மறுபக்கம் : ஃபிரிஸ்பீ விளையாட்டில் கலக்கும் நடிகை காயத்ரி

மறுபக்கம் : ஃபிரிஸ்பீ விளையாட்டில் கலக்கும் நடிகை காயத்ரி

ப்பா….யாருடா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கு..! என்கிற ஒற்றை வசனம் போதும் இவரை அறிமுகம் செய்ய..! நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த காயத்ரி ஒரு விளையாட்டு வீரங்கனை. மறுமுகம் பகுதியில் நடிப்பு தவிர தனது மற்றொரு திறமை குறித்து விளக்குகிறார் காயத்ரி.

குறைந்த படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் நிறைவான இடத்தைப் பிடித்தவர் காயத்ரி. எப்போதும் அமைதியான பெண்ணாக வலம் வரும் காயத்ரி ஒரு ஃபிரிஸ்பீ விளையாட்டு வீரர் என்றால் நம்ப முடிகிறதா?

நடிப்பிற்கு அடுத்து காயத்ரி அதிகம் நேசிக்கும் விஷயம் விளையாட்டு. அதுவும் நம்மில் பலருக்கும் தெரியாத ஃபிரிஸ்பீ விளையாட்டுதான் இவரின் கொள்ளைப் பிரியம். வெறும் பொழுதுபோக்கிற்காகவும், ஃபிட்னஸிற்காகவும் மட்டுமின்றி உண்மையாகவே ஆத்மார்த்தமாக விளையாடுகிறார். இந்திய அளவிலான பல போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

”பள்ளி கல்லூரி நாட்களில் விளையாட்டு மீது பெரிய ஆர்வம் கிடையாது. நடனங்கள் கற்றுக் கொள்வதில்தான் கவனம் இருந்தது. தற்போதுதான் விளையாட்டு மீது ஆர்வம் வந்திருக்கிறது. அதுவும் என் தோழியின் அறிமுகத்தால்தான் இந்த விளையாடு எனக்குத் தெரியும். அவள் இந்த ஃபிரிஸ்பீ விளையாட்டில் கெட்டிக்காரி. ஒருமுறை புராஜெக்ட் விஷயமாக அவள் வீட்டில் தங்க வேண்டியிருந்தது. அப்போது அவள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்” என தனக்கு விளையாட்டின் மீது ஆர்வம் உண்டானக் கதையை விளக்குகிறார்.

இந்த ஃபிரிஸ்பீ, கிட்டத்தட்ட கால்பந்து விளையாட்டைப் போன்றதுதான். அதாவது ஃப்ளையிங் டிஸ்க் என சொல்லப்படும் பறக்கும் வட்டுவை காற்றின் திசைக்கு ஏற்ப பறக்க விட்டு கோல் அடிக்க வேண்டும். அதை இரண்டு அணிகளாகப் பிரிந்து ஒரு அணி மற்றொரு அணியை கோல் அடிக்க விடாமல் தடுக்க வேண்டும். பறக்க விடப்படும் வட்டுவை தன் அணி நபர் பிடிக்குமாறு வீச வேண்டும். அதை அவர் பிடிக்க வேண்டும் அல்லது எதிரணியைப் பிடிக்க விடாமல் தடுக்க வேண்டும். இதுதான் அந்த விளையாட்டு.

”இந்த விளையாட்டு இங்கு பலருக்கும் தெரியாமல் இருந்தது. இப்போதுதான் பிரபலமாகி வருகிறது. இதை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான திட்டமும் இருக்கிறது. எனக்கு பிடித்த அம்சம் என்றால் இது பாலின பேதமில்லாத விளையாட்டு. எல்லா விளையாட்டுகளிலும் ஆண் பெண் தனியாகதான் விளையாடுவார்கள். இதில் ஆண் பெண் என இருவரும் சேர்ந்து விளையாடுவர் என்பதால் இதுவொரு சமத்துவ விளையாட்டு’’ என்றார்.

பயிற்சிக்கு சேர்ந்த ஒரு வாரத்திலேயே காயத்ரிக்கு ஃபிரிஸ்பீ மீதான ஆர்வம் அதிகரித்துவிட்டதாம். விளையாட ஆரம்பித்துவிட்டால் நேரம் போவதே தெரிவதில்லை. ”ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரம் இந்த விளையாட்டிற்குப் பயிற்சி எடுத்துக் கொள்வேன்” என்கிறார்.

ஃபிரிஸ்பீயால் தனக்கு பல நன்மைகள் உண்டாகி இருப்பதாக குறிப்பிடுகிறார் காயத்ரி. ”என்னுடைய கார் ஓட்டும் திறமை அதிகரித்திருக்கிறது” என்று சிரிக்கிறார் . அதாவது, ”இந்த விளையாட்டு  கவனக் கூர்மையை அதிகரிக்கும். அதனால் சாலையில் வரும் வாகனங்களையும் சரியாக கணிக்க முடிகிறது. இந்த மாற்றத்தை என் நண்பர்கள் கூட சொல்லி பாராட்டினார்கள்” என நெகிழ்கிறார்.

ஒரு நடிகையாக இருக்கிறீர்கள், வட்டுவைத் தடுக்கும்போது கீழே விழுந்து அடிபட்டால் அது பாதிப்பை உண்டாக்குமே என்றால்,    ”பல முறை விழுந்திருக்கிறேன். எதிரணியைத் தடுக்கும்போது கீழே விழுந்து அடிபடும். ஆனால் அது எனக்கு பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பிடித்துச் செய்தால் எதுவும் கடினமாகத் தெரியாது” என்கிறார்

இந்த விளையாட்டு தற்போதுதான் பிரபலமடைந்து வருகிறது என்பதால், பெரிய அளவில் அடிக்கடி போட்டிகள் நடைபெறுவதில்லை.இந்திய அளவில் அல்லது உலக அளவிலான போட்டிகள்தான் நடக்கும். அப்படி தற்போது அமெரிக்க உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அளவில் காயத்ரியின் குழுதான் தேர்வாகி விளையாடச் சென்றிருக்கிறது. ஆனால் அதில் காயத்ரி கலந்து கொள்ளவில்லை.

” தற்போது சூப்பர் டீலக்ஸ் படம் மற்றும் இணையத் தொடர் என இரண்டு ஷூட்கள் அடுத்தடுத்து கமிட் ஆனதால் அந்த போட்டிக்கு என்னால் செல்ல முடியவில்லை. அதில் நான் கலந்து கொண்டிருந்தால் பெரிய அளவில் பெயர் கிடைத்திருக்கும். அதை நான் நிராகரிக்க வேண்டிய சூழல் உருவானது ரொம்ப வருத்தமாக இருக்கிறது” எனக் கூறும் காயத்ரி கடந்த மாதம் கூட ஹைதராபாத் சாம்பியன்ஷிப்பில் விளையாடி டிராஃபியை கைப்பற்றியிருக்கிறார்.

-ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g