நினைவெல்லாம் ரேஷ்மி; கனவெல்லாம் பாரீஸ்! – பாபி சிம்ஹா

நினைவெல்லாம் ரேஷ்மி; கனவெல்லாம் பாரீஸ்! – பாபி சிம்ஹா

ஒரு நல்ல ஹீரோவாக, வில்லனாக தமிழ் திரை உலகின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் பாபி சிம்ஹா. திருமணத்துக்கு பிறகு முகப்பொலிவும், அழகும் பாபி முகத்தில் கொஞ்சம் அதிகமாகவே கூடி இருக்கிறது. பாபி வில்லன் கதாபாத்திரம் எடுத்து நடித்திருக்கும், சாமி 2 திரைப்படத்திற்காக எல்லோரும் வெயிட்டிங். சமீபத்தில் அவரிடம் மேற்கொண்ட ஒரு குட்டி சேட்டிங்கில், தனது மறக்க முடியாத பயண அனுபவத்தை பற்றியும்  அங்கு அவர் பார்த்து வியந்த, மகிழ்ந்த விஷயங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். 

2017-ம் ஆண்டின் முதல் நாள் எங்களுக்கு ஐரோப்பிய நாடுகளில்தான் விடிந்தது. கிறிஸ்துமஸ் நாட்களில் ஐரோப்பாவில் இருப்பது மாதிரி திட்டமிட்டு, முன்னதாகவே நானும் ரேஷ்மியும் கிளம்பிவிட்டோம். ஒவ்வொரு புத்தாண்டுக்கும், ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்வதை நாங்கள் வழக்கமாக வைத்திருக்கிறோம்.  ஐரோப்பாவை என்னுடைய கனவுத்தேசம் என்றும் சொல்லலாம். நீண்ட நாட்களாக, ஐரோப்பாவுக்கு பயணிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அந்த கனவு, ஆசை எல்லாமே கடந்த 2017-ல் நடந்தேறியது. ஐரோப்பாவில் இருந்த அந்த பத்து நாட்களுமே கொண்டாட்டமும், குதூகலமும் மட்டுமே எங்களைச் சூழ்ந்திருந்தது.

உலகத்திலேயே விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் நாம் தான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் விருந்தோம்பல் பண்புகளில் மிகச் சிறந்தவர்களாக ஐரோப்பியர்களை கண்டது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. உணவு விஷயத்தில் நாங்கள் இருவருமே மிகவும் கவனமாக இருப்போம். சுற்றுலாவுக்கு சென்றிருக்கும் இடத்தில் கண்டதை சாப்பிட்டு, வயிறு பிரச்னைகள் வரக்கூடாது என்பதே அதற்கு காரணம். ரேஷ்மியை விட, நான் அதில் அதிக கவனம் கொள்வேன். நான் அதிகமாக சைவ உணவுகளைத்தான் ருசித்து மகிழ்வேன். ஆனால், ஐரோப்பா முழுவதும் அசைவ உணவுகளே நிரம்பி இருந்தன. அதனால் உணவுக்காக ரொம்பவும் கஷ்டப்பட்டேன். கடைசியாக நம்மூர் சாம்பார் சாதம் போல, ஒரு சைவ உணவை கண்டுபிடித்தேன். அதையே கடைசி வரையிலும் ஃபாலோ செய்தேன்.

இன்னும் சில சைவ உணவுகள் இருந்தாலும், எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால், ஸ்பெகடி அந்த நாட்டில் எனக்கு பிடித்த மாதிரி இருந்தது. ஆனால், ரேஷ்மிக்கு அப்படியில்லை. பிடித்த உணவுகளை, ஐரோப்பாவின் சுவையை அப்படியே வெளுத்து வாங்கினாள். ரேஷ்மி ஒரு ஷாப்பிங் பிரியை. அதனால் புகுந்து விளையாடினாள். என்னை பொறுத்தவரை மற்ற நாடுகளை விட, ஐரோப்பாவில் பொருட்களின் விலை அதிகம்தான். ஆனால்  தரம் ஃபர்ஸ்ட் கிளாஸ்.

கனவு தேசம் பாரீஸ்!
பாரீஸ் நகரத்தை பார்க்க வேண்டும் என்பது, பெரும்பாலானவர்களின் வாழ்க்கை லட்சியமாக இருக்கும். ஒரு இடத்துக்கு போவதையா பெரும் கனவாக, லட்சியமாக கொள்வது என நானும் நினைத்ததுண்டு. ஆனால் பாரீஸின் ஈஃபிள் டவர் முன்பாக போய் நின்றதும்., அந்த எண்ணத்தை நான் மாற்றிக் கொண்டேன். ஈஃபிள் டவர் மீது ஏறி, அதன் உச்சியில் நின்று பாரீஸ் நகரத்தை பார்க்கும் அனுபவம் வாய்த்தது, எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். சூரியன் உதயமாகும்போது, ஈஃபிள் டவரின் உச்சியில் நாங்கள் இருவரும் நின்று கொண்டிருந்தோம். அவ்வளவு உயரத்தில் இருந்து சூரியன் உதிக்கும் அழகை பார்த்தது, எங்கள் இருவருக்கும் எமோஷனலான தருணம். என் வாழ்வில் என்றைக்கும் அதை மறக்க முடியாது. 

பாரீஸ் என் கண்களுக்கு சாதாரணமாய் தெரியவில்லை, தேவலோகமாகத்தான் தெரிந்தது. நியூ இயர் இரவுகளில் நகரம் மொத்தமும், அலங்கார விளக்குகளில் மின்னினால் எப்படி இருக்குமென்று நீங்களே நினைத்துப்பாருங்கள்! அந்த காட்சிகள் என் கண்களில் அப்படியே இருக்கிறது. இப்போதும் கண்களை மூடி கனவில் மிதக்கலாம் போல இருக்கிறது. “ஈஃபிள் மேல ஏறி நின்னு சிலுத்துக்கின்னு, என் மனசு சிரிக்குது; காதல் என்ன கூட்டிக்கின்னு சைலன்ட்டுகா வானத்துல பறக்குதே” என பாடல் பாடத் தோன்றுகிறது. 

நியூ இயர் இரவு பார்ட்டியில், ஊர் பேர் தெரியாத நபர்களுடன் எல்லாம் ஆடிப் பாடி மகிழ்ந்த அனுபவம் அலாதியானது. அந்த ஒரு இரவு எனக்கு ஏராளமான நண்பர்களை சம்பாதித்துக் கொடுத்தது. பொதுவாக இரவு பார்ட்டிக்கு பிறகு எல்லோரையும் மறந்துவிடுவோம். ஆனால் ஆடிப்பாடி மகிழ்ந்த அவர்கள், அடுத்த நாள் காலையும் என்னிடமும், ரேஷ்மியிடமும் அன்பாக பேசி உபசரித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இனி பாரீஸுக்கு போனால், அங்கேயும் எனக்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு பெருமிதமே.

பாரீஸ் நகரத்தின் கிறுஸ்துமஸ் மற்றும் நியூ இயர் கொண்டாட்டங்களை ஒரே சமயத்தில் பார்த்தோம். அங்கு வாழும் மக்களின் கலாச்சாரம் வேறாக இருந்தாலும், எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல், தெருவில் இறங்கி அவர்களின் வாழ்க்கையை கொண்டாடுகின்றனர். அவர்களும் மகிழ்ந்திருந்து, பிறரையும் மகிழ்விக்கின்றனர். இது பார்ப்பதற்கு பேரானந்தமாக இருந்தது. இன்னொரு முறை வாய்ப்பு கிடைத்தால், நிச்சயமாக பாரீஸ் சென்றுவர வேண்டும்.

அதேபோல, இத்தாலியின் ரோம் நகரமும் கம்பீரமாக காட்சியளித்தது. அந்த நகரத்தில் இருப்பவை வெறும் கட்டடங்கள் அல்ல, அவை கலையின் மறு உருவம். அதில் என்ன ஆச்சர்யம் எனில், பழைய கட்டடங்களை கூட, பராமரித்து புத்தம் புதிதாக வைத்திருக்கிறார்கள். சுற்றுலா பயணிகளுக்கு அவை அங்கு கண்கொள்ளா காட்சிகளாக இருக்கின்றன. ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கும் கற்சிலைகளை காணும்போது, நிஜமான மனிதர்களே நிற்பது போல இருந்தது. தத்ரூபமான சிலைகள் பிரமிப்பை உண்டாக்கின. . சிலைகள்தானே என தொட்டுப் பார்த்தால், சில இடங்களில் உண்மையான மனிதர்களே சிலைகளாக நின்றுகொண்டிருக்கிறார்கள். இது அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. அப்படி அசையாமல் நிற்கக் கூடிய அவர்களின் திறமை அசாத்தியமானது. 

ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவின் கடற்கரைகளை பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில் நானும் ரேஷ்மியும் அதிக நேரம் செலவிட்டது அங்கேதான். நாங்கள் இருவரும்  அந்த கடற்கரைகளில் எங்களையே தொலைத்துவிட்டோம் என்றும் சொல்லலாம். அப்படி ஒரு ஆனந்தத்தை எங்கள் இருவருக்கும் மாற்றி மாறி வழங்கியது அழகான, தூய்மையான அந்த கடற்கரை.  இப்படி, அங்கிருந்த எல்லா நாட்களையும் ஆனந்தமாக கொண்டாடி மகிழ்ந்து, “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா; அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா?” என பாட்டு பாடிக் கொண்டே இந்தியாவுக்கு வந்து சேர்ந்தோம்.

– செ. கார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g