளை பரிசோதித்தல் மிகவும் முக்கியமாகும்.

சாலையில் ரெட் சிக்னலுக்காக காரை நிறுத்துகையில், அதன் இன்ஜினையும் அணைப்பது நல்லது. ஏனெனில், நிறுத்தப்பட்ட காரில் இயங்கும் இன்ஜின், அதிகப்படியான எரிபொருளை வீணாக்கும். அத்துடன் காற்றிலும் ஏராளமான கார்பன் உள்ளிட்ட மாசு ஏற்படுத்தும் வாயுக்களையும் தூசிகளையும் உமிழும்.  இதனால் மாசுப்படுவது சுற்றுச்சூழல் மட்டுமல்ல, நாமும்தான். நம் எதிர்கால சந்ததிகளும்தான்.

PUC சோதனைகள் கட்டாயம்!
மாசுபாடு அதிகரிப்பின் முக்கிய காரணம் வாகனங்கள் என்பதில் ஆச்சரியமில்லை. இத்தகைய ஆபத்தான தாக்கத்தை மனதில் கொண்டு, சாலையில் பயணம் செய்யும் அனைத்து வாகனங்களும் PUC சான்றிதழை கொண்டிருக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பொறுப்பான குடிமக்களாக, சுற்றுச்சூழல் சமநிலையை மட்டுமின்றி, பொது மக்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் உமிழ்வுகளை கட்டுப்படுத்தும் வகையில், நாம் ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறையும், PUC சோதனைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

கார் ஃபோம் வாஷ்கள்!
காரை கழுவிச் சுத்தப்படுத்த நாம் பின்பற்றும் வழக்கமான, ‘சோப்பு மற்றும் தண்ணீர்’ முறையின்  4எதிர்மறை தாக்கங்களை பலர் அறிவதில்லை. வழக்கமான அத்தகைய சோப்பு பயன்படுத்தி கழுவும் முறையில், அழுக்கு நீரானது நேரடியாக சாக்கடைகளுக்குச் சென்று, நீர்நிலைகளில் கலப்பதால் பெரும் தாக்கத்தை அது ஏற்படுத்துகிறது. அதை கருத்தில் கொண்டு, கார் ஃபோம் வாஷ்கள் போன்ற, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத அல்லது குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் மாற்று வழிகளை கார் வாஷ் செய்ய பயன்படுத்தலாம்.

காரின் ஏர்-ஃபில்டர்களை மாற்றுங்கள்!
அடைப்புகள் நிறைந்த ஏர் ஃபில்டர்கள் உங்களது இன்ஜினிற்குள் செல்லும் காற்றின் தரத்தையும், அளவையும் பாதிக்கும். அதனால், முறையான எரிபொருள் பயன்பாடு தவிர்க்கப்படும். இது இன்ஜினுக்கு அதிக அழுத்தம் தருவதோடு மட்டுமின்றி, மைலேஜையும் பாதிக்கும் மற்றும் ஆபத்தான உமிழ்வுகளை வெளிப்படுத்தும். எனவே, அடிக்கடி ஏர்-ஃபில்டர்களை சோதிப்பதும் மற்றும் அடைப்பு அறிகுறிகள் தோற்றினால் அவற்றை மாற்றுவது அத்தியாவசியமாகும்.

மேலே சொன்ன விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம், நாமும் ஆரோக்கியமாக இருந்து, சுற்றுப்புறத்தையும் மாசில்லாமல் வைத்துக்கொள்ளலாம்.

– செ.கார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g