காலை ஜாகிங்கிற்கு பிறகு உண்ண வேண்டிய உணவுகள்

காலை ஜாகிங்கிற்கு பிறகு உண்ண வேண்டிய உணவுகள்

காலைவேளையில் எழுந்து ஓடுவது என்பது சற்றுச் சிரமம்தான். படுக்கையை நேசிப்போருக்கு அது இன்னும் கடினமான ஒன்று. ஆனால் ஜாகிங்கால் ஏற்படும் நன்மைகள், நம் உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. இருப்பினும் நம் ஒட்டுமொத்த ஆற்றலையும் செலுத்தி ஓடினாலும், அதன்பிறகு உண்ணும் உணவில் கவனம் செலுத்தினால் மட்டும்தான், அதற்கான முழு பலனைப் பெற முடியும். இல்லையேல் கரைத்த அத்தனை கெட்டக் கொழுப்புகளும் மீண்டும் உற்பத்தியாகவே வழிவகுக்கும். எனவே ஜாகிங்கிற்குப் பிறகு என்ன உணவுகளை உண்ணலாம் எனத் தெரிந்து கொள்ளலாம்.

ஜாகிங் செய்வதால் ஏற்படும் பலன்கள்

ஜாகிங் செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. உடலின் எலும்புகள் வலுபெற்று உறுதியளிக்கிறது. தசைகளின் உறுதி அதிகரிக்கிறது. இதயத்துடிப்பை சீராக்குகிறது. உடல் எடையையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவேதான் பலரும் காலை வேளையில் ஜாகிங் செய்வது அவசியம் எனக் கூறுகின்றனர்.

ஏன் உணவில் கவனம் தேவை


ஜாகிங் செய்தபின் உடலின் ஒட்டுமொத்த ஆற்றலும் வெளியேறிவிடுகிறது. இதனால் நாம் களைப்பாக உணர்கிறோம். தசைகள் தனக்குத் தேவையான ஆற்றலைப் பெற்று, அதற்கான புதுப்பித்தல் வேலையைத் தொடங்குகிறது.  எனவே அதற்கு ஏற்ப அதிக புரோட்டின் சத்துகள் நிறைந்த உணவை உண்ண வேண்டும்.  அமினோ ஆசிட், அர்ஜினைன், லைசின், க்ளூடமைன் போன்ற புரதச்சத்துக்கள் மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது சிறப்பு. அவை கீழ்வரும் உணவுப் பொருட்களில் அதிகம் உள்ளன.

வாழைப்பழம்


வாழைப்பழத்தில் அதிகளவு கார்போ ஹைட்ரேட் இருக்கிறது. இது உடற்பயிற்சி செய்வோருக்கு கட்டாயம் உதவும் சிறந்த பழம்.  ஆற்றலின் அளவை குறைக்காமல், போதுமான ஆற்றலை அளிக்கிறது. அதனால்தான் உணவிற்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடச் சொல்கின்றனர்.
வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடப் பிடிக்கவில்லை என்றாலும், அதை ஓட்ஸ் கஞ்சியில் சேர்த்து கலந்து உண்ணலாம் அல்லது ஒரு வாழைப்பழத்த்தை நறுக்கி, அதில் அரை டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு பிழிந்து கூடுதலாக கொஞ்சம் உப்பு கலந்து ஸ்பைஸியாகவும் நாவூற ருசிக்கலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்


பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டிலும் ஆன்டிஆக்சிடன்ட் இயற்கையாகவே இருப்பதால், அவற்றை உண்ணும்போது உடலில் உள்ள கொழுப்புக் கட்டிகள் கரைகின்றன. உதாரணத்திற்கு, முட்டைக்கோஸ், கொத்தமல்லி ஆகியவற்றில் அமினோ ஆசிட், க்ளுட்டமைன் அதிகமாக இருக்கிறது. இது ஜாகிங் போது ஏற்படும் க்ளுட்டமன் குறைப்பாட்டை ஈடுசெய்ய உதவுகிறது. தசைகளையும் அதன் உற்பத்தி வேலையைத் தொடங்க உதவுகிறது.

ஓட்ஸ்


ஓட்ஸில் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது. அதேபோல் இவை கொழுப்பை அதிகரிக்காமல், சமன்செய்து உடல் எடையையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

நட்ஸ் வகைகள்


பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டை வகைகளில் அதிக அளவில் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து, கொழுப்பு அதிகரிப்பதை குறைக்கிறது.  ஓட்ஸ் சாப்பிடும்போது, அதில் இவற்றை கலந்தும் சாப்பிடலாம். மில்க்‌ ஷேக்குகளிலும் கலந்து அருந்தலாம்.

காய்ந்த விதைகள்


பூசணி விதையில் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக, நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் விட்டமின்-E ஆகியவை நிறைந்திருக்கின்றன. இதை, 100 கிராம் உட்கொண்டால், 600 கலோரிகளைப் பெறலாம். வறுத்த பூசணி விதைகளும் கிடைக்கின்றன. அப்படியே நொறுக்குத் தீனியாகவும் உண்ணலாம்.

அடுத்ததாக எள் விதையில் ஃபைரோஸ்டீரால் எனப்படும் அரியவகை சத்து  இருக்கிறது. இந்த சத்து கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தைப் பேணுகிறது. மேலும் இதில் மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் சர்க்கரை நோய் , உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்ரும் நுரையீரல் தொடர்பான பிரச்னை உள்ளவர்களும் எள்ளை உண்ணலாம். எள்ளை கருப்பட்டியோடு கலந்து அப்படியே சாப்பிடலாம். கர்ப்பப்பையையும் வலுபெறச் செய்யும்.

சிக்கன் பிரெஸ்ட்


சிக்கனை யாருக்குதான் பிடிக்காது. சிக்கனிலேயே பிரெஸ்ட் பகுதிதான் குறைந்த கலோரி கொண்டது. இது ஊட்டச்சத்து நிறைந்ததும் கூட. இதனை வேகவைத்து சாப்பிட்டால் அன்றைய நாளின் நல்ல ஆரோக்கியமான உணவாக இருக்கும்.

– ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g