கலக்கல் கலம்காரி டிரெண்ட்: சென்னையில் எங்கே வாங்கலாம்!

கலக்கல் கலம்காரி டிரெண்ட்: சென்னையில் எங்கே வாங்கலாம்!

பெண்கள் ஃபேஷன் அப்டேட்டில் எப்போதும் விழிப்புடன் இருக்கின்றனர். அந்த வகையில் வார்ட்ரோப் அப்டேட் டிரெண்டில் தற்போது முதலிடம் பிடித்திருப்பவை, கலம்காரி ஆடைகள். கலை ரசனைக் கொண்டோர் மட்டுமே கலம்காரி விரும்பி அணிந்த நிலை மாறிவிட்டது. தற்போது மார்டன் பெண்களும் கலம்காரியை நாடுகின்றனர்.

இதன் பரிணாம வளர்ச்சி பலாஸோ வரை எட்டியிருப்பது ஆச்சரியமே!  கல்லூரி பெண்கள் தொடங்கி, அலுவலகப் பெண்கள் வரை, கலம்காரி ஆடைகளை மிக நேர்த்தியோடு அணிந்து உலா வருகின்றனர். பெண்களின் மனம் கவர்ந்த கலம்காரி பற்றி, மேலும் சில தகவல்கள் இதோ…

கலம் என்பது பேனாவையும், காரி என்பது கலையையும் குறிக்கிறது. ஒரிஜினல் கலம்காரி ஃபேப்ரிக்குகள், ஆந்திர மாநிலம் காலஹஸ்தி, மற்றும் மச்லிப்பட்டினம் ஆகிய இடங்களில் மட்டுமே பிரதானமாக தயாரிக்கப்படுகிறது.  காலஹஸ்தியில் கிடைக்கக் கூடிய கலம்காரி ஆடைகள், நேர்த்தியாகவும் தரமானதாகவும் வடிவமைக்கப்படுவதாகக் கூறுகிறார், பேஷன் டிசைனர் சுமதி ராமகிருஷ்ணன்.

“கலம்காரி துணி தயாரிப்பு முறை மிகவும் கடினமானது. முதலில் பருத்தித் துணியை, கொழுப்பு நிறைந்த மாட்டுப் பாலில் ஊற வைத்து உலர்த்திய பின்னரே, கலம்காரி டிசைன்களை இடத் தொடங்குவர். காலஹஸ்தி வடிவமைப்புகளில் அதிகமாக மயில் , செடி, கொடி, பூக்கள் என இயற்கை குறியீடுகள் நிறைந்திருக்கும்.  பூமியின் இயற்கை வண்ணங்களான பச்சை, நீலம் போன்ற நிறங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். காய்கறி மற்றும் பூக்களின் சாற்றில் இருந்து இந்நிறங்கள் எடுக்கப்படுகின்றன,” என்கிறார் சுமதி.

கலம்காரி ஆடைகள் இயற்கை சாயத்தில், வெளிர் நிறங்களில் இருந்து, அத்துடன் கொழுப்பு நிறைந்த பால் மணமும் இருந்தால், அவை ஒரிஜினல். இந்த  ஆடைகளை பாதுகாப்பது அத்தனை சிரமம் இல்லை எனச் சொல்லும் சுமதி, சில குறிப்புகளையும் அளிக்கிறார்:

ஆடையைத் துவைக்கும் போது, சூடான வெந்நீரில் முக்கி எடுக்க வேண்டும். இதனால் நிறம் மங்காமல் கட்டுப்படுத்த முடியும். புடவையை வார்ட்ரோப்பில் மடித்தவாக்கில் பல நாட்கள் வைக்காமல், அடிக்கடி மாற்றி மடித்து வைத்தால் நீண்ட நாட்கள் உழைக்கும். அயர்ன் செய்யும் போது, புடவையை பின்புறமாக வைத்து தேய்க்க வேண்டும்,’’

சென்னையில் உள்ள சிறந்த கலம்காரி பொட்டிக்குகள்

ஐவரி டிசைன் ஸ்டுடியோ: 

கோபாலபுரத்தில் உள்ள ஐவரி டிசைன் ஸ்டுடியோவில், காலஹஸ்தியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, கலம்காரி ஆடைகள் கிடைக்கின்றன. குர்தா மெட்டீரியல், துப்பட்டா, புடவைகள் ஆகியவை கிடைக்கின்றன. “முற்றிலும் கையில் வரையப்பட்ட கலம்காரி ஆடைகளை விற்பனை செய்வதே எங்களின் ஸ்டைல்,’’ என்கிறார், பொட்டிக்கின் உரிமையாளர் சுபஸ்ரீ நடேசன்.

ஆரம்ப விலை: 1,500/-

பூணம் பொட்டிக்

அகரம் பகுதியில் இருக்கிறது பூணம் பொட்டிக். இங்கு பிளாக் பிரின்ட் மற்றும் ஸ்கிரீன் பிரின்ட்கள் கொண்ட கலம்காரி ஆடைகள், குறைந்த விலையிலிருந்து கிடைக்கிறது. மச்லிபட்டினத்தின் கலம்காரி ஆடைகளே, இவர்களின் தனிச்சிறப்பு. குர்தா, முழு நீல கவுன், ஸ்கர்ட், ஷ்ரக், புடவை, சுடிதார் என அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. “பெங்கால் ஆடை வடிவமைப்பாளர்களை கொண்டு வடிவமைப்பதால் தான், எங்களின் தயாரிப்புகள் தனித்துவமாக தெரிகின்றன.,’’ என்கிறார், கடையின் உரிமையாளர் பூணம்.

ஆரம்ப விலை; 700/-

யுட்டி டிசைனர் ஹவுஸ்

கஸ்டமைஸ்டு முறையில் கலம்காரி ஆடைகள் வடிவமைத்துக் கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது,  திருவான்மியூரில் உள்ள யுட்டி டிசைனர் ஹவுஸ். புடவை, சுடிதார், முழு நீள கவுன் போன்ற ஆடைகளும், கலம்காரி வடிவமைப்பில் இங்கு கிடைக்கின்றன. “ஆடை வடிவமைப்பு மற்றும் தையல் முறையே எங்களின் ஸ்பெஷல் என்கிறார்,’’ யுட்டியின் உரிமையாளர், சுமதி ராமகிருஷ்ணன்.

ஆரம்ப விலை: 2,000/-

 ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g