பருவப் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டிய வீட்டு வேலைகள்

பருவப் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டிய வீட்டு வேலைகள்

குழந்தைகளுக்கு வீட்டு வேலைகள் கற்பிப்பதை, இந்த தலைமுறை பெற்றோர் விரும்புவதில்லை. காரணம் அதீதச் செல்லம். இதனால் அடிப்படையான வேலைகளைக்கூட செய்து பழகாமல், மிகவும் சோம்பேறியாக, தற்சார்பு இல்லாதவர்களாக. அதிகாரத்தன்மை கொண்டவர்களாக குழந்தைகள் வளர்ந்துவிடுகின்றனர். குழந்தைகளை வீட்டு வேலைகளுக்கு பழக்குவதன் மூலம், அவர்கள் பொறுப்பானவர்களாக வளர நீங்கள் உதவுகிறீர்கள்.

குழந்தைப்பருவம் மற்றும் பருவ வயதில், எந்த வேலையும் செய்து பழகாததால், வளர்ந்த பிறகும் அவர்களால் எதையும் செய்ய முடிவதில்லை. வேலை நிமித்தாகவோ திருமணம் வாழ்க்கைக்காகவோ, என்றோ ஒருநாள் உங்கள் பிள்ளைகள் உங்கள் ஆதரவு இல்லாமல் தனியாக வாழ்ந்தாக வேண்டும். எந்த வேலையையும் பகிர்ந்து கொள்ளாமல் சும்மாவே இருப்பவர்களுடன், துணையோ நண்பர்களோ வாழ விரும்ப மாட்டார்கள். தன் பிள்ளைகள் பொறுப்பற்றவர்களாக வளர்வதை தவிர்க்க விரும்பும் பெற்றோர், பருவப் பிள்ளைகளுக்கு கட்டாயம் வீட்டு வேலைகளுக்குப் பழக்கப்படுத்துங்கள். இங்கே குழந்தைகள் என குறிப்பிடும் போது, ஆண்-பெண் பேதமில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வீட்டு வேலையோ தோட்ட வேலையோ எல்லாவற்றையும் சரிசமமாக இருபாலருக்கும் பயிற்றுவியுங்கள். இதோ அதற்கான வழிமுறைகள்.

பருவப் பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்!

பெரியவர்கள் செய்யக் கூடிய எல்லா வேலைகளையும் பருவ வயதினரால் செய்ய முடியும் என்பதை முதலில் நம்புங்கள். முறையாக எப்படி செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல் மட்டும்தான் அவர்களின் தேவை. சில பெற்றோர் கற்பிக்கிறேன் என்ற பெயரில், நசநசவென்று எதையாவது பேசிக் கொண்டும், அதட்டிக் கொண்டும் இருப்பது வழக்கம். ஒருமுறை விவரித்துவிட்டு, விலகி நின்று கவனியுங்கள். செய்யும் முறையில் ஏதேனும் தவறு இருந்தால், அதை ஓரிரு வார்த்தைகளில் திருத்துங்கள். கழிவறையை கழுவும் போதோ, செடிகளுக்கு தண்ணீர் விடும் போதோ தவறு தென்பட்டால், அதை கற்பிப்பதற்கான நேரமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பெரியவர்களின் வாழ்க்கை முறை கற்பிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்த தருணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வேலைகளை சிறப்பாக உங்கள் குழந்தை செய்கிறதெனில் அதற்கு அன்பளிப்புகளை அளியுங்கள். உழைப்புக்கு எப்போதுமே மரியாதையும் அங்கீகாரமும் சன்மானமும் கிடைக்கும் என்பதை இதன் வாயிலாகக் குழந்தைக் கற்றுக் கொள்ளும்.

வேலையில் பாதுகாப்பை உறுதிச் செய்யுங்கள்

பெரும்பாலும் பருவப் பிள்ளைகளுக்கு எது ஆபத்து என்ற அறிவு இருக்கும். நீங்கள் எல்லாவற்றையும் உடனிருந்து பார்க்க வேண்டுமென்ற அவசியம் இருக்காது. ஆனாலும் உங்கள் மகன் அல்லது மகளின் பலவீனம் மற்றும் பலம் என்னவென்று உங்களுக்குத்தான் நன்கு தெரியும். அதை பொறுத்து, வேலையை கொடுங்கள். கழிவறைக்கு ரசாயனங்களை பயன்படுத்தும் போ,து அதிலுள்ள ஆபத்துகளை விவரியுங்கள். தோல், கண், வாய்க்குள் போய்விடாதவாறு பயன்படுத்தும் விதங்களை சொல்லுங்கள். அதோடு, ஒருவேளை கண்களில் பட்டுவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டுமென்பதையும் சொல்லித் தாருங்கள்.

அடுப்பு, கத்தி, அரிவாள், ஆணி, சுத்தியல் போன்ற பொருட்களை புதிதாக பயன்படுத்தும் போது, சில முறைகளேனும் நீங்கள் அருகே இருக்க வேண்டும். பழகியப் பிறகு தேவையில்லை. ஸ்விட்ச் போர்டு மாதிரியான மின் பொருட்களை தொட்டு சுத்தம் செய்யும் போது, அதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை கற்பியுங்கள்.

தனக்கான வேலைகள்
தனது சொந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள குழந்தையைப் பழக்குங்கள். டேபிள், தரை, பொம்மைகள் என எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருக்க வலியுறுத்துங்கள். விளையாட்டுப் பொருட்கள், பாடப் புத்தகங்கள், பொழுதுபோக்கு பொருட்கள் போன்றவற்றை அதனதன் இடத்தில் வைக்க சொல்லித்தர வேண்டியது உங்கள் கடமை. இன்றைய பெற்றோர் வீடு முழுக்க குழந்தை எல்லாவற்றை இரைத்துப் போட அனுமதிக்கின்றனர். பின்னர் மாங்கு மாங்கென்று அவர்களே சுத்தம் செய்கின்றனர். விளையாட்டு, படிப்பு முடிந்ததும், பொருட்கள் அந்தந்த இடத்தில் வைக்க பழக்கிவிட்டால், குழந்தைக்கும் பொறுப்பு வரும், உங்களுக்கும் சுமை குறையும். உடைமைகள் சார்ந்து பயிற்றுவிக்க வேண்டிய வேலைகள் சில:

1. படுக்கையை ஒழுங்கு செய்தல்.
2. அழுக்குத் துணிகளை அதற்குரிய இடத்தில் சேர்த்தல்.
3. போர்வைகளை மடித்து வைத்தல், படுக்கை விரிப்புகளை மாற்றுதல்.
4.படுக்கை அறையை பெருக்குதல், தூசித் தட்டுதல்.
5. பொருட்களை எடுத்த இடத்தில் வைத்தல்.
6. டாய்லட் க்ளோசெட்டை சுத்தம் செய்தல்.
7. தன் உடைகளை துவைத்தல்.
8. உணவுத் தட்டுகளை கழுவுதல்.

பிறருக்கான வேலைகள்


தன் நலனை பற்றி மட்டுமல்லாமல், பிறரது நலன் குறித்தும் உங்கள் குழந்தை யோசிக்க வேண்டும். சக மனிதர்கள், செல்லப் பிராணிகள், செடிகள் போன்ற பிற உயிர்கள் மீதும் அக்கறையை வெளிப்படுத்த பழக்குவீர்கள் என்றால், சிறந்த மனிதராக எதிர்காலத்தில் உங்கள் குழந்தை உருவெடுக்கும். பருவப் பிள்ளைகளுக்கு தன்னை சார்ந்திருக்கும் மற்றவர்கள், மற்ற உயிர்கள் குறித்த புரிதலை உருவாக்க இந்த வேலைகளை செய்யச் சொல்லுங்கள்:

1. செடிகளுக்கு தண்ணீர் விடுதல்.
2. செல்லப் பிராணிக்கு உணவிடுதல்.
3. செல்லப் பிராணியுடன் வாக்கிங் போவது அல்லது அதன் கழிவை சுத்தம் செய்வது.
4. செல்லப் பிராணியை குளிக்க வைத்தல்.
5. இளைய சகோதர சகோதரிகளை பார்த்துக் கொள்ளுதல்.
6. தம்பி தங்கைகளுக்கு உணவு தயாரித்தல்.
7. முதியவர்களுக்கு உதவுதல்.

பொறுப்பான குடிமகன்/மகளாக உருவாக உதவும் வேலைகள்

தனது உடைமைகளை மட்டும் பராமரித்துப் பழகினால், குழந்தைகள் சுயநலவாதியாக வளர்ந்துவிட நேரிடும். தன் அறையை மட்டும் சுத்தம் செய்துவிட்டு சமையலறை, ஹால், உங்கள் படுக்கையறை போன்றவை எப்படி இருந்தாலும், எனக்கென்ன என இருந்துவிடுவார்கள். அது தவறு. தெருவில் குப்பை போடக்கூடாது என குழந்தை கற்க வேண்டுமெனில், வீட்டை முழுவதுமாக பராமரிக்க அது கற்க வேண்டும். அதனால்…

1. வாசல், படிக்கட்டுகள், மாடி, பால்கனி போன்ற இடங்களை பெருக்கி சுத்தம் செய்தல்.
2. ஹால், படுக்கையறை, அலுவலக அறையில் உள்ள பொருட்களை தூசித் தட்டுதல், துடைத்தல்.
3. பர்னிச்சரை வேக்குவம் கிளீன் செய்தல்.
4. டேபிள்களை ஒழுங்குப்படுத்துதல்.
5. மக்கும், மக்கா குப்பைகளை பிரித்தெடுத்தல்.
6. குப்பைக் கூடையை எடுத்துக்கொண்டு போய், துப்புரவுப் பணியாளரிடம் சேர்த்தல்.
7. இரவு உணவை சமைத்தல்.
9. துணிகளை துவைத்தல்.
10. கிச்சனை சுத்தம் செய்தல்.
11. பாத்திரங்களை கழுவுதல்.
12. கழிவறை, சிங்க், கண்ணாடி மற்றும் குளியலறையை சுத்தம் செய்தல்.
13. ஜன்னல்களைத் துடைத்தல்.
14. தரையை துடைத்தல்.
15. புத்தக அலமாரியை அடுக்குதல்.

விடுமுறையும் கற்கும் காலமே!
சம்மர் வெக்கேஷன் என்றால் இந்த வகுப்பில் சேர்க்கலாமா, இந்த பயிற்சிக்கு அனுப்பலாமா என பெற்றோர் அலை மோதுகின்றனர். குழந்தைகள் கற்க, வீட்டிலேயே எண்ணற்ற விஷயங்கள் உள்ளன என்பதை நாம் மறந்துவிடுகிறோம். விதவிதமான வகுப்புகளுக்கு பணத்தை செலவழிக்க தயாராக இருக்கும் நாம், குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. தரமான நேரத்தை செலவிட தயாராக இருக்கும் பெற்றோர், விடுமுறையில் இந்த வேலைகளை கண்டிப்பாக கற்பிப்பார்கள்.

1. சிறிய அளவிலேனும் வீட்டுத் தோட்டமிடுதல்.
2. புதர்கள்/குப்பைகளை அப்புறப்படுத்துதல்.
3. காரைத் துடைத்தல். வேக்குவம் செய்தல்.
4. துணி, பொம்மைகள், செய்தித்தாள்கள் போன்ற பழைய பொருட்களை தானமளித்தல்/விற்பது.
5. சமையலில் உதவுதல்/ அல்லது சமைத்தல்.
6. மார்க்கெட் சென்று தேவையானப் பொருட்களை வாங்கி வருதல்.

வேலையில் அறவுணர்வை ஊக்கப்படுத்துங்கள்
வேலை செய்வது சுமையோ அடிமைத்தனமோ இல்லை என்பதை குழந்தைக்கு புரிய வையுங்கள். இப்போது கற்கும் வேலைகள், எதிர்காலத்தில் தனக்கும் தன்னை சார்ந்திருப்பவர்களுக்கு சமூகத்திற்கும் உதவும் என குழந்தை நம்ப வேண்டும். சிறிய வேலைகளை மாலை நேரங்களிலும், பெரிய வேலைகளை வார இறுதி மற்றும் விடுமுறை தினங்களிலோ, சிறிது சிறிதாக இந்த வேலைகளை குழந்தைப் பழகட்டும். ஒருமுறை செய்ததும், அதை அப்படியே தொடர்ந்து செய்ய ஊக்கப்படுத்துங்கள்.

உற்சாகமாக செய்யும் வகையில் பழக்கப்படுத்துவது உங்கள் கடமை. எத்தருணத்திலும், குழந்தை இந்த வேலைகளை சுமையாக உணர்ந்துவிடக் கூடாது. இந்த வேலைகளை பழகுவதற்காக, குழந்தையின் விளையாட்டுப் பொழுது, கற்றல் பொழுதுகளில் சமரசம் செய்ய வேண்டாம். தனக்குரிய வேலைகளை தானே செய்ய வேண்டும், தன் இருப்பிடத்தை தானே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், தன்னை சார்ந்தவர்களை நாம் தான் பராமரிக்க வேண்டும் என்ற அறவுணர்வை பெறும் குழந்தைகள், வாழ்க்கையில் எப்போதுமே தோற்பதில்லை.

– ரோஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g