மண வாழ்வில் மகிழ்ச்சியை தக்க வைக்கும் 5 அம்சங்கள்!

மண வாழ்வில் மகிழ்ச்சியை தக்க வைக்கும் 5 அம்சங்கள்!

மண வாழ்க்கையில் மகிழ்ச்சியை தக்க வைப்பது என்பது தானாகவே நடக்காது. தம்பதியர் இருவரும் தங்களுக்குள் அடிப்படையான சில விஷயங்களில் புரிதலை வளர்த்துக் கொண்டால், மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அதற்கு பின்வரும் ஐந்து விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

துணைவரின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம்

 

எப்போதும் உங்கள் துணைவர், உங்கள் கருத்துடன் உடன்படுவார் என்று நம்பிக்கொண்டு, நீங்களாகவே முடிவுகள் எடுக்கும் போது, அது மனஸ்தாபங்களுக்கும் பிரச்னைகளுக்கும் காரணமாகிறது. உங்கள் வாழ்க்கையில் சமபங்காளியான துணைவரின் சுயத்தையும், உரிமைகளையும், கருத்துகளையும் அங்கீகரியுங்கள். அவர் எப்படி உணர்கிறார், என்ன சிந்திக்கிறார் என்று நீங்களே ஒரு முடிவுக்கு வரக்கூடாது. உங்கள் இருவர் தொடர்பான எந்த விஷயத்திலும் முடிவெடுப்பதற்கு முன்பாக, இதை கட்டாயம் கவனத்தில் கொள்ளுங்கள். முரண்பாடுகள் இருப்பது இயல்பு, நல்ல புரிதல் அதை சரி செய்துவிடும்.

தாம்பத்ய உறவில் தளர்வு கூடாது

பெரும்பாலான தம்பதியர்களுக்குள் ஏற்படும் உறவுச் சிக்கல்களுக்கு பின்னணியாக இருக்கும் காரணங்களில் முதன்மையானது, தாம்பத்ய உறவுக்கு முன்னுரிமை கொடுக்காமல் இருப்பது. நீங்கள் முதலில் சந்தித்த போது, உங்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கிளர்ச்சியையும் காதலையும் நினைத்துப் பாருங்கள். ஒருவருக்கொருவர் காதல் செய்திகளை பரிமாறிக் கொள்ளுங்கள். காதல் விளையாட்டுகள் தொடரட்டும். தினசரி இருவரும் தனியாக இருக்க அதிக நேரம் ஒதுக்குங்கள்.

வேலைகளை பங்கிட்டுக் கொள்ளுங்கள்

உங்களுக்கு அமைதியான, நல்லிணக்கம் கொண்ட, தூய்மையான வீடு வேண்டுமானால், தம்பதியர் இருவரும் வீட்டு வேலைகளை சரிபாதியாக பிரித்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒன்றிணைந்து வேலை செய்வதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இரண்டு பேரும் அலுவலகம் செல்பவர்களாக இருந்தால், இது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயமாகும். கணக்கு வழக்குகள், வீட்டுப் பராமரிப்பு, ஷாப்பிங், திட்டமிடுதல், சமைத்தல், குழந்தையை பார்த்துக் கொள்ளுதல், போக்குவரத்து போன்ற விஷயங்களை தம்பதியர் பகிர்ந்து செய்யலாம். இதனால் இருவருக்கிடையில் பிணைப்பும் காதலும் அதிகரிக்கும்.

பண விஷயங்களில் ஆலோசனை செய்யுங்கள்

குடும்பத்தின் நிதி இலக்குகள், சேமிப்புகள், செலவுகள் பற்றி, நீங்கள் இருவரும் கலந்து ஆலோசிக்கவில்லை என்றால், அது உங்களுக்கிடையில் பிரச்னைகள் ஏற்படுவதற்கு காரணமாகலாம். உங்கள் பட்ஜெட் நெருக்கடியாக இருந்தால், கடன்கள், கட்டணங்கள் என்று நிலைமை சமாளிக்கக் கடினமாக இருந்தால், மன அழுத்தமும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம். தேவையெனில், நிதித் திட்டமிடல் குறித்து நிபுணரிடம் ஆலோசனை பெறலாம். வருமானத்தை எப்படி செலவிடுவது என்பது குறித்து இருவரும் கலந்து பேசினால் தான், இருவரும் ஒரே இலக்குடன் செயல்பட முடியும்.

வாழ்க்கையை எளிமையாக்குங்கள்

நீங்கள் ஒவ்வொருவரும் எத்தனை மணி நேரம் வேலை செய்கிறீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அதேநேரம் பொழுதுபோக்கு அல்லது வீட்டுப் பராமரிப்புக்கு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள். இந்த நேரத்தை, நீங்கள் பரஸ்பரம் துணைவருடன் ஒன்றாக செலவிடும் நேரத்துடன் ஒப்பிடுங்கள். எல்லாம் சமநிலையில் இருக்கிறதா? இல்லையெனில், நீங்கள் இருவரும் உங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை மறுபரிசீலனை செய்யுங்கள். உங்கள் பணி வாழ்க்கையைவிட, மண வாழ்க்கையே முக்கியமானது என்பதை மறக்க வேண்டாம்.

– செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g