சோனம் கபூரின் திருமண ஆடை எப்படி இருந்தது தெரியுமா?

சோனம் கபூரின் திருமண ஆடை எப்படி இருந்தது தெரியுமா?

நீண்ட நாள் காதல் இன்று திருமணத்தில் முடிந்திருக்கிறது. ஆம்.., சோனம் கபூர் மற்றும் ஆனந்த அவுஜா திருமணம் மே 8-ம் தேதியன்று கோலாகலமாக, மும்பை பாந்த்ராவில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் நடந்தேறியது. இவர்கள் இருவரும் நான்கு வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஆனந்த் தனது நட்பு வட்டாரத்தின் மூலம், 2014-ம் ஆண்டில் சோனம் கபூரை சந்தித்திருக்கிறார். அப்போதே பிடித்துபோய், ஒரு மாதம் கழித்து தன் காதலை வெளிப்படுத்த, சோனமும் கிரீன் சிக்னல் காட்,ட அது மணமேடை வரை அழைத்து வந்திருக்கிறது.


இதெல்லாம் ஒரு புறம் இருக்க, சோனம் கபூரின் திருமண ஆடைகள் குறித்து பேசியே ஆக வேண்டும். ஃபேஷனிஸ்டா பட்டியலைக் கேட்டாலே முதலில் எல்லோருடைய வாயிலிருந்து வரும் முதல் பெயர், சோனம் கபூர் தான். அத்தனை நேர்த்தியோடு அழகு மிளிரும் தனித்துவ ஆடைகளால் மட்டுமே, சோனம் தன்னை வெளிபடுத்துவார்.

இவர் டிசைனர்களின் ஃபேவரட் அழகி. சோனமும் எந்த டிசைனர் என்னென்ன ஆடைகளை வித்தியாசமாக வடிவமைக்கிறார்கள்  என்று கவனித்துக் கொண்டே இருப்பார். அதை அடுத்தக் கணமே தனதாக்கி அணிந்து அழகு பார்ப்பார். இவர் சென்றிராத ஃபேஷன் ஷோக்களே இல்லை. இவர் அணிவகுக்காத ராம்ப் மேடைகளும் இல்லை. இந்த அளவுக்கு ஃபேஷன் ஈடுபாடு கொண்ட சோனம், தன் திருமணத்திற்கு எப்படியெல்லாம் தன்னை அலங்கரித்திருப்பார். உண்மையிலேயே சோனம் தன் திருமணத்திற்கு வந்த அத்தனைப் பேரையும் மெய்சிலிக்க வைத்துவிட்டார்.

திருமண மேடையில் சிவப்பு ரோஜா

 திருமண லெஹங்காவை டிசைனர் அனுராதா வாலிக் வடிவமைத்திருக்கிறார். அழைப்பிதழிலேயே டிரெஸ்கோட், டிரெடிஷ்னல் அவுட்ஃபிட் என்றே குறிப்பிடிருந்தார். சோனமின் லெஹங்காவும் டிரெடிஷ்னல் ஸ்டைலில் டிசைன் செய்யப்பட்டிருந்தது. பளீர் சிவப்பு நிற உடையில், தாமரை மற்றும் நட்சத்திரங்கள் மின்னின. அகலமான பார்டரில் சர்தோஸி வேலைப்பாடுகள் அதிகமாகச் செய்யப்பட்டிருந்தன. துப்பட்டாவில் மினுமினுக்கும் சமிக்கி வேலைப்பாடுகள் கலைநயச் சங்கமம். சோனம், சிவப்பு நிற ஆடையில் ரோஜாவைப் போல அழகுடன் வெளிப்பட்டார்.

இந்த பிரைடல் லெஹங்காவிற்கு ஏற்ற வின்டேஜ் ஸ்டைல் நகைகளை அணிந்தது அட்டகாசமான இருந்தது. பழமையை போற்றும் விதமாக, 50களில் டிரெண்டியாக இருந்த நகை டிசைன்களை தேர்வு செய்திருக்கிறார். இது பாரம்பரியத்திற்கான தோற்றத்தைக் கூடுதலாக அளித்திருக்கிறது. கழுத்தில் அதிக வேலைபாடுகள் கொண்ட ஆரம், கழுத்தை ஒட்டிய சோக்கர் நெக்லஸ் மற்றும் நெற்றியில் மாதாபட்டி எனச் சொல்லப்படும் நெத்திச் சுட்டி என, அசல் ராணியாகவே தோற்றமளித்தார் சோனம்.

இருப்பினும் அனைவராலும் ஈர்க்கப்பட்டது அவரின் கைகளில் அணிந்திருந்த சூரா என்றழைக்கப்படும் சிவப்பு மற்றும் வெள்ண்மை கலந்த வளையல் மற்றும் பஞ்சாபி ஸ்டைல் கலிர் ( kalire) தான். சோனம் கைகளில் அவர் அசையும் போதெல்லாம், அவை அழகாகத் துள்ளி விளையாடின. அந்த வெள்ளை மற்றும் சிவப்பு நிற வளையலும், திருமணத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் பாரம்பரிய வளையல்.

அல்டாப் இல்லாத மினிமல் மேக் அப் அழகி


அடுத்ததாக மொத்த அழகையும் பறைசாற்றும் அவரின் மேக்-அப்பை, நம்ரதா சோனி செய்திருந்தார். அவர் சோனமின் ஃபேவரிட் மேக் அப் ஆர்டிஸ்ட். சோனமின் ஐகானிக் மேக் அப்-கள் பல நம்ரதாவின் கை வண்ணம்தான். அதிக வேலைப்பாடுகள் கொண்ட அணிகலன்கள் மற்றும் ஆடைகள் அணிந்திருந்ததால், மினிமலான மேக் அப் தேர்வு செய்யப்பட்டிருந்தது. உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் அடர் கருமை கொண்ட புருவம் என இவை இரண்டை மட்டும் ஹைலைட் செய்திருந்தது, அழகுத் ததும்பும் சிவப்பு லெஹங்காவிற்கு சிறந்த காம்ப்ளிமென்டாக இருந்தது. மாப்பிள்ளை ஆனந்த் அவுஜாவின் ஆடையை, பிரபல டிசைனரான ராகவேந்த்ரா ரதோர் வடிவமைத்திருந்தார். சோனமின் தந்தை அனில் கபூருக்கும் இவர் தான் ஆடைகளை டிசைன் செய்துக் கொடுக்கிறார்.

பேஸ்டல் ஆடையில் மெஹந்தி இட்ட பென்குயின் 


திருமணம் இத்தனைக் கோலாகலமாக நிகழ்ந்ததைப் போன்றே, இவர்களின் சங்கீத் நிகழ்ச்சியும் அட்டகாசமாக நிகழ்ந்து முடிந்தது. அதிலும் சோனம் சளைக்கவில்லை. மெஹந்தி வைக்கும் போது ஒரு ஆடை, அதற்குப் பிறகு ஒரு ஆடை என அசத்தினார். மெஹந்தி வைக்கும்போது பேஸ்டல் நிறத்தில், டிசைனர் அனுராதா வாலிக்கின் லெஹங்கா ஆடையை அணிந்திருந்தார். அது சிம்பிள் மற்றும் எலிகன்ட் ஆக இருந்தது. கற்கள் பதித்த ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட அந்த ஆடையில் அவர் ஜொலிஜொலித்தார். மேக் அப் மினிமலாகவே இருந்தது.

மெஹந்தி முடிந்த அடுத்த நொடியே சிக்கன்காரி வேலைபாடுகள் நிறைந்த வெள்ளை நிற லெஹங்காவிற்கு மாறினார். அதில் மிகவும் கார்ஜியஸாக இருந்தார் சோனம். அந்த ஆடையை டிசைனர் அபுஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்திருந்தார். மிகவும் நுணுக்கமான எம்பராய்டரிகள், தங்க ஜரிகை நூல், விலை உயர்ந்த கற்கள் என, அதன் வடிவமைப்பு  பிரம்மாண்டமாக இருந்தது.  அந்த ஆடையை கைத்தேர்ந்த கலைஞர்களை கொண்டு வடிவமைத்திருக்கிறார். அதை நிறைவு செய்ய 18 மாதங்கள் ஆனதாக, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் அபுஜானி. ஆடைக்கு ஏற்ப வெள்ளை மற்றும் தங்க நிற கற்கள் கொண்ட குந்தன் ஸ்டைல் அணிகலன்கள், சரியான பொருத்தமாக இருந்தது. மேக் அப் மற்றும் ஹேர் ஸ்டைல் எப்போதும் போல் நம்ரதா சோனிதான். இதிலும் அதிகமாக இல்லாமல் குறைந்த அளவான மேக் அப்பையே அணிந்திருக்கிறார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் ஜொலித்த சீப்ரா லேடி

நேற்று இரவே அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியும் இனிதே நிறைவு பெற்றது. அதில் சோனம் கபூரின் சினிமா நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் சோனம் கிரே மற்றும் கருப்பு நிறத்தில் லெஹங்கா அணிந்திருந்தார். அது டிசைனர் அனாமிகா கன்னாவின் கைவண்ணத்தால் ஆன ஆடை. பல பெண்களின் திருமண ஆசைகளில் ஒன்று, அனாமிகாவின் கைவண்ணத்தில் உருவாகும் ஆடைகளை, தன் திருமணத்தில் அணிந்து தன்னைத் தானே அழகு பார்க்க வேண்டும் என்பது… அந்த ஆசை சோனம் கபூருக்கும் இருந்திருக்கும் போலும். எனவேதான் தனது வரவேற்பு நிகழ்ச்சிக்கு, அவரைத் தேர்வு செய்திருக்கிறார். வரிவரியான, V ஷேப்பில் மிக எளிமையாக அவரது ஆடை இருந்து. ஸ்கர்ட், பால் கவுன் போன்று விரிந்து காணப்பட்டது. அதில் சோனம் பார்பி டால் தோற்றத்தில் இருந்தார். வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரைட்டான மேக் அப்பே அணிந்திருந்தார். அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் ஹைலைட்டாக தெரிந்தது.  சிம்பிளான லூஸ் ஹேர் விட்டிருந்தது அந்த ஆடையின், V ஷேப் டிசைனிற்கு பொருத்தமாக இருந்தது. அணிகலன்களும் ஆடைக்கு ஏற்ப, மினிமலான டிசைனர் ஜுவல்லரியே அணிந்திருந்தார்.

– ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g