இந்தியாவில் ‘ஹாட் ஏர் பலூன்’ சவாரிக்கு பிரபலமான இடங்கள்

இந்தியாவில் ‘ஹாட் ஏர் பலூன்’ சவாரிக்கு பிரபலமான இடங்கள்

இந்தியாவின் மிக அழகான, வேறுபட்ட நிலத்தோற்றங்களை, பறவையைப் போல வானிலிருந்து பார்த்து மகிழ சிறந்த வழி, வெப்பக்காற்று நிரப்பப்பட்ட பலூனில் பறப்பதுதான். இந்த சாகச விளையாட்டு அண்மைக்காலமாக இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்தியாவில் எங்கெல்லாம் பலூன் சாகச சவாரி நடத்தப்படுகிறது, அங்கு என்ன பார்க்கலாம், எவ்வளவு செலவாகும், அதை வாழ்நாள் அனுபவமாக மாற்றிக் கொள்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

வானில் வெகு உயரத்தில், வண்ண வண்ண வெப்பக்காற்று (ஹாட் ஏர்) பலூன்களில் பறந்துகொண்டே சுற்றித் திரிய வேண்டுமென்பது, நம் குழந்தைப் பருவத்து ஆசைகளில் ஒன்றாக இருக்கும். இது ஓர் அற்புதமான அனுபவம். திறந்தவெளிக் காற்றில் உயரத்தில் இருந்துகொண்டு, அற்புதமான இயற்கை அழகையும், மனிதரின் வாழ்விடங்களையும் காணும் இன்பம், வானைக் கிழித்துக்கொண்டு பலூனில் அமர்ந்துகொண்டு காற்றில் மிதப்பது, என சுகமான அனுபவமாக இருக்கும். இந்தியாவில் இந்த விளையாட்டு, இப்போதுதான் பிரபலமாகத் தொடங்கி இருக்கிறது. சாகச விளையாட்டு என்றாலும், அலட்டிக்கொள்ளாமல் அனுபவிப்பது, பலூனில் பறப்பதில் மட்டுமே சாத்தியம். பரபரப்பு வாழ்க்கையிலிருந்தும், போரடிக்கும் வாழ்க்கையிலிருந்தும், கொஞ்ச நேரமேனும் தப்பித்திருக்க இது உதவும்.

ஜெய்ப்பூர்

பிங்க் நகரத்தின் மலைக்க வைக்கும் அழகை, 360 டிகிரி கோணத்தில் கண்டுகளிக்க உதவும். ஆம்பர், நஹர்கார் மற்றும் ஜெய்ஹார் கோட்டைகளையும், ஆரவல்லி மலைத்தொடரின் அழகையும், ராஜஸ்தான் கிராமங்களையும் கண்டுகளிக்க உதவும். ஸ்கை வால்ட்ஸ், அட்வென்ச்சர் நேஷன், மற்றும் டைகர் பலூன் சபாரிஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த விளையாட்டை ஏற்பாடு செய்கின்றன.

கட்டணம்: பெரியவர்களுக்கு- ரூ 13,000/- முதல்

பொள்ளாச்சி

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதத்தில் சர்வதேச பலூன் திருவிழாவை நடத்துகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் செறிவான இயற்கையை, பசுமையை, பிரமிக்க வைக்கும் நிலத்தோற்றங்களை, வானில் இருந்து பார்க்கும் போது பேரழகாகத் தெரியும். இத்துடன் நிறைய கலாச்சார நிகழ்ச்சிகளும், இசை மற்றும் உணவுத் திருவிழா நிகழ்ச்சிகளும் உண்டு.

கட்டணம் : அனுமதி இலவசம் என்றாலும், பலூனில் பயணிக்க கட்டணம் உண்டு. விவரங்களுக்கு: http://www.tnibf.com/

புஷ்கர்

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள, தார் பாலைவனத்தின் அழகிய மணற் குன்றுகள், சுற்றியுள்ள நீர்நிலைகள், கிராமங்கள், கலைநயம் கொண்ட கோவில்கள், அழகிய தோட்டங்கள், ஒட்டகங்கள், என பாலை நிலத்தை சுற்றியுள்ள அற்புத அழகை பலூனில் பறந்தபடி பார்க்கலாம். புஷ்கர் நகரில் நடக்கும் பலூன் திருவிழா மிகவும் பிரபலம். அக்டோபர், நவம்பர் மாதங்கள் இதற்கு சரியான சீசன்.

கட்டணம்: சிறுவர்களுக்கு (5-12 வயது) – ரூ. 6,000 முதல் ; பெரியவர்களுக்கு : ரூ.12,000/- முதல்.

லோனாவாலா

மும்பையில் இருந்து, 100 கி.மீ.,க்கு குறைவான தொலைவில் இருக்கும் லோனாவாலா, இயற்கையின் தொட்டில் என்று சொல்லலாம். அடர்த்தியான காடுகள், பசுமைப் போர்த்திய வெளிகள், குகைகள், அணைகள் என இயற்கை செறிந்திருக்கும் இந்தப் பகுதியை, 4,000 அடி உயரத்தில் இருந்து காண்பது பேரானந்தம். ஸ்கை வால்ட்ஸ், அட்வென்ச்சர் நேஷன், லோனாவாலா ஹாட் ஏர் பலூன் கிளப் ஆகியவை இந்த சேவை அளிக்கின்றன. இதற்கு சரியான சீசன் – செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை.

கட்டணம் (1 மணி நேரத்துக்கு): சிறுவர்களுக்கு – ரூ.6000/- ; பெரியவர்களுக்கு- 12,000/-

கோவா

இங்கு இருக்கும் மென்மையான சாகசம் என்றால், அது ஹாட் ஏர் பலூன் சவாரி தான். கோவாவின் அற்புதமான நிலத்தோற்றங்களை, கடலின் பேரழகை, சுற்றுலா தலங்களின் அழகை, சூரிய உதயத்தையும் மறைவையும், 4000 அடி உயரத்தில் வானில் இருந்து பார்ப்பது மறக்க முடியாத அனுபவமாக நினைவில் நிற்கும். பலூன் கிளம் நிறுவனம் இதை ஏற்பாடு செய்கிறது

கட்டணம்: ஒரு மணி நேரத்துக்கு – பெரியவர்களுக்கு- ரூ.14.000/-

ஹம்பி

கர்நாடகத்தின் பழங்கால நகரமான ஹம்பியின் வியப்பூட்டும் குகைகள், பிரமிக்க வைக்கும் கோயில்கள், கலாச்சாரத்தைப் பறைச்சாற்றும் வரலாற்றுச் சின்னங்கள் உள்ளிட்டவற்றை, 5,000 அடி உயரத்திலிருந்து நோட்டமிட பலூனில் பறப்பது சிறந்த வழி. டைகார் பலூன் சபாரிஸ் நிறுவனம் இச்சேவையை அளிக்கிறது. இதற்கு செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை சிறந்த சீசன் எனலாம்.

கட்டணம்: ஒரு மணி நேரத்துக்கு – ரூ.8,000/- முதல் ரூ.12,000/- வரை.

டார்ஜிலிங்

இமயத்தின் பேரழகு வீற்றிருக்கும் டார்ஜிலிங்கில், இயற்கை அழகுடன் மனிதர் அமைத்த தேயிலை தோட்டங்கள், மலர்த்தோட்டங்கள், மற்றும் டார்ஜிலிங் நகரின் ஆகியவற்றின் அழகையும் பலூனில் பறந்தபடி கண்டு களிக்கலாம். அக்டோபர் முதல் மே வரையான மாதங்களில், வானிலை தெளிவாக இருக்கும் நாட்களில் பலூன் சவாரி நடத்தப்படுகிறது.

கட்டணம் ; பெரியவர்களுக்கு ரூ.1,500/-

அரக்குப் பள்ளத்தாக்கு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ளது அரக்குப் பள்ளத்தாக்கு. பசுமைக் காடுகள், உயர்ந்த மலைத்தொடர்கள், என இயற்கை அழகு செழித்திருக்கும் இங்கு, நவம்பர் மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் பலூன் திருவிழா மிகவும் பிரபலம். பெரும்பாலான முன்னணி பலூன் சவாரி நடத்தும் நிறுவனங்கள் இதில் பங்கெடுக்கும்.

தாஜ்மஹால்

தாஜ்மஹாலின் அற்புத அழகைக் காண இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது. தரையில் இருந்து, 500 அடி உயரத்தில் பறந்தபடி, தாஜ்மஹால் உள்ளிட்ட முகலாய நினைவிடங்களின் பிரமிப்பூட்டும் அழகைப் பார்க்கலாம். தம்பதியர், ஹனிமூன் ஜோடிகள், பயண ஆர்வலர்களுக்கு இது மிகவும் பிடிக்கும். பலூன் இந்தியா சபாரி, ராக்ஸ்போர்ட் அட்வென்ச்சர், ஏர் சபாரி ஆகிய நிறுவனங்கள் இங்கு சேவை அளிக்கின்றன.

கட்டணம் : 15-20 நிமிட சவாரிக்கு, நபருக்கு- ரூ.500/- முதல் ரூ.750 வரை.

புதுடெல்லி, என்.சி.ஆர்.,

தம்தாமா ஏரியின் அற்புத அழகையும், தேசிய தலைநகரின் வானின் அழகையும், 5,000 அடி உயரத்தில் பறந்தபடி காணலாம். குடும்பத்தினருடன் செல்ல ஏற்றது. செப்டம்பர் முதல் மார்ச் வரை இதற்கான சீசன். வாண்டர்லஸ்ட் டிராவல்ஸ், ராக் ஸ்போர்ட் அட்வென்ச்சர்ஸ் நிறுவனங்கள் சேவை அளிக்கின்றன

கட்டணம்: ஒரு மணி நேரத்துக்கு – நபருக்கு:; ரூ.9,000 முதல் ரூ.13,000 வரை.

இந்த விஷயங்களை கவனத்தில் வையுங்கள்:

பறத்தலின் பரவசத்திலும், இயற்கை அழகில் லயித்துப்போவதிலும் மனதைப் பறிகொடுக்கும் அதேவேளையில், நமது பாதுகாப்பையும் நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஹாட் ஏர் பலூனில் சவாரி செல்வதற்கு முன்பாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகளை பின்பற்றவும்.

• காலநிலையை பொறுத்தே வெப்பக்காற்று பலூனின் பயணம் அமையும். ஆகவே, காலநிலை பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு அவசியம் தேவை. அப்போதுதான், சவாரியில் ஈடுபடுவதற்கான நேரத்தை நீங்கள் சரியாக முடிவு செய்ய முடியும்.

• பலூனில் பறக்கையில், சூரியன் தொடுவானத்தில் இருக்கலாம். தலைக்கு மேலே இருக்கக்கூடாது. ஏனென்றால் அந்த சூழ்நிலையில், பூமியில் வெப்பம் அதிகம் இருக்காது, அதனால் காற்றும் வேகமாக வீசாது. இதனால் பயணம் பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் அமையும்.

• பயணத்தைத் தாங்கும் அளவுக்கு உடல்திகுதி இருப்பது அவசியம்.

• குறைந்தது, 5 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். குறைந்த[பட்சம், 1.5 மீ அல்லது 4 அடி உயரமாவது இருக்க வேண்டும்.

• பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டு, கர்ப்பிணிகள் இதைத் தவிர்[ப்பது நல்லது.

• கண்களுக்கு பாதுகாப்பாக காகிள்ஸ் அணியலாம். ஏனெனில், உயரம் செல்ல செல்ல சூரியனின் பிரகாசம் அதிகரிக்கும்.

• இந்த சவாரி செல்வதற்கு முன்பாக, அதைப்பற்றித் தெரிந்துகொண்டு முடிவெடுங்கள்

• கொஞ்சமாக காற்றடித்தால், பலூன் சவாரிக்கு நல்லது. அதுவே பலத்தக் காற்றாக இருந்தால், பலூனில் பறப்பதைத் தவிர்ப்பது நல்லது.

• பலூன் கீழே இறங்கும்போது, கோபுரங்கள், வயர்கள், மற்ற கூரான பொருட்களுடன் எச்சரிக்கையாக இருங்கள்.

– செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g