ஹீரோயின்களின் பொழுதுபோக்கு என்ன தெரியுமா?

ஹீரோயின்களின் பொழுதுபோக்கு என்ன தெரியுமா?

வேகமாக ஓடும் இந்த உலகத்தில், வேலைகளுக்கு நடுவே அநேக மக்களின் ஒரே பொழுதுபோக்கு, சினிமா மட்டுமே. படம் பார்ப்பதும், பாடல் கேட்பதுமாக நேரத்தை ஜாலியாக கழிக்கிறோம். அதுசரி, சினிமாவை தொழிலாக வைத்திருக்கும் நடிகர்களின் பொழுதுபோக்கு என்ன? நம் ஹீரோயின்களின் பிடித்தமான பொழுதுபோக்கு விஷயங்கள் என்னவென்று விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்…

பயணப் பிரியை – சமந்தா

சென்னை பொண்ணு என்பதால், இங்கு நண்பர்கள் கூட்டம் அதிகம் சமந்தாவுக்கு. இப்போது திருமணமாகி ஹைதராபாத்தில் செட்டிலாகிவிட்டதால், படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் சென்னை நண்பர்களோடு ஃபோனில் அரட்டை அடித்து நேரத்தை கழிக்கிறார் சம்மு. தவிர, நீண்ட தொலைவு பயணம் செல்வது சமந்தாவின் ஹாபி. குறிப்பாக தெரியாத இடங்களுக்கு, தனியாக செல்வது என்றால் அத்தனை பிரியம்.

எழுத்தாளர் – மேகா ஆகாஷ்

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இன்னும் ரிலீஸே ஆகவில்லை. அதற்குள் மேகா ஆகாஷை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் தமிழ் ரசிகர்கள். இவரின் அப்பா தெலுங்கர், அம்மா மலையாளி. ஆனால் இவருக்கு பிடித்த மொழி ஆங்கிலம். ஆங்கில இலக்கியங்கள், நாவல்கள் என்றால் இரவு பகலாக கூட வாசிக்கக் கூடியவர். தமிழில் வீக் என்றாலும், ஆங்கிலத்தில் கதை, கவிதை எழுதுகிறார். இதுபோக, தினமும் இரண்டு மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி, நண்பர்களுடன் சென்னையை சுற்றித் திரிவது மேகாவின் பொழுதுபோக்குகள்.

நான் ஒரு ஓவியர் – ஹன்சிகா

ஷுட்டிங்கும் இல்லை, வீட்டிலும் ஆள் இல்லையென்றால், நடனப் புயலாக மாறிவிடுவாராம் ஹன்சிகா. இப்போது ஸ்குவாஷ் விளையாடுவதை ஹாபியாக வைத்திருக்கிறார் ஹன்சிகா. எந்த அளவுக்கு என்றால், தனியாக பயிற்சியாளர் வைத்து தீவிரமாக கற்றுக்கொள்ளும் அளவுக்கு. விடுமுறை நேரங்களில் மும்பையில் உள்ள ரோட்டுக்கடைகளில் துரித உணவுகள் சாப்பிடுவது பிடிக்குமாம். இதையெல்லாம் விட ஒரு நச் தகவல், ஹன்சிகா ஒரு ஓவியர். தூரிகையை கையில் எடுத்தால், வரைந்து முடிக்கும் வரை கீழே வைக்கமாட்டார்.

மீனுடன் பேசுவேன் – மஹிமா 

போர் அடிக்கிறது என்றால்,  அபார்ட்மென்ட்டில் இருக்கும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கிரிக்கெட், கண்ணாம்பூச்சி என விதவிதமாக விளையாடுவது மஹிமாவின் பொழுதுபோக்கு. இல்லையென்றால் அவரின் செல்லப்பிராணியான ஹம்டி மீனுடன் பேசிக் கொண்டிருப்பாராம்.

புத்தகப் பறவை – த்ரிஷா

சும்மாவே இருப்பது த்ரிஷாவுக்கு பிடிக்குமாம். எந்த வேலையும் செய்யாமல், எதையும் யோசிக்காமல் சும்மாவே இருப்பாராம். தட் வடிவேலு மொமன்ட்! தவிர, ஆங்கில புத்தகங்களை அதிகமாக வாசிக்கும் பழக்கம் கொண்டவர். குறிப்பாக, ‘கேர்ள் ஆன் தி ட்ரெய்ன்’ புத்தகம் அவரின் ஃபேவரைட். இந்த புத்தகத்தை மட்டும் திரும்ப திரும்ப வாசிக்கிறார்.

சாமியே சரணம் – நிவேதா பெத்துராஜ்

சாய்பாபாவின் தீவிர பக்தை நிவேதா. ஷூட்டிங் நாட்கள் என்றாலும் கூட, காலை நேரத்தை சாய்பாபா கோவில் சென்று வந்த பிறகுதான் மற்ற வேலைகள் எல்லாமாம். உலகம் சுற்றித் திரியும் நிவேதா, சென்று வரும் இடங்களின் நினைவாக விமான டிக்கெட்டை சேகரித்து வைக்கிறார். சீக்கிரமே இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு இருப்பதால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசிக்கிறார். கதை எழுதுகிறார்.

ஓவியமே மூச்சு – கீர்த்தி சுரேஷ்

ஓவியம் வரைவது கீர்த்தியின் பொழுதுபோக்கு. பைரவா பட ஷூட்டிங் நேரத்தில், நடிகர் விஜய்க்கு பரிசு ஒன்றைக் கொடுத்திருக்கிறார் கீர்த்தி. அது கீர்த்தியே கைப்பட விஜய்யை வரைந்தது. அந்த புகைப்படத்தை வீட்டு ஹாலில் மாட்டி வைத்திருக்கிறார் விஜய். ஓவியம் என்றால் கீர்த்திக்கு உயிர். தவிர, சமூக வலைதளங்களில் சுற்றித் திரிவது, இந்த சிட்டுக்குருவிக்கு பிடித்த ஒன்று.

– பகவத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g