ஆறு வகை ‘தகாத’ உறவுகளும், சிக்கலும் தீர்வும்!

“என்னுடைய அலுவலகத்தில் தான், அவளை முதலில் சந்தித்தேன். வேலை தேடி வந்தவளை, என் கண்கள் எப்படி தேடிப்பிடித்தது என்பதை நினைக்கும்போதெல்லாம் பின்னணியில் இளையராஜா இசையோடுகிறார். பார்த்த முதல் சந்திப்பிலேயே என்னை மறந்துபோனேன். என் அலுவலகத்தில் அவளுக்கு வேலை கிடைத்ததும், எங்கள் சந்திப்பு அதிகமானது. இருவருமே பழக தொடங்கி, இப்போது நூறு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அனுபவமாக இருக்கிறது. மாலை நேர தேநீர், நிறைய பேச்சுகள் என ஒவ்வொரு நாளும் வசந்த காலமே.”

இந்த கதையின் நாயகன் என் நண்பன் தமிழ். அவனின் காதல் கதை என நீங்கள் நினைக்கலாம். நிற்க… தமிழுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளாகிவிட்டது. இது, திருமணத்திற்குப் பிறகான, தமிழின் புதிய உறவு (பாதுகாப்பு கருதி அவள் பெயர் குறிப்பிடப்படவில்லை). திருமணமான ஆண்களுக்கும் பெண்களுக்கும், திருமண உறவை மீறி, வேறு யாருடனோ ஏற்படும் ஈர்ப்பு, வெகு சீக்கிரமே உறவாக பலப்பட்டுவிடுகிறது. இதை திருமணத்தை மீறிய அல்லது ‘தகாத’ உறவு என்கிறோம்.  இந்த மாதிரியான உறவு ஏற்படுவதற்கு ஆறு பிரதானக் காரணங்கள் இருப்பதாக, உளவியல் ஆலோசகர்கள் விளக்குகிறார்கள். அந்த காரணங்களை தெரிந்து கொண்டால், நீங்கள் அதுபோன்ற சூழல்களை சரியாகக் கையாள உதவும்.

காமம் ஒன்லி:

திருமண வாழ்க்கையில், துணையுடனான உடலுறவில் போதாமை ஏற்பட்டாலோ,சலிப்பு ஏற்பட்டாலோ, வேறொரு நபரிடம் சரணடையத் தோன்றும்.  ஆனால் இந்த காரணத்திற்கு உண்டாகும் உறவுகளுக்கு ஆயுள் குறைவுதான். ஆனாலும் ஆரம்ப காலத்தில், இந்த உறவு மிக உறுதியானதாக இருக்கும். இருவருமே அதீத பரவசத்தில், ஒருவித வெறியோடு தென்படுவர். ஆனால் நாளடைவில் யாரேனும் ஒருவருக்கு மட்டுமோ அல்லது  இருவருக்குமோ, ஒரு கட்டத்தில் சலிப்பு வந்துவிடும். ஏனெனில் மன ரீதியாகப் பிணைப்பு இல்லாத எந்த உறவுக்குமே, முடிவு அதுதான்.

ரமேஷ், ராதா இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். ஒருவர் மேல் ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டு, இரவு நீண்ட நேரம் வரை ஆசை வார்த்தைகளால் சாட்டிங் செய்யத் தொடங்கி, அது உடலுறவில் முடிந்தது. சில மாதங்கள் இருவரும் பித்துப் பிடித்த நிலையில் திரிந்தனர்.  இருவருமே உடலுறவு அனுபவத்தில் ரொம்பவே மகிழ்ந்தனர். நிறைய இடங்களுக்கு பயணித்து, தங்கள் ஆசையைத் தணித்தனர். யாருமே அறியாத இந்த ரகசிய உறவில், அவர்கள் உணர்ந்த சுதந்திரமும் த்ரில்லும், அவர்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

நிறைய பேர் ரகசிய உறவுகளில் தான் இத்தகைய உடலுறவு சுதந்திரத்தை உணர்வதாக செக்ஸாலஜிட்டுகள் குறிப்பிடுகின்றனர். மனைவி அல்லது கணவன் என்று வரும் போது, படுக்கையில் நிறைய கட்டுப்பாடுகளை அவர்களே விதித்துக் கொள்வதுதான் இதற்கு காரணம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். ஆனால் காமத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இத்தகைய உறவுகளுக்கு, மிகக் குறுகிய ஆயுள் தான் உண்டு. ஏனெனில் உடலுறவு பேரானந்தமாக இருந்தாலும், அவர்களுக்கு பகிர்ந்துகொள்ள எந்த விஷயமும் இல்லாமல் இருக்கும். ரமேஷுக்கு ராதாவுக்கும் அதுதான் நடந்தது. மனரீதியான பிணைப்பு உருவாகாததால், ஒருகட்டத்தில் அவர்கள் விலகி நடக்க வேண்டியதானது.

பழிக்கு பழி உறவு: 

திருமணத்திற்கு முன்பு இருந்தது போலவே, திருமணத்திற்கு பின்பும் அதே வாழ்க்கையை வாழ்வோம் என்று சொல்லமுடியாது. இணையர்களுக்கு நடுவே புரிதல் மிகவும் அவசியம்.  ஆனால் அது இல்லாத போது சண்டை, கோபங்கள், ஈகோ என பல கேடுகள் அவர்களை தொற்றிக்கொள்ளும். தன்னை கவனிக்காத, தன் மீது அன்பு செலுத்தாத, தன்னுடன் உடலுறவு கொள்ளாத, சம்பாதிக்காத, தன்னை துன்புறுத்தும் துணையை பழிவாங்கும் முயற்சியாக, சிலர் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர்.

இல்லத்தரசியான விமலா வேலைக்குச் செல்லாமல், வீட்டை பராமரித்து வந்தார். காதலித்து திருமணம் செய்துகொண்டவள் விமலா.  தன்னுடனும் குழந்தையுடனும் சரியாக நேரம் செலவழிக்காதது தொடர்பாக,  கணவர் குமாருடன் அடிக்கடி  சண்டை ஏற்பட, அவளுக்குள் வெறுப்பும் கோபமும் வளரத் தொடங்கியது. ஆனால் குமார் மனைவியின் கோபத்தை புறக்கணித்தபடியே இருந்தான். வீட்டிற்கு தாமதமாக வருவதை வழக்கமாகக் கொண்டான். விமலாவோடு பேசுவதையும், வெளியே செல்வதையும் தவிர்த்தான். குமாரின் இந்த அலட்சியப் போக்கு, விமலாவுக்குள் பழிவாங்கும் உணர்ச்சியைத் தூண்டியது. இதனால், குடும்ப நண்பர் ஒருவரோடு பழகத் தொடங்கினாள்.

தொடக்கத்தில் அது அவளுக்கு வடிகாலாக இருந்தது. தன் பிரச்னைகளை, குமார் தன்னை புறக்கணிப்பதை சொல்லிப் புலம்பினாள். ‘உன்னை மாதிரி குமார் இல்லை, தெரியுமா? நீ என்னை எப்படி கவனிச்சுக்குற!’ என இவனை புகழ்ந்தாள். நாளடைவில் இவர்களது உறவில் விரிசல் விழத் தொடங்கியது. காரணம், நீ அப்படி… இப்படி என விமலா புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என அவன் எதிர்பார்க்கத் தொடங்கினான். அப்படி செய்யாத போது, அவளை மட்டந்தட்டினான். இந்த கொடுமைக்கு குமாரே பரவாயில்லை என தோன்றியது அவளுக்கு.  ஆனால் இந்த அறிவு வருவதற்குள்ளாக, அவள் அவனிடம் படாதபாடுப்பட்டிருந்தாள். திருமண வாழ்க்கையின் யதார்த்தை எப்படி கையாள்வது என யோசிக்கத் தொடங்கினாள்.

ரொமான்ஸ் ஒன்லி:

திருமணமாகி வாழ்க்கை சுமூகமாக சென்றுகொண்டிருந்தாலும், சிலருக்கு திடீரென வேறு ஒருவர் மீது அதீத அன்பு ஏற்படும். காதலுக்கு முந்தின நிலை என்று சொல்லலாம். அதாவது இவர்கள் செக்ஸை தவிர்த்து, ஒரு தம்பதியருக்கு இருக்கக்கூடிய எல்லாவிதமான நெருக்கத்தையும் கொண்டிருப்பார்கள்.  துணை மீது கொண்டுள்ள, அதே பாசத்தை அவரிடமும் காட்டுவார்கள். அதிகமான அக்கறை, அளவுகடந்த நேசம் கொள்வது என இருந்தாலும், உடலுறவு மட்டும் இருக்காது.

‘இது காமம் இல்லை, இது காதல் இல்லை, இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை’ என்ற பாடல் வரி ரித்விக்குக்கும், லிண்டாவுக்கு கச்சிதமாக பொருந்தும். இருவரும் ஒரே அலுவலகத்தில், ஒரே புராஜெக்ட்டில் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். ரித்விக்கிற்கு திருமணாகி இரண்டு ஆண்டுகளே ஆகிறது. லிண்டாவுக்கு திருமணம் முடிந்து, 5 ஆண்டுகளாகிறது. இருவருமே தங்கள் இணையர்கள் மீது அன்பு கொண்டவர்கள் தான். அலுவலகத்தில் இருவரும் சேர்ந்தே பணியாற்றுகிறார்கள் என்பதால் அதிக நேரம் பேசுவதும், நேரம் செலவழிப்பதும் அவர்களின் நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டுவந்தது. நட்பையும் தாண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்பது இருவருமே உணர்ந்தாலும், அந்த உறவை முறிக்க மனமில்லை.

இவர்கள் இருவருக்கும் மனதளவில் இருக்கும் நெருக்கம் உடலளவில் இல்லை என்பதே உண்மை. மணவாழ்க்கையில் எந்த பிரச்னையும் இல்லை என்பதால், கமிட்மென்ட் எனும் கோட்டை தாண்டி இருவராலும் வரமுடியாது. அதே நேரம் இந்த உறவையும் விடமுடியவில்லை.

எல்லாமே குடும்பத்திற்குள்:

குடும்பத்திற்குள்ளேயே ஏற்படும் ‘தகாத’ உறவுகள். திருமணத்திற்கு முன்போ, பின்போ நம்முடைய நெருக்கமான உறவினர்கள் யார் மீதோ ஈர்ப்பு ஏற்படலாம். அவர்களுக்கும் நம்மீது அதே ஈர்ப்பு இருந்திருக்கலாம்.  குடும்பத்திற்குள்ளேயே ஏற்படும் உறவுகளில் எந்த சிக்கல்லோ, பிரச்னையோ பெரிதாக வெடிக்காது. ஏனெனில் அடிக்கடி சந்திப்பது, பேசுவது இதெல்லாம் பிரச்னை ஆவதில்லை. உறவுக்காரர்கள் என்பதால் இந்த உறவை எளிதில் கண்டுபிடிக்கவும் முடியாது. குடும்பத்தினர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சாதகமாக்கி இவர்கள் காதலில் திளைப்பார்கள்.

திருமணமான நவீன், மனைவின் தங்கையோடு கடந்த இரண்டு வருடமாக தொலைபேசி மூலமாக உறவை வளர்த்து வந்தான்.  நேரில் சந்திப்பதில் தொடங்கி, உடலுறவு வரை வளர்ந்தது. இவர்கள் கொண்டுள்ள பழக்கம் குடும்பத்தில் யாருக்குமே தெரியவில்லை. ஏனெனில் நவீனின் மனைவி, அவனை அதிகமாக நம்பினாள். அதனால் தன் தங்கையிடம் பேசுவதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுவே அவளுக்கு வினையானது. இந்த மாதிரியான உறவில் எதிர்பார்ப்போ, பழிவாங்கலோ இருக்காது. முடிந்தவரை இன்பத்தை மட்டும் அனுபவிக்க தோன்றும். சின்னதாக பிரச்னை வந்தால் கூட உறவு சுலபமாக விலகிவிடும்.

சிக்கல் உறவுகள்: 

மாய எண்ணங்கள் மற்றும் கற்பனைகளோடு, சில மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அப்படித்தான் சிலருக்கு ‘தகாத’ உறவும் அமைந்துவிடும். அதாவது இவர்கள் திருமணமான நபருடன் உறவு வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் கொண்டிருப்பார்கள். அதாவது, இவர்கள் உறவு வைத்திருக்கும் அந்த நபர் தனது துணையை விட்டுவிட்டு, இவர்களை திருமணம் செய்து கொள்வார் என உறுதியாக நம்புவார்கள். அதனால் இறுதிவரை சிக்கலிலேயே இந்த உறவு தொடரும். இந்த மாதிரியான உறவுகளில் பெண்களே அதிகமாக பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.  மணமான ஆண்கள் விரிக்கும் மாய வலை இது என அவர்கள் எச்சரிக்கின்றனர். திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசை காட்டி உறவை வளர்க்கும் ஆண்கள், பெரும்பாலும் தனது திருமணத்தை முறித்துக் கொள்வதில்லையாம்.

ஜெர்மிக்கு விவாகரத்தாகி ஏழு வருடங்கள் ஆகிறது. தற்போது திருமணான பிரேமுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மிக்கு இந்த உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விருப்பம். ஆனால் அவனோ இந்த உறவை ரகசியமாகவே வைத்துக் கொள்ளவே நினைக்கிறான். ஆனால் மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு பிரேம் தன்னோடு சேர்ந்து வாழ்வான் என்கிற எண்ணத்திலேயே, ஜெர்மி அவனோடு பழகுகிறாள். இதுவே இவர்கள் இருவருக்கும் இடையிலான சிக்கல். இந்த மாதிரியான உறவுச் சிக்கலுக்கு தீர்வென்பதே கிடையாது. இறுதிவரை இல்லற வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே ஜெர்மி இருக்க, அதை தட்டிக்கழித்து இன்பத்தை மட்டும் பெறவே பிரேம் நினைக்கிறான்.

பிளாஷ்பேக் உறவுகள்: 

திருமணத்தை மீறிய உறவுகளில், மிகவும் ஆபத்தானது இதுவே. இந்த மாதிரியான உறவுகள் எளிதில் முறியாது. ஏனெனில் இவர்கள் பூர்வஜென்ம பந்தம் என பிதற்றுவார்கள்.  உணர்வுகள், உடல், மனம், ஆத்மா, எண்ணங்கள் என அனைத்துமே இந்த உறவில் உயிர் பெறுவதாகச் சொல்வார்கள்.  இந்த மாதிரியான உறவுகளை அத்தனை சுலபமாக தகர்த்துவிட முடியாது. இந்த உறவில் நீட்டிக்க, நடைமுறைக்கு சாத்தியமில்லாத நியாயங்களைக் கொண்டிருப்பார்கள்.

மாலா மற்றும் மோகன் இருவரும் ஐ.டி ஊழியர்கள். மோகனை பார்த்த கணத்திலிருந்தே ஒருவித பிணைப்பை மாலா உணரத் தொடங்கினாள். பழகத் தொடங்கிய சிறிது காலத்திலேயே உடல் பொருள் ஆவி அனைத்துமாய் இருவரும் சரணடைந்தார்கள். முந்தின ஜென்மங்களின் தொடர்ச்சியாக இருவரும் வாழ்வதாக நம்பினார்கள். மஹதீரா என்ற தெலுங்கு படத்தில் வருமே…அதே மாதிரி. எந்த சூழலில் பிரிவதற்கு இவர்கள் தயாராக இல்லை. ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தால் வாழ்க்கையில் சூன்யம் பிடிக்கும் என நம்பினார்கள். இந்த பிடிப்பு அவர்களின் சொந்த வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கியது. ஆனாலும் இந்த உறவை விட்டுவிட அவர்கள் தயாராக இல்லை.

தீர்வுகள்: உளவியளாலர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த மாதிரியான ‘தகாத’ உறவுகள் ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். வாழ்க்கையின் மீது சலிப்போ, பயமோ, வெறுப்போ, வெற்றிடமோ ஏற்படும் போது, எளிதில் மற்றொரு உறவில் சிக்கிக் கொள்கிறோம். தெரிந்தோ, தெரியாமலோ இந்த உறவு ஏற்படுகிறது.  எப்படி ஏற்பட்டாலும் இந்த மாதிரியான ‘தகாத’ உறவுகள் சிக்கலானதே. அதற்கு ஆயுளும் குறைவே. சிறிது கால சந்தோஷத்திற்காக, பலரும் தம் நிம்மதியை பணயம் வைக்கத் துணிகின்றனர்.

திருமணம் என்கிற கட்டமைப்பே ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து உடல், மன அளவில் சேர்ந்து வாழ்வுதற்கும் , மகிழ்ந்து களிப்பதற்குமே. இந்த உறவையும் தாண்டி, ஒரு புது உறவுக்குள் செல்கிறோம் என்றால், அதன் சூழ்நிலை என்னவென்பதை கவனத்தில் கொண்டே பேச வேண்டும். சில சூழல்களில் ‘தகாத’ உறவுகள், வாழ்க்கை குறித்த புரிதலை தருவதால் ஆரோக்கியமானது  என்கிறார்கள் உளவியலாளர்கள்.

வெறுப்போடும், காழ்புணர்ச்சியோடும், கொடுமைப்படுத்தும் ஒரு இணையரோடு வாழ்க்கை நடத்தும் ஒருவர், அதிலிருந்து விடுபடுவதற்கு இந்த மாதிரியான உறவுகள் சில இடங்களில் கைகொடுக்கும்.  அதுமட்டுமின்றி, வாழ்க்கையில் ஏற்படும் வெறுமையை, சலிப்பை போக்கி, புத்துணர்வை சில உறவுகள் தரும். புதுப்பிக்கப்பட்ட வாழ்க்கையில், தங்களின் இணையரோடு அதே பழைய வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழமுடியும். விவாகரத்தாகிவிட்ட ஒருவர், ‘நமக்கான வாழ்க்கை முடிந்தது’ என எண்ணும் வேளையில், இந்தமாதிரியான உறவுகள் புது எண்ணங்களையும் சிந்தனைகளையும் மனதிற்குள் ஏற்படுத்தும்.  எனவே, இந்தமாதிரியான சில காரணத்திற்காக மட்டும், ‘தகாத’ உறவுகளை ஆரோக்கியமானது என அவர்கள் சுட்டிக் காட்டினாலும், அதை தொடர்வது என்பது சிக்கலை உருவாக்கும் என்கிறார்கள்.

ஏதோ ஒரு காரணம் தான் ஒருவரை ‘தகாத’ உறவுக்குள் தள்ளுகிறது. அந்த காரணமே சில நேரங்களில் நமக்கு சிக்கலாக மாறும். ‘தகாத’ உறவுகள் இணையரோடு பிரச்னையை உண்டாக்கும். சண்டைகள் நீளும், கோபங்கள் உக்கிரமாகும். இறுதியில் விவாகரத்து வரை கொண்டுச் செல்லும். ரகசிய உறவு என்பதே, மற்றவர்களுக்கு தெரியாமல் உங்களை நீங்களே மறைத்து வாழ்வது என்பது தான்.

ஒரு தவறை மறைக்க நிறைய தவறுகள் செய்யவேண்டியிருக்கும். நிறைய பொய்கள் சொல்வீர்கள். அதனால் பதட்டம், மன அழுத்தம் என வாழ்க்கையே வலிகள் நிறைந்ததாக மாறும்.  இந்த மாதிரியான உறவுகள், உங்களை ஓர் மாய வலைக்குள் சிக்க வைக்கும். காமத்திற்காக ஒருவருடன் கொண்ட உறவினால், வாழ்க்கையின் உண்மையான சந்தோஷங்களை அனுபவிக்க முடியாமல் போகும். குடும்பத்தோடு நேரம் செலவிட முடியாது. பிடித்த இசையை கேட்கமுடியாது. கிரிக்கெட் விளையாடமுடியாமல் போகும். ஆசையாக வளர்த்த செடிக்கு தண்ணீர் விட மறப்பீர்கள். அந்த செடியும் உங்களைப் போல பட்டுப்போகும்.

திருமணத்தை மீறிய உறவுகள் சிக்கலே. திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் உருவாகும் தான். அத்தருணங்களில் நிபுணர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம். வெளிநாடுகளில் ரிலேஷன்ஷிப் கவுன்சலிங் பிரபலமாக இருக்கிறது. ஆனால் நம் ஊரில் இன்னும் தொடங்கக் கூட இல்லை. கணவன் மனைவிக்குள் பிரச்னை வரும் போது உறவுகளின் ஆலோசனையோடு நிற்காமல், நல்ல குடும்ப நல ஆலோசகரிடம் கலந்து பேசுங்கள்.

கணவன் மனைவி பிரச்னைக்கு எதிலுமே தீர்வு கிடைக்கவில்லை எனில், விவாகரத்து செய்துவிடுவதுதான் முறையானது என்கின்றனர் நிபுணர்கள். அதை விடுத்து ஒரு உறவை உயிர்ப்போடு வைத்துக் கொண்டே, இன்னொன்றை தேடுவது நிம்மதியை ஒட்டுமொத்தமாக பறித்துவிடும்.  இணையருடன் ஒற்றுமையாக, விட்டுக் கொடுத்து வாழுங்கள். முடியவில்லையென்றால் விலகிவிடுங்கள். ஒருபோதும் இணையருக்கு துரோகம் செய்யாதீர்கள். மனதிற்குப் பிடித்த ஒருவருடன் மனதளவிலும் உடளலவிலும் நேர்மையாகவும், உண்மையாகவும் வாழும் போது உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடைவீர்கள்.

– முத்து பகவத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g