ஆர்டர் செய்தால், தேடிவரும் வீட்டுச் சாப்பாடு!

ஆர்டர் செய்தால், தேடிவரும் வீட்டுச் சாப்பாடு!

அபூர்வமாக, சில உணவகங்களில் சாப்பிடும் போது மட்டுமே, ‘அட வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கிறதே’ என்று நமக்கு தோன்றும். இப்படியிருக்க, ஆர்டர் செய்தால் வீட்டுச் சாப்பாடு உங்கள் வீடு தேடி வந்தால் எப்படியிருக்கும் ? சாதித்துக் காட்டியிருக்கிறது Fooddoo.com.

வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகள் தான் இங்கே கதாநாயகர்கள். நமக்கு பிடித்தமான சாப்பாட்டை ஆர்டர் செய்தால் போதும், அவர்களே சமைத்துத் தருவார்கள். அட நன்றாக இருக்கிறதே என்று செட்டிநாடு கோழிக் குழம்பும், மட்டன் பிரியாணியும் ஆர்டர் செய்தோம். சொன்ன நேரத்திற்கு டெலிவரி செய்தார்கள். பிளாஸ்டிக் பைகளை அவர்கள் பயன்படுத்துவதில்லை. பேப்பர் பையில் அழகாக பேக் செய்து அனுப்புகிறார்கள். சாப்பாட்டின் சுவையும் தரமும் அசத்தல்.

சென்னையில் மொத்தம் 140 வீடுகளில் இருந்து, ஒவ்வொரு ஏரியாவிலும் சமைத்துக் கொடுக்கிறார்கள். பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்கும் ஓர் வாய்ப்பாகவும், அதேநேரம் சுவையான உணவுக்கான சிறந்த வழியாகவும் இருக்கிறது, Fooddoo.com இணையதளம். இதன் உரிமையாளர்களான சண்முகசுந்தரம் மற்றும் பொன்வேல் இருவரிடமும் பேசினோம்.

“பொதுவாக சாப்பாட்டில் அனுபவசாலிகள் யாரென்று யோசித்தால் இல்லத்தரசிகள் தான். அவர்களை வைத்தே ஆரம்பிக்கலாம் என்கிற எங்களின் சிந்தனையின் விளைவே இந்நிறுவனம். அம்மாக்கள் வீட்டில் சமைத்து எங்களிடம் தந்துவிடுவார்கள். நாங்கள் ஆர்டரை டெலிவரி செய்துவிடுவோம்.

“ஒவ்வொரு நாளும், அடுத்த நாள் வீட்டில் என்ன சமைக்கப் போகிறார்கள் என்பதை, முந்தைய நாளே மெனுவாக ஆன்லைனில் அம்மாக்கள் போஸ்ட் செய்துவிடுவார்கள். வட இந்திய, பஞ்சாபி, மற்றும் கேரள உணவுகள் , சிறுதானிய உணவுகள் என, நமக்குத் தேவையான உணவை ஆர்டர் செய்துகொள்ளலாம்,” என்று முடித்தார் சண்முகசுந்தரம்.

மதிய சாப்பாடு வேண்டுமென்றால் காலை, 10:30க்குள் ஆர்டர் செய்துவிட வேண்டும். இரவு டின்னருக்கு மாலை, 6:30க்குள் ஆர்டர் செய்ய வேண்டும். ஏனெனில், நாம் ஆர்டர் செய்த பிறகு தான், வீட்டில் சுடச்சுட சமைத்து தருவார்கள். நினைக்கும் போதெல்லாம் ஆர்டர் செய்ய முடியாது என்பதே இதன் மைனஸ். ஆனால் ஒரு வாரம், ஒரு மாதம் என, சந்தா முறையை தேர்வு செய்துகொள்ளலாம்.

பொன்வேல் பேசும்போது, “வீட்டுச் சாப்பாடு என்பதால், சாப்பிடுபவர்களுக்கு மனநிறைவும் திருப்தியும் கிடைக்கிறது. தவிர, உடலுக்கு கேடு விளைவிக்கும் செயற்கை நிறமிகள் உணவில் இருக்காது. முந்தைய நாள் மீதமான உணவை அடுத்த நாள் சமைத்துத் தரமாட்டார்கள். ஏனெனில் நாம் வீட்டில் எப்படி சமைப்போமோ, அப்படியே இவர்களும் சமைத்துத் தருகிறார்கள் என்பதே,” என்றார் பொன்வேல்.

சாப்பாட்டில் எண்ணெய் குறைவாக இருக்கவேண்டும், காரம் அதிகமாக இருக்கக் கூடாது…இப்படி வாடிக்கையாளர்கள் கேட்பதற்கு ஏற்ப சமைத்துத் தருகிறார்கள். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு வாரமும் உணவை பரிசோதிப்பது, இல்லத்தரசிகள் சமைக்கும் சமையலறையை புகைப்படமாக பதிவேற்றுவது என, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இந்நிறுவனம் பெற்றிருக்கிறது. ஆரோக்கியமான உணவாக சாப்பிட வேண்டும், அதுவும் வீட்டுச் சாப்பாடு வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வு.

– நீலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g