இந்தியாவின் சுவை: மயக்கும் மகாராஷ்டிரா உணவுகள்!

இந்தியாவின் சுவை: மயக்கும் மகாராஷ்டிரா உணவுகள்!

நில அமைப்பைப் போன்று, மகாராஷ்டிரா மாநில மக்களின் உணவுப் பழக்கங்களும் தனித்துவமாக அமைந்துள்ளன. இவை சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட. பிற மாநில மக்கள் இவர்களின் உணவுகளை சற்று கூடுதல் காரமான உணவு என்று சொன்னாலும், இவர்கள் அவற்றை மிகவும் விரும்பி உண்கின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம், இந்தியாவின் இரண்டு புகழ்பெற்ற முக்கியமான இடங்களை உள்ளடக்கியது. ஒன்று மும்பை, மற்றொன்று புனே. கடற்பகுதி சார்ந்த இடங்களையும், இயந்திரமயமான நகர்ப்பகுதிகளையும் கலவையாகக் கொண்ட வித்தியாசமான நிலப்பகுதி. தக்காண பீடபூமியின் மத்திய வடபகுதியான மகாராஷ்டிரா, மேற்குத் தொடர்ச்சி மலையை உள்ளடக்கியது. நில அமைப்பைப் போன்று, இவர்களின் உணவுப் பழக்கங்களும் தனித்துவமாக அமைந்துள்ளன.

மகாராஷ்டிரா உணவு வகைகள் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட. பிற மாநில மக்கள் இவர்களின் உணவுகளை சற்று கூடுதல் காரமான உணவு என்று சொன்னாலும், விரும்பி அதிகம் உண்கின்றனர். நறுமணத்துடன் தயாரிக்கப்படும் பிளாக் மகாராஷ்டிரியன் மசாலா, பூண்டு மற்றும் இஞ்சி கொண்டு உணவு தயாரிக்கின்றனர். இவர்களின் உணவுகளில் பிரதானமாக அரிசி, பிரட் மற்றும் பருப்பு வகைகள் முக்கிய இடம்பிடிக்கின்றன. வெஜிடேரியன் உணவான பாஜ்ஜி எனும் டிஷ்ஷை, பிரட் மற்றும் சப்பாத்தியுடன் தினமும் சேர்த்துக் கொள்கின்றனர். அதேபோல ரசா எனப்படும் அசைவ உணவையும் அதிகம் உண்கின்றனர்.

 

மால்வானி மசாலா, கோடா மசாலா மற்றும் காலா மசாலா ஆகியவை மகாராஷ்டிரா உணவில் சேர்க்கப்படும் முக்கியமான மசாலாக்கள். வடா, பாவ், போளி ஆகியவை பாஜ்ஜிஸ், மிஸ்ஸல், உஸ்ஸல் மற்றும் ரக்டாவுடன் சேர்த்து பரிமாறப்படுகின்றன. மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதி, வொயிட் மற்றும் ரெட் மட்டன் கறிக்கு புகழ் பெற்றது. பாரம்பரியம் மிக்க கிரீன் சில்லி சட்னியும் இங்கு புகழ்பெற்ற டிஷ். கொங்கனி எல்லையில் வசிக்கும் மக்கள் தேங்காய்ப் பால், முந்திரி, அரிசி மற்றும் மாங்காயை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். கோகும் எனும் மூலப்பொருள், மகாராஷ்டிர உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவின் பாரம்பரிய உணவுகளில் சில:

போஹே

மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற உணவு வகை. அவல் கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவினை, எல்லா பகுதி மக்களும் விரும்புகின்றனர். போஹே, காலை உணவாக டீயுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. வெங்காயத்துடன் சேர்த்து தயாரிக்கப்படுவது கன்டா போஹே எனப்படுகிறது.

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் சேர்த்து தயாரிக்கப்படுவது, படாடா போஹே. டட்பே போஹே எனப்படுவது தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தயாரிக்கப்படுவதாகும்.

பிட்லா பக்ரி
மகாராஷ்டிராவின் கிராமப்பகுதிகளில் தயாரிக்கப்படும் உணவு. கடந்த சில வருடங்களாக எல்லோருக்கும் பிடித்தமான நகரத்து உணவாக மாறியிருக்கிறது.

பருப்புப்பொடியில் இருந்து தயாரிக்கப்படும் பிட்லா எனும் உணவை, பிரட் மற்றும் வெங்காயத்துடன், காரமான சில்லி பேஸ்ட் சேர்த்து தயாரிக்கப்பட்ட கன்டா பாஜ்ஜியுடன் உண்பதே பிட்லா பக்ரி எனப்படுகிறது. புனேவில் பெரிய ரெஸ்டரன்ட்களிலும், தெருவோரக் கடைகளிலும் இந்த உணவு கிடைக்கிறது.

பர்லி வாங்கி
மகாராஷ்டிர பாரம்பரிய சமையலில், காய்கறிகளில் மசாலாக்களை அடைத்து சமைக்கும் வழக்கம் உண்டு. கத்திரிக்காய் கொண்டு சமைக்கப்படும் சுவையான உணவு, பர்லி வாங்கி. நான்கு பாகமாகப் பிரிக்காமல், சிறியதாக வெட்டப்பட்ட கத்திரிக்காயில் நிலக்கடலை மற்றும் தேங்காய் சேர்த்து தயாரிக்கப்பட்ட கிரேவியை உள்ளே வைத்து சமைத்தால், பர்லி வாங்கி ரெடி.

வடா/வடா பாவ்

வடா அல்லது வடா பாவ், பாஸ்ட் புட் உணவு வகையை சேர்ந்தது. ‘இந்தியாவின் பர்கர்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. பாவ் எனப்படும் பன்னுக்கு நடுவே, உருளைக்கிழங்கினால் தயாரிக்கப்பட்ட போண்டாவை சேர்த்து சாப்பிட வேண்டும். இதனுடன் இனிப்பான சட்னி அல்லது உப்பு சேர்த்த பச்சை மிளகாயை, சைடு டிஷ்ஷாகத் தருகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் மட்டும் புகழ் பெற்றது வடா பாவ். மதிய நேரங்களில் உண்ணப்படும். இந்த ஸ்நாக்ஸின் விலையும் மிகவும் குறைவு. மும்பை மற்றும் புனேவின் தெருவோரங்களில் வடா பாவ் கடைகள் அதிகளவில் காணப்படுகின்றன.

ஆம்த்தி
பருப்பு கொண்டு தயாரிக்கப்படும் மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற உணவு. இந்த வகை உணவு நறுமணத்துடன் சிறிது இனிப்புச் சுவையும், சிறிது காரச் சுவையும் கொண்டது. பல வகையான பருப்பு வகைகளில் இருந்து, பல்வேறு பெயர்களில் இந்த உணவு தயாரிக்கப்படுகிறது.

சன்னாவில் தயாரிக்கப்படுவது கடாச்சி ஆம்த்தி என்றும், கோல்யான்சி ஆம்த்தி, மசூர் ஆம்த்தி என்று அழைக்கப் படுகின்றன. சாதம் மற்றும் நெய் சேர்த்து பரிமாறினால் சுவையாக இருக்கும்.

ரசா
மகாராஷ்டிராவின் நான்-வெஜிடேரியன் உணவு வகை. மட்டன், சிக்கன், மீன் அல்லது இதர கடல் உணவுகள் சேர்த்து தயாரிக்கப்படுவதாகும். கோலாப்பூர் பகுதியில் பிரசித்தி பெற்ற அசைவ உணவு. ஜூஸ் போன்று தயாரிக்கப்படும் அசைவ உணவு என்பதால், ரசா என்று பெயர் பெற்றது.

ரசா என்பதற்கு திரவம் என்று பொருள். மட்டன் சேர்த்து தயாரிக்கப்படுவது மட்னச்சா ரசா, தயிர் சேர்த்து தயாரிக்கப்படுவது பன்ந்த்ரா ரசா, சிக்கன் சேர்த்து தயாரிக்கப்படுவது வராதி ரசா எனவும் அழைக்கப்படுகின்றன.

புரான் போளி

மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற இனிப்பு உணவு. பருப்பு போளி, தேங்காய் போளி போன்ற வகையைச் சேர்ந்தது. சர்க்கரை, கொண்டைக் கடலை மாவு, அரிசி மாவு, ஏலக்காய்த் தூள் மற்றும் நெய் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது.

மைதா மாவிற்கு நடுவில் மேற்சொல்ல கலவையை வைத்து நெய்யில் பொரித்துச் சாப்பிடும் இந்த உணவை, விழாக் காலங்களில் அதிகம் சமைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g