சம்மரிலும் சிலிர்க்க வைக்கும் காஷ்மீர் சுற்றுலா #SummerDestinations

சம்மரிலும் சிலிர்க்க வைக்கும் காஷ்மீர் சுற்றுலா #SummerDestinations

காஷ்மீர், பூமியில் அமைந்த சொர்க்கம் என்று புகழப்படுவது மிகையல்ல. ஓயாத கலவரங்கள், போராட்டங்கள் என்று செய்திகளில் கேள்விப்படுவதைப் போல, காஷ்மீர் முழுவதும் ஒன்றும் முற்றான கலவர பூமி கிடையாது. கோடையில் கறைபடாத காஷ்மீரின் அழகை ரசித்தப்படி, அச்சமின்றி துள்ளித் திரிய ஏராளமான இடங்கள் இங்குண்டு. அவற்றில் முதன்மையான இடங்களை கீழே காணலாம்.

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று புகழப்படும் காஷ்மீர், குளிர்காலத்தில் எங்கும் பனிப் பொழிவுடன் இருக்கும். மலைகள் முதல் நகரங்கள் வரை, எங்கும் வெண்பனி சூழ்ந்திருக்கும். அது ஒரு விதமான அழகு எனில், கோடையில் இயற்கை அழகின் மொத்த வெளிப்பாடாக காஷ்மீர் காட்சியளிக்கிறது. புத்துணர்ச்சி அளிக்கும் தூய காற்று, கண்களை நிறைக்கும் இயற்கை அழகு, உடலுக்கு அசெளகரியம் கொடுக்காத இதமான குளிர், சுடாத சூரியன் என, கோடையில் காஷ்மீர் ஒரு கனவுத் தேசமாக காட்சியளிக்கும்.  எல்லாவற்றுக்கும் மேலாக விருந்தோம்பலில் சிறந்த காஷ்மீர் மக்களின் நட்புணர்வையும் நேசத்தையும் நேரில் காணும் வாய்ப்பும் கோடை சுற்றுலாவில் கிடைக்கும்.

ஸ்ரீநகர் – அழகின் மொத்த வெளிப்பாடு

காஷ்மீரில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் பார்த்தாக வேண்டிய மிக அழகான இடம், ஸ்ரீநகர். டால் ஏரியில் படகுச் சவாரி, மலைகளில் டிரெக்கிங்,  பறவைப் பார்த்தல், நீர்ச்சறுக்கு விளையாட்டுகள் என, ஸ்ரீநகரில் அத்தனையும் உண்டு. படகு வீட்டில் தங்குவது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

பார்க்க சிறந்த காலம்: கோடையில் – ஜூன் – அக்டோபர் வரை; குளிர்காலத்தில் – டிசம்பர் – ஜனவரி மாதங்கள்.

குல்மார்க் – சாகசப் பிரியர்களின் தேசம்

பனிமூடிய மலைகளின் பின்னணியில், எங்கும் பூத்துக்குலுங்கும் மலர்ச்சோலைகள் நிறைந்து, கண்களுக்கு விருந்தளிக்கும் இடம், குல்மார்க். பள்ளத்தாக்கின் முழு அழகையும் மொத்தமாகக் காண, ரோப் கார் பயணம் சிறந்த வழி. இங்கு கோடையில்,  ‘மவுன்ட்டெய்ன் பைக்கிங், டிரெக்கிங்’ உள்ளிட்ட சாகசங்களையும், பனிக்காலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுகளிலும் ஈடுபடலாம்.

பார்க்க சிறந்த காலம்: கோடையில், ஜூன் – அக்டோபர் வரை; குளிர்காலத்தில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள்.

சோன்மார்க் –  அழகின் அடையாளம்

முடிவில்லா மலர்களின் காட்சிகளும், மாசுபடாத டிரெக்கிங் பாதைகளும் கண்டு அனுபவிக்கத் தக்கவை. இந்த இடங்களின் காட்சிகளும் வண்ணங்களும் களிப்பூட்டும். ‘டிரெக்கிங், கேம்பிங், நேச்சர் வாக்,’ உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு பொருத்தமான இடம் இது.

பார்க்க சிறந்த காலம்: கோடையில், ஜூன் – அக்டோபர் வரை ; குளிர்காலத்தில்,  டிசம்பர்-ஜனவரி மாதங்கள்.

லே – சாகசத்தின் நிலம்

ஓங்கி உயர்ந்த மலைகள், பளிங்கு ஏரிகள், புத்த மடாலயங்கள் என உள்ளத்தில் கிளர்ச்சியூட்டும் சூழல் இங்கு காத்திருக்கிறது. ‘மவுன்ட்டெய்ன் பைக்கிங், டிரெக்கிங்’ உள்ளிட்ட சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற இடம் என்பதால், சாகசப் பிரியர்களின் கனவுத் தேசம் என்று சொல்லலாம்..

பார்க்க சிறந்த காலம் : ஏப்ரல் – ஜூன் வரை, செப்டம்பர் – அக்டோபர் மாதங்கள். நவம்பருக்கு பிறகு, பனிப்பொழிவின் காரணமாக பெரும்பாலான சாலைகள் மூடப்படும்.

குப்வாரா – காஷ்மீரின் மகுடம்

தனது இயற்கை அழகால், ஜம்மு காஷ்மீர் சுற்றுலாவின் உந்து சக்தியாக இருக்கிறது, குப்வாரா. புல்வெளிகள், எங்கும் பூக்கள் பூத்திருக்கும் மலைகள், குதித்தோடு தெளிந்த நீரோடைகள் என எல்லாம் இங்குண்டு. லோலாப் பள்ளத்தாக்கு, கமார் ரேஷி சாஹிப் மசூதி, உள்ளிட்ட இடங்களும் பார்க்கத் தக்கவை கடந்தகால வரலாற்றை சொல்லும் கிராமங்களும், வழிபாட்டிடங்களும், வரலாற்று ஆர்வம் கொண்டோர் இங்கு காண வேண்டியவை.

பார்க்க சிறந்த காலம் : ஏப்ரல் – அக்டோபர் மாதம் வரை

கார்கில் – மறக்கமுடியாத நகரம்

இந்தியர்களால் மறக்க முடியாத நகரமாகிவிட்ட கார்கில் நகரம், மிகவும் அமைதியான இடம். இதயத்தைத் தொடும் நினைவுகளால் மட்டுமல்ல, பிரம்மிக்க வைக்கும் காட்சிகளாலும் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களை தரும். பள்ளத்தக்குக்கு டிரெக்கிங் பயணம், மலையேற்றப் பயிற்சிகள் என உடலுக்கு உற்சாகம் கொடுக்கலாம். முல்பெக் கொம்பா, ஷெர்கோல், உர்கியான் ட்ஸோங் மற்றும் வாக்கா ராயல் போன்ற இடங்கள் காண வேண்டியவை.

பார்க்க சிறந்த காலம் : மார்ச் – ஜூன்  மாதம் வரை

புல்வாமா – வண்ணங்களின் சங்கமம்

பல வண்ண மலர்கள் நிறைந்த தோட்டங்கள், ஆங்காங்கு காணப்படும் தெளிந்த நீரோடைகள், அருவிகள், அற்புதமான காலநிலை, குங்கும வயல்களின் சுகந்தமான மணம், நட்புடன் பழகும் மக்கள் என, புல்வாமா, அழகிய அனுபவங்களை தரும். கோடையில் மலையேற்றம், டிரெக்கிங் உள்ளிட்ட செயல்பாடுகளும், குளிர்காலத்தில் பனிச்சறுக்கும் மற்றும் ஸ்னோபோர்டிங் விளையாட்டும் இங்கு பிரபலம்.

பார்க்க சிறந்த காலம் : ஏப்ரல் முதல்  அக்டோபர் வரை.

பஹல்காம் – உற்சாகத்தின் ஊற்று

அமைதியும், தூய்மையான அழகும் தான், பஹல்காம். இந்த சிறு நகரத்துக்குள் நுழைந்தாலே, எல்லாக் கவலைகளும் பறந்து போகும் என்கின்றனர். இங்குள்ள மலைப்பகுதியில் ஊசியிலைக் காடுகள் உள்ளன. பெடாப் மற்றும் அரு பள்ளத்தக்க்குகளின் அழகு சொக்க வைக்கும்.  இங்கு குதிரைச் சவாரி, சாகச படகுச்சவாரி போன்ற செயல்பாடுகள் பிரபலம்.

பார்க்க சிறந்த காலம் : ஜூன் – அக்டோபர் வரை; டிசம்பர்-ஜனவரி மாதங்கள்

ஹெமிஸ் – வேறொரு உலகம்

அதிகம் அறியப்படாத இடமான ஹெமிஸ், ஒரு சிறிய கிராமம். தேசிய பூங்காவுக்காகவும், அங்குள்ள மடாலயத்துக்காவும் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இது வனவிலங்கு ஆர்வலர்களுக்கு மிகப் பொருத்தமான இடம். பனிச்சிறுத்தை, பாரல்ஸ் எனப்படு காட்டாடு ஆகியவற்றை தேசிய பூங்காவில் காண முடியும்.

பார்க்க சிறந்த காலம் : மே – ஜூலை வரை.

– செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g