அரபி கடலோரம் பைக் ரைட் போலாமா?

அரபி கடலோரம் பைக் ரைட் போலாமா?

கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து, கோவா வரை பயணிக்கும்போது பார்க்க வேண்டிய இடங்கள், நிலத்தோற்றங்கள், தேர்வு செய்ய வேண்டிய காலநிலை ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு பைக் ரைடு போகும் அனுபவம் ஆகச்சிறந்த சுகம்தானே!

கொங்கன் நெடுஞ்சாலை

மகாராஷ்டிரா மாநிலம், தெற்கு மும்பையின் பன்வெல் நகரத்திலிருந்து, இந்தியாவின் தெற்கில் கடைக்கோடி எல்லையான கன்னியாகுமரி வரை, இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இது, மங்களூருக்கும் கோவாவுக்கும் இடையே, அரபிக்கடலுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கும் இடையே செல்கிறது. கர்நாடகாவின் மரவந்தி, கார்வார், கோவா மாநிலத்தின் மாஷேம், மர்மகோவா ஆகிய பகுதிகளில் கடற்கரைக்கு மிக அருகில் இந்த சாலை செல்கிறது. கடற்காற்றையும், மலைகளின் குளிர்ச்சியையும் ஒருசேர அனுபவிக்க முடியும் என்பதால்தான், பைக் ரைட் செல்பவர்களின் பிரைம் சாய்ஸ் ஆக இருக்கிறது, NH 66.

சரியான காலநிலை

தென்மேற்கு பருவக்காற்று காலமான ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பலமான மழை பெய்யும் என்பதால், இந்த சாலையில் பயணிப்பது ஆபத்து. மற்ற மாதங்களில் தாராளமாக பயணம் மேற்கொள்ளலாம். பிப்ரவரி முதல் மே மாதம் வரை, பகலில் வெயில் கூடுதலாக இருக்கும். எனவே அக்டோபர் முதல் ஜனவரி வரை பயணம் செய்தால், அது உண்மையிலேயே இனிமையான பயணமாக அமையும்.

பார்க்க வேண்டிய இடங்கள்

மங்களூரில், 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மங்களதேவி கோவில் உள்ளது. சக்தியை கடவுளாகக் கொண்ட இந்த கோவிலின் காரணமாகவே, இந்நகரத்துக்கு ‘மங்களூரு’ என்ற பெயரும் வந்தது. மங்களூர் நகரத்தில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள பனம்பூர் கடற்கரை, சிறந்த பொழுதுபோக்கு மையம். இங்கு, ஜெட் ஸ்கை ரைடு, படகுச் சவாரி, டால்பின்களைப் பார்வையிடுதல் ஆகியவற்றை அனுபவிக்கலாம். மேலும், சுரத்கல் கடற்கரை, பிலிகுலா வனவிலங்கு சரணாலயம், செயின்ட் அலாய்சிஸ் தேவாலயம் ஆகியவை மங்களூரில் பார்க்க வேண்டியவை. உடுப்பி நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில், 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

தனித்துவமான பாறைகள் உருவாகும் செயின்ட் மேரிஸ் தீவு, புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம். கோகர்ணா கடற்கரையில், 123 அடி உயரத்தில் சிவபெருமான் தியானம் செய்வது போன்ற மிகப் பிரம்மாண்டமான சிலை உள்ளது. ஓம் வடிவத்தில் இங்கொரு கடற்கரை உள்ளது. காளி ஆற்றின் கழிமுகப் பகுதியான தேவ்பாக் தீவில், ஓய்வெடுக்க அருமையான கடற்கரை ரிசார்ட்கள் உள்ளன. கார்வார் நகரம் இந்தியாவின் கடற்படை தளம் அமைந்துள்ள ஒரு கேந்திரமான இடம். கர்நாடகாவுக்கும் கோவாவுக்கு இடையில் அமைந்துள்ள ‘தூத்சாகர் அருவி’, நிச்சயம் மனதைக் கொள்ளை கொள்ளும்.

கோவாவில் வரலாற்று சிறப்புமிக்க அகாடா கோட்டை, பஸிலிகா ஆப் பான் ஜீசஸ் தேவாலயம், ஆகியவற்றைப் பார்க்கலாம். கோவாவில் சப்போரா கோட்டை, அஸ்வெம் கடற்கரை, அர்ஜுனா கடற்கரை, வகடோர் கடற்கரை, மிராமர் கடற்கரை, டையஸ் கடற்கரை, அகோன்டா கடற்கரை, ஹார்மல் கடற்கரை, கோல்மா கடற்கரை போன்ற எண்ணற்ற கடற்கரைகள் உள்ளன. சுற்றுலா என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று முன்பதிவு செய்து வைத்த இடத்தில் தங்கி, குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் திட்டமிட்ட இடங்களைப் பார்த்துவிட்டு திரும்புவது. பயணம் என்பது வழியில் ஏற்படும் சவால்களை சந்தித்து, அனுபவங்களை உள்வாங்கிச் செல்வது. நீங்கள் எதிர்பார்க்காத இடம்கூட, உங்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும். பார்க்கும் அத்தனையும் புதுமையாக இருக்கும். பயணித்துப் பாருங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g