அழகான வீட்டுக்கு, அற்புதமான இன்டீரியர் ஐடியாக்கள்!

அழகான வீட்டுக்கு, அற்புதமான இன்டீரியர் ஐடியாக்கள்!

வீட்டை அழகுபடுத்தாத வரையில், அது ஒரு கட்டடம். அவ்வளவே! நம் ரசனையும், அழகியலும் சேர்த்து அலங்காரம் செய்யும் போதுதான், அது நம் கனவு  இல்லம் ஆகிறது. இதற்கு தேவை கொஞ்சம் பணமும், கிரியேட்டிவிட்டியும் மட்டுமே. 

சதுரம் சதுரமாக, நீள் சதுரமாக மட்டுமே கட்டிய வீடுகள் எல்லாம், இப்போது பழையதாகி விட்டன. சாய்வான சுவர்கள், வட்ட வடிவிலான அறைகள், நீள்வட்ட வடிவில் வரவேற்பு அறை என கட்டுமானத்தில் புரட்சி நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம் இது. ‘வீடுன்னா இப்படித்தான் இருக்கணும்’ என பார்ப்பவர்கள் வியந்து சொல்கிற மாதிரியான வீடுகளையே இன்று எல்லோரும் விரும்புகின்றனர். தான் வாழப்போகும் வீட்டை ரசித்து ரசித்து ரசனையுடன் கட்டுபவர்களே, வீட்டின் வெளித்தோற்றத்திற்காகவும், உள் அலங்காரத்திற்காகவும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். நம் ஒவ்வொருவரின் வீடும் புதுப் பொலிவு பெற  பிரபல இன்டீரியர் டிசைனர்கள் அளித்த சில ஐடியாக்கள் இதோ. 

வண்ணங்கள்…எண்ணங்கள்

 

எண்ணங்களை உருவாக்குவதில், வண்ணங்கள் ஆட்சி செய்வதாக சொல்வார்கள்.  அதனால்தான் வீட்டு அலங்காரத்தில் முதன்மையானதாக பெயின்ட் அடிப்பதை டிசைனர்கள் குறிப்பிடுகின்றனர். மோனோ குரோம், டை கலரிங் மற்றும் மல்ட்டி கலரிங் ஆகியவைதான்,  இன்று பெயின்ட் அடிப்பதில் நடைமுறைப்படுத்தப்படும் மூன்று முறைகள். கருப்பு மற்றும் வெள்ளை நிற பெயின்ட்களால், வீட்டை அழகுபடுத்தும் மோனோ குரோம் முறையைப் போல, மற்ற இரு முறைகளிலும் வெவ்வேறு வண்ணங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வயதுக்கு ஏற்ப அறைகளின் வண்ணங்களைத் தேர்வு செய்து அடிக்கும்போது, எப்போதும் மனமும் குணமும் ஆரோக்கியமானதாக இருக்கும். சாதாரணமாக இல்லாமல், கூடுதல் அழகைப் பெறுவதற்கு இன்று டெக்ஸ்ச்சர்டு, பேட்டர்ன் என பெயின்ட்களிலும் பல வகைகள் இருப்பது எக்ஸ்ட்ரா வசதி. அதுமட்டுமில்லாமல், வால்பேப்பர்களாலும் வீட்டை சீசனுக்கு சீசன் வித்தியாசப்படுத்தி காட்ட முடியும்.

பளிச் பளிச் பர்னிச்சர்

பெயின்ட் மட்டுமே அடித்து முடித்திருக்கும் சமயங்களில் வீட்டைப் பார்த்தால், அதன் அழகு தெரியாமல் போகலாம். ஆனால், அதற்கு ஏற்ற மாதிரியான பர்னிச்சரை தேர்வு செய்து, வீட்டிற்குள் வைக்கும்போதுதான் கண்ணைப் பறிக்கும் அழகு மொத்தமும் வெளிப்படும்.  மரப் பொருட்களை விடவும்,  ஸ்டீல் மற்றும் கண்ணாடியில் தயாரிக்கப்படும் டிரெண்டியான பர்னிச்சரே அதிகம் விரும்பப்படுகின்றன. மேலும், மல்ட்டி கலர் பெயின்ட்டிங் முறையைத் தேர்வு செய்யும்போது, அதற்கு நேரெதிராக பிளெய்ன் பர்னிச்சரை தேர்வு செய்வது பழைய ஸ்டைல்.  மல்ட்டி கலர் பர்னிச்சரையே வைக்கும்போது ரிச் லுக் கிடைக்கிறது.

ஆர்கினெக்ஸ் இன்டீரியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜாஸன் வில்லியம்ஸ், கட்டிடத்தை எழுப்பும்போதே, வீட்டை அழகுபடுத்தலையும் சேர்த்தே செய்வது நல்லது என்கிறார். சமீபத்தில் இவர் செய்து முடித்த புராஜெக்ட், சென்னை புரசைவாக்கத்திலுள்ள பவார்ஷி ரெஸ்டரன்ட். அங்கிருக்கும் பொருட்கள் அனைத்தும் ஜாஸனின் ஐடியாவில் நேர்த்தியான அழகில் மிளிர்கின்றன. இப்பொருட்களை அதன் தயாரிப்பாளர்களிடம் சொல்லி ஜாஸனே உருவாக்கினார் என்பது சிறப்பு.

‘’வீட்டை அழகுபடுத்துவதில், சின்னச்சின்ன பொருட்களும் கூட முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக, கைவினைப் பொருட்களை  பிடித்தமான டிசைன்களை எடுத்துச்சொல்லி, கைகளால் தயாரித்து வைக்கும் பொருட்களில் கிடைக்கும் சந்தோசத்தை, தேடிப்பிடித்து கடைகளில் வாங்கும் பொருட்கள் தரவே தராது.’’ ஜாஸன் வில்லியம்ஸ், ஆர்கினெக்ஸ் இன்டீரியர்ஸ்

சுவாரஸ்யமாக்கும் சுவர் அலங்காரம்

வீட்டிற்கு வரும் ஒருவருக்கு, சில நிமிடங்களுக்குப் பிறகு, பேசுவதற்கு விஷயங்கள் இல்லாமல் போகலாம். ஆனால், வீட்டின் சுவர் முழுவதும் பிரேம்கள், புகைப்படங்கள், வரலாற்று விஷயங்கள், ஓவியங்கள் நிறைந்திருந்தால்… சற்று யோசித்துப் பாருங்கள். வாய் ஓயாமல் பேசுவதற்கு விஷயங்கள் நம் மூலமாக, நம் வீட்டின் சுவர் மூலமாக அவருக்கு கிடைத்துவிடுமல்லவா?! வீட்டு உள் அலங்காரத்தில், சுவர் அலங்காரம் முக்கியத்துவம் பெறுவதற்கான மிக முக்கிய காரணம் இது. சுவரின் நிறங்களுக்கு ஏற்ற மாதிரி, ஃபிரேமின் வடிவமும், அதன் வண்ணமும் இருப்பது ரொம்பவே முக்கியம். மேலும், புத்தக அலமாரி, கேண்டில் ஸ்டாண்டு என எல்லாமும் சுவரை அழகுபடுத்துவதற்கான முக்கிய ஐடியாக்கள்.

நம் வீட்டு கட்டுமானத்திலும், உள் அலங்காரத்திலும் ஆங்கிலேயர்களின் பாணி அதிகமாக கலந்திருக்கிறது.  அவர்கள் கட்டிடங்களை எழுப்பும் விதமே வித்தியாசமானது என்பதால் ஐரோப்பிய  முறைகளே இன்று பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. மேலும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வீட்டு கட்டுமானங்களையும், அலங்கார ஐடியாக்களையும்  அப்டேட் செய்து கொண்டு, அதை இங்கு  நடைமுறைபடுத்தும் போது வியக்கும்படியான ரிசல்ட்  கிடைக்கிறது.   
– அசோக் மனோகர், இன்டீரியர் டிசைனர்.
 

ரிச் லுக் புளோரிங்

இன்டீரியர் டிசைனில் அடுத்ததாக முக்கியத்துவம் பெறக்கூடிய விஷயம், புளோரிங். விருந்தினர்கள் நம் வீட்டிற்குள் வைக்கும் முதல் காலடியிலேயே, வீட்டின் தன்மையை உணர்த்துவது புளோரிங்தான். வெறுமனே மொசைக் கற்களால் செய்யப்பட்டு வந்த புளோரிங், சில வருடங்களுக்கு முன்புதான் டைல்ஸ் என்கிற புதுமையால் பொலிவு பெற்றது. ஆனால், இன்று தங்களின் புகைப்படங்களைக் கூட, வீட்டின் தரையில் பதித்துக் கொள்ளக்கூடிய எப்பாக்ஸி புளோரிங் (3டி புளோரிங்) முறை பிரபலமடைந்து வருகிறது. வரவேற்பு அறைகள், குளியலறைகள், படுக்கை அறைகள் என அதற்கு ஏற்றவாறு படங்களையோ, டிசைன்களையோ தேர்வுசெய்து, 3டி புளோரிங் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மரத்தினால் செய்யப்படும் புளோரிங், ஆடம்பரமாக அழகை உண்டாக்குகிறது. அதேபோல, புளோரல் புளோரிங், கார்ப்பெட் புளோரிங், மேட் பினிஷிங் புளோரிங் என புளோரிங் முறைகளின் பட்டியல் ஏராளம்.

பரவசம் தரும் பசுமை

வீடெங்கும் பசுமை என்பதுதான், வீட்டு உள் அலங்காரத்தின் புதிய டிரெண்ட். வரவேற்பு அறைகள், படுக்கை அறைகள் என வீட்டின் மிக முக்கியமான அறைகளில் வைக்கும் அலங்காரச்  செடிகளால், வீடு முழுவதும் பரவசம் படர்ந்திருக்கும் என்பது டிசைனர்களின் கருத்து. பசுமை தரும் புத்துணர்ச்சியை, உள் அலங்காரத்தின் மற்ற டாம்பீகங்கள் ஏதும் ஈடு செய்ய முடியாது.  கோபத்துடன் வீட்டிற்குள் நுழைபவர்களைக் கூட, அலங்காரச் செடிகளும், வரவேற்பு அறையின் மையத்தில் அமைக்கும் செயற்கை நீரூற்றும் சாந்தப்படுத்திவிடும்.

ஆக, வாழ்க்கைக்கு தரும் அதே முக்கியத்துவத்தை,  கட்டும் வீட்டுக்குத் தருவோருக்கு, சந்தோஷமும் நிம்மதியும் அவரின் வாழ்நாள் வரை நிலைத்திருப்பது நிச்சயம்!

-செ.கார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g