அலுவலகத்தில் ஆண்- பெண் உறவுமுறை எப்படி இருக்க வேண்டும்?

அலுவலகத்தில் ஆண்- பெண் உறவுமுறை எப்படி இருக்க வேண்டும்?

எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும், நிறுவனத்தில் உயர் பதவியை வகிப்பவராக இருந்தாலும், ஒருவர் பெண்களுடன் நல்ல முறையில் பழகவில்லை எனில், நிறுவனம் எடுக்கும் ஒரே முடிவு பணி நீக்கம். இச்சிக்கலைத் தவிர்க்க, அலுவலகத்தில் பணிபுரியும் சக ஆண்-பெண் ஊழியர்களுடன் எப்படி பழகவேண்டும்? என்னென்ன விஷயங்களை மனதில்கொண்டு செயல்படவேண்டும் என்பதைப் பார்க்கலாம். 

திறமையுடன் வேலை பார்த்தால் போதும், வேலை நிரந்தரம் என நினைத்துவிட வேண்டாம். அதை விட முக்கியம் ஒழுக்கம். “அந்த நபர் மிகவும் திறமைசாலி, நான்கு பேர் செய்யும் வேலையை ஒரு ஆளாக முடித்துவிடுவார். வேலையில் கெட்டிக்காரர். ஆனால் அவரை இப்போது நிறுவனம் வேலையிருந்து நீக்கிவிட்டது. காரணம் என்னவென்று விசாரித்தால், உடன் வேலைபார்க்கும் பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்” – இந்த மாதிரியான அனுபவங்கள் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். 

ஆண்களுக்கே அதிக கவனம் தேவை!
அலுவலகம் என்பது ஒருவருடன் ஒருவர் தொட்டுப் பேசி, விளையாடி மகிழ விளையாட்டு அரங்கம் கிடையாது. இதில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கட்டுப்பாடு என்பது முக்கியம்.  உடல் ரீதியாகவோ, வார்த்தைகள் வழியாகவோ எப்போதும் வரம்பு மீறாதீர்கள். சக ஊழியருடன் நட்போ காதலோ உண்டானால் கூட, அதை ஒருபோதும் அலுவலகத்தில் பலர் பார்க்க வெளிப்படுத்த வேண்டாம். அலுவலகம் என்பது பணி செய்வதற்கான இடம் மட்டுமே. தேவை இல்லாமல் தனிப்பட்ட உறவையும் தொழிலையும் குழப்பி, உங்கள் வேலைக்கும் எதிர்காலத்திற்கும் நீங்களே உலை வைத்துக் கொள்ளாதீர்கள். 

பேச்சில் கவனம் தேவை!
ஆணோ பெண்ணோ, சக ஊழியரிடம்  பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. அலுவலக வட்டாரத்தில் ஒருவரை ஒருவர் அழைப்பதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தைகளை (சார், மேடம் அல்லது பெயர்) மட்டுமே சொல்லி அழைப்பது நல்லது. ஸ்வீட்டி, டியர், ஹேண்ட்சம் போன்ற வார்த்தைகளால் அழைக்க வேண்டாம்.  இப்படி கூப்பிடும்போது, அருகில் இருப்பவர்கள் முகம் சுழிப்பார்கள் என்பதை மறக்கக்கூடாது.

உடைகளில் அக்கறை
அலுவலகத்திற்கு ஃபார்மல் ஆடைகள் தான் சிறந்தது. அதிலும் கண்ணியத்தை கடைபிடியுங்கள். பொதுவாக உடைக் கட்டுப்பாடு பெண்களுக்கு தான் விதிக்கப்படுகிறது.  ஆனால் ஆண்களும் கவனமாக இருக்கவேண்டும். உதாரணமாக, ஷர்ட் பட்டனை போடாமல் அலுவலகத்திற்குள் நடமாடுவது, உள்ளாடை தெரிகிற வகையில் லோ வெயிஸ்ட் ஜீன்ஸ் அணிவதெல்லாம் கூடாது. இதனால் ஆண்கள் தங்கள் மதிப்பை தாங்களே குறைத்துக் கொள்ள நேரிடும்.

கண்களைப் பார்த்துப் பேசுங்கள்
ஆணோ பெண்ணோ, யார் யாரிடம்  பேசும்போதும் கண் பார்த்து(ஐ-கான்டக்ட்) பேசுவது முக்கியம். சக பெண் ஊழியர்களுடன் பேசும்போது, அவர்களின் கண்களை மட்டுமே பார்த்து பேசுவதுதான் கண்ணியம்.  அப்படியில்லாமல் கண் பார்வை அங்கும் இங்குமாக அலைபாய்ந்தால், அது அந்த பெண்ணுக்கு அசவுகர்யத்தை ஏற்படுத்தலாம்.  அதேபோல பெண்கள் ஆண்களிடம் கண் பார்த்துப் பேசத் தவறினால், அதுவும் தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படும். வெட்கம் அல்லது பயம், கூச்சம் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே, இது எடுத்துக் கொள்ளப்படும். இதனால் அந்த ஆண் உங்களை பலவீனமானவராக எடுத்துக் கொண்டு சீண்ட வாய்ப்பு உண்டாகும்.  சிலர் கண்ணடிப்பது, கையை அசைத்துப் பேசுவது, உதட்டை சுழிப்பது போன்ற பழக்கங்களைக் கொண்டிருப்பார்கள். இவை தவறான அர்த்தத்தைக் கொடுக்கும்.  

நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள்!
அலுவலகத்தில் ஆண்கள், பெண்களிடம் நாகரிகமாக நடந்துகொள்வது முக்கியம். குழு கலந்துரையாடலின்போது பாஸ் என்கிறவர்கூட தனக்கு கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் நாகரிகமாகவே நடந்துகொள்ள வேண்டும். சபை உரையாடலின்போது அலுவலகம், வேலை சார்ந்த விஷயங்கள் தவிர்த்து மற்ற விஷயங்களைப் பேச வேண்டாம். ஆண், பெண் இருவருமே அலுவலகத்தில் பொது இடத்தில் சந்தித்து பேசும்போது அனைவருக்கும் தெரிந்த மொழியில் பேசுவது அவசியம். அதுதான் நாகரிகமும் கூட. 

தனிப்பட்ட நட்பு வேண்டாமே!
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், குடும்பம் சார்ந்த பிரச்னைகளை பகிர்வதை தவிர்த்துவிடுங்கள். கருத்து கேட்பதோ, உதவி கேட்பதோ வேண்டாம். ஆரம்பத்தில் நல்ல முறையில் தொடங்கினாலும் பிற்பாடு இதுவொரு சார்ந்திருத்தலாக மாறிவிடும்.

-செ.கார்த்திகேயன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g