ப்ரோமாஜ்: சீஸ் உணவுகளின் சங்கமம்!

பாலாடைக்கட்டி என்றழைக்கப்படும் சீஸ் மீது பெருவிருப்பம் கொண்டவரா நீங்கள்? உணவில் சீஸ் அதிகம் சேர்த்துக் கொள்பவரா? முதன் முறையாக சீஸ் உணவுகளை சுவைத்துப் பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டியது, சென்னை எம்.ஆர்.சி., நகரில் இருக்கும், ‘ப்ரோமாஜ்’ உணவகத்திற்கு தான்.

இங்கு சமைக்கப்படும் பெரும்பாலான உணவுகளில், சீஸ் கலந்திருக்கும். சைவ உணவுகள் தொடங்கி, சிக்கன், மட்டன், பீப், போர்க் உணவுகள் வரை, அனைத்துமே இங்கு கிடைக்கும். ஆனால் அனைத்திலும் சீஸ் இருக்கும். உதாரணத்துக்கு, சிக்கன் விங்ஸ் ஆர்டர் செய்கிறோம் என்றால், ஒரு தட்டில் சீஸ்ஸை ஊற்றி, அதன் மீது அதிக காரத்துடன் தயார் செய்யப்பட்ட சிக்கன் விங்ஸ் ஃபிரையை வரிசையாக அடுக்கித் தருவார்கள். அடியில் இருக்கும் சீஸில், சிக்கனை பிரட்டியெடுத்து, அப்படியே சாப்பிடலாம். சீஸின் சுவை சிக்கனோடு கலந்து, காரம் குறைந்து புதுவித சுவை தரும். இதுவே ப்ரோமாஜ்.

பிரெஞ்சு உணவுகளின் மீது இருந்த காதலால், இந்திய ருசிக்கு ஏற்றவிதமாக, சீஸ் கலந்த உணவுகளை வடிவமைத்திருக்கின்றனர் உணவகத்தின் உரிமையாளர்களான, கிரிஷ் மற்றும் அபிஷேக். “சீஸ் உணவுகளின் மீது எப்போதுமே எனக்கு தீராதக் காதல் உண்டு. சீஸ் உணவுகள் உடலுக்கு வலுவையும் ஆரோக்கியத்தையும் அளிப்பதுடன், வித்தியாசமான சுவையையும் கொண்டிருக்கும். அந்த சுவையை மக்களுடன் பகிர்ந்துகொள்ளவே, இந்த உணவகத்தைத் தொடங்கினோம். இங்கு எட்டு வகையான சீஸ்களை கொண்டு உணவுகளை தயார் செய்கிறோம். ஒவ்வொரு சீஸும், ஒவ்வொரு சுவை. அனைத்தையுமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம்,” என்றார் கிரிஷ்.

இங்கு ஒரு சூப் குடித்தாலே வயிறு நிறைந்துவிடும். இங்குள்ள ஒவ்வொரு உணவுமே அப்படித்தான். அளவில் குறைவான உணவுகளாக இருந்தாலும், அதிகமான புரதமும், பிற சத்துக்களும் தருவதே, இவற்றின் ஸ்பெஷல். இங்கு பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

பேலியோ டயட் போலவே, பிரபலமாகிவரும், ‘கீட்டோ டயட்’ பின்பற்ற ஏற்ற இடம் இது. அதென்ன கீட்டோ டயட் என்று அபிஷேக்கிடம் கேட்டால், “கார்போஹைட்ரேட் குறைத்து, சீஸ் பிரதானமாக கொண்ட உணவுகளை சாப்பிடுவது கீட்டோ டயட்டின் முக்கிய அம்சம். உதாரணமாக, பீட்சாவின் மீது டாப்பிங்ஸாக காய்கறிகள், இறைச்சி மற்றும் சீஸ் ஆகியவற்றை தூவுவார்கள். அந்த டாப்பிங்ஸை மட்டும் சாப்பிட்டால், அதுவே கீட்டோ. உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த டயட். அப்படியான சாப்பாடுகளை பிரத்யகமாக வழங்குகிறோம்” என்றார்.

இந்த உணவகத்தின் மற்றொரு ஸ்பெஷல், பாஸ்தா. மிகப்பெரிய பெர்மிசியான் சீஸ் கட்டியை பாத்திரமாக்கி அதனுள் பாஸ்தாவை கொட்டி, நெருப்பில் வாட்டி, வித்தியாசமான முறையில் சமைக்கிறார்கள். அப்போது சீஸ் உருகி, பாஸ்தாவோடு கலக்கும் சுவைக்கு ஈடு இல்லை. இப்படி ஒவ்வொரு உணவிற்கும் ஒரு சுவாரஸ்யம் வைத்திருக்கிறார்கள். சாப்பிடுவதற்கு முன், ஒவ்வொரு உணவு பற்றிய சிறப்புகளை சொல்லிய பிறகுதான், பரிமாறுவார்கள்.

ஒர் உணவகத்திற்கு சென்றால், சாப்பிட்டதும் கிளம்பிட வேண்டும். குறைந்தது ஒரு மணிநேரம் கூட இருக்கமுடியாது. ஆனால் இங்கு எத்தனை மணிநேரம் என்றாலும் நேரம் செலவழிக்கலாம். கட்டுப்பாடு கிடையாது. நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ, கதைகள் பேசி, சிரித்து, சுவைத்து, மகிழ்ந்துவிட்டுச் செல்லலாம்.

-நீலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g