பயணத்தை பாதுகாப்பானதாக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ்

பயணத்தை பாதுகாப்பானதாக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ்

பயணத்தின் போது, குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணிக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால், எதிர்பாராத இடர்பாடுகளை மட்டுமல்ல, பண நஷ்டத்தையும் தவிர்க்க முடியும்.

தனியாக பயணிப்பவரோ, குடும்பமாக பயணிப்பவரோ, அல்லது அலுவல்ரீதியான பயணமோ, எப்படிபட்ட பயணமாக இருந்தாலும், வெளிநாடுகளுக்கு பயணிப்பது ஓர் மகிழ்ச்சியான அனுபவம். அதே நேரத்தில், இந்தப் பயணங்களில் எதிர்பாராத பிரச்னைகளும், நிகழ்வுகளும் ஏற்படலாம். ஆகவே எல்லா நிகழ்வுகளையும் சமாளிக்கும் விதமாக, ஒரு பயண இன்ஷூரன்ஸ் அல்லது ஹாலிடே இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு இருந்தால், உங்கள் பட்ஜெட்டிலும் கூடுதல் செலவிருக்காது, மகிழ்ச்சியும் தடைபடாது.

பயணத்தின் போது எல்லாமே நம் கட்டுப்பாட்டில், இடையூறுகளின்றி நடைபெறும் என சொல்ல முடியாது. அற்புதமான நினைவுகளாக மாற வேண்டிய பயண அனுபவம், சிறிய விஷயங்களால் மோசமான அனுபவமாக மாற வேண்டுமா? லக்கேஜ் திருடு போவது, விமானங்கள் ரத்தாவது, போன்றவை உங்கள் பயணச் செலவை அதிகரிக்கலாம். பாஸ்போர்ட், விசா போன்ற முக்கிய ஆவணங்கள் தொலையவோ, திருடு போவதோ நடக்கலாம். ஏன், சட்டபூர்வ உதவுகள் கூட தேவைப்படலாம் அல்லது பயணத்தின் போது எதிர்பாராத உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவ உதவி தேவைப்படலாம்.

ஆனால், உங்களிடம் மட்டும் பயண இன்ஷூரன்ஸ் இருந்தால், எதிர்பாராத இழப்புகளை ஈடு செய்ய முடிவதுடன், கவலையின்றி பயணத்தை மேற்கொள்ள நம்பிக்கைப் பிறக்கும். சில நூறு ரூபாய் செலவு செய்வதால், பண நஷ்டத்தை ஈடுகட்டுவது மட்டுமல்ல, தரமான சேவையையும் பெற முடியும். பயண இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்குவதை, பயணத்தின் போது செய்ய வேண்டிய வெறும் பேப்பர் ஒர்க் என்று நினைத்து அலட்சியமாக இருந்துவிடாமல், விமான டிக்கெட் ஏஜென்ட் சொல்கிறாரே என்று அவசரத்தில் வாங்காமல், நிதானமாக அலசி ஆராய்ந்து வாங்குங்கள்.

எதையெல்லாம் இன்ஷூரன்ஸ் கவர் செய்யும்?

உள்நாட்டுப் பயணத்தின் போது எடுக்கும் சாதாரண பயண இன்ஷூரன்ஸ் முதல் எல்லா ரிஸ்குகளையும் கவர் செய்யும் இன்ஷூரன்ஸ் வரை, பலவகையான பாதுகாப்பு அளிக்கும் பயண இன்ஷுரன்ஸ் பாலிசிகள் உள்ளன. குடும்பத்தினருக்கு, மாணவர்களுக்கு, தனிநபர்களுக்கு என தனித்தனி இன்ஷூரன்ஸ் பாலிசிகள் உள்ளன.

நீங்கள் பயணம் செல்லும் இடம், எவ்வளவு நாட்கள் பயணம், பயணத்துக்கான நோக்கம், உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில், இவற்றுக்கான பிரீமியம் தொகை நிர்ணயிக்கப்படும். நீங்கள் அடிக்கடி பயணிப்பவராக இருந்தால், ஆண்டு பாலிசி திட்டத்தை (annual plan) தேர்ந்தெடுப்பது நல்லது.

எதிர்பாராத அசம்பாவிதங்கள் மற்றும் பிரச்னைகளை நேரிடும் போது, கைகொடுக்கும் டிராவல் இன்ஷூரன்ஸை தேர்ந்தெடுக்கும் முன், இவை எந்த ரிஸ்குகளை கவர் செய்கின்றன, எதையெல்லாம் விட்டுவிடுகின்றன, பிரீமியம் தொகை என, பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, சிறந்ததை தேர்ந்தெடுக்கலாம். இதற்கு இன்ஷூரன்ஸ் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருப்பது நல்லது. இல்லையெனில், இன்ஷூரன்ஸ் விண்ணப்பத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பாக, பாலிசி பஜார் (Policy Bazaar), பேங்க் பஜார் (Bank Bazaar), பாலிசி எக்ஸ் (Policy X), மை இன்ஷூரன்ஸ் கிளப் (My Insurance Club) போன்ற ஆன்லைன் இன்ஷூரன்ஸ் ஆலோசனை நிறுவனங்களின் இணையதளங்களில் ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

டிராவல் இன்ஷூரன்ஸ் வாங்குவதற்கு முன்பாக பின்வரும் விஷயங்களை கணக்கில் எடுக்க வேண்டும்

ஹெல்த் கவர்:

அவசர நிலையோ, சந்தேகமோ ஏற்படும்போது, உங்களுக்கு உதவவும் வழிகாட்டவும், அந்த இன்ஷூரன்ஸ் கம்பெனி 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை அளிக்க வேண்டும்.

தனிப்பட்ட விபத்துகள் முதல் மரணம் வரை, உங்களின் அனைத்து மருத்துவ தேவைகளையும் அந்த பாலிசி கவர் செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். இது உங்களின் விடுமுறை அல்லது பயணத்தின் தன்மையை பொறுத்து மாறும். உதாரணத்துக்கு மலையேற்ற சாகசப் பயணத்தில் நீங்கள் ஈடுபடுவதாக இருந்தால், அதில் ரிஸ்க் அதிகம் இருப்பதால், பாலிசி பிரீமியம் தொகையும் அதிகமாக இருக்கும்.

உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் உடல்நலப் பிரச்னைகளை பதிவு செய்த பின்னரும், அதற்கும் சேர்த்து இன்ஷூரன்ஸ் கவர் செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

லக்கேஜ் பாதுகாப்பு / உடைமைகள் பாதுகாப்பு:

லக்கேஜ் புரட்டக்ஷன் இன்ஷூரன்ஸ் இருந்தால், பயணத்தின் போது உங்கள் மதிப்புமிக்க பொருட்கள் தொலைந்துவிட்டால் என்ன செய்வதென்று, நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தனிப்பட்ட உடமைகள், கிரெடிட்கார்ட் உள்ளிட்ட நிதி சம்பந்தப்பட்டவை, உடமைப் பொருட்கள், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள், இவற்றில் எதுவும் தொலைந்துவிட்டால், இந்த கவர் ஈடு செய்யும்.

சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் கவரேஜ் அளிப்பது மட்டுமல்லாமல், கூடுதலாக பயன உதவியும் அளிக்கிறார்கள். உதாரணத்துக்கு, உங்களுக்கு அவசரமாக ஒரு டிராவல் ஏஜென்சி வேண்டுமென்றால், அல்லது உடனடியாக பணப்பரிமாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை அல்லது நீங்கள் செல்லும் நாட்டைப் பற்றி தகவல் வேண்டுமென்றால் உதவி செய்கிறார்கள். அவ்வளவு ஏன், சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வெளிநாட்டில் சட்ட உதவிகள் பெறுவதில் கூட சேவை அளிக்கிறார்கள்.

பயண இடர்பாடுகளை சமாளிக்க டிரிப் இன்ஷூரன்ஸ்:

எதிர்பாராத சூழ்நிலையில் விமானப் பயணத்தை கடைசி நிமிடத்தில் ரத்து செய்ய நேருதல், ஹோட்டல் அறை முன்பதிவை ரத்து செய்ய நேருதல் போன்ற சூழ்நிலைகள், உங்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க பயண இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால், நீங்கள் எதிர்பாராத செலவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

மேலும் சில ஆலோசனைகள்:

  • நீங்கள் செல்லும் இடத்தைப் பொறுத்து, இன்ஷூரன்ஸ் கவரும், பிரீமியமும் நிர்ணயமாகும். குறிப்பாக மருத்துவ கவரே பயண இன்ஷூரன்ஸில் பிரதானமானது என்பதால், நீங்கள் செல்லும் நகரம் அல்லது நாட்டின் மருத்துவ செலவீனங்களுக்கு ஏற்ப இன்ஷூரன்ஸ் தொகையை முடிவு செய்யலாம்.  இது பிரீமியம் தொகையிலும் எதிரொலிக்கும்.
  • வெளிநாடுகளில் அதிக நாட்கள் தங்குகிறீர்கள் எனில், பிரீமியம் கட்டணமும் அதிகமாக இருக்கும். அடிக்கடி பயணிப்பவர்கள், ஆண்டு பாலிசி திட்டங்களில் சேர்ந்தால், பணத்தை மிச்சப்படுத்தலாம்.
  • சாதாரண சுற்றுலா பயணம் போகிறீர்களா அல்லது சாகசங்கள் நிறைந்த பயணம் போகிறீர்களா என்பதைப் பொறுத்து, இன்ஷூரன்ஸ் கவர் செய்ய வேண்டும். ஏனெனில் மலையேற்றம், டிரெக்கிங், ஸ்கீயிங், நீர் விளையாட்டுகள் போன்ற சாகச பயணங்களின் போது நிகழ வாழ்ய்ப்புள்ள அசம்பாவிதங்களுக்கு, தனியே கவர் செய்ய வேண்டும். சாதாரண பயணத்துக்கு செய்யும் இன்ஷூரன்ஸில் இந்த ரிஸ்குகள் அடங்காது.
  • அதேபோல, உங்களுக்கு 65 வயதுக்கு மேல் எனில், ஏற்கனவே இருக்கும் உடல்நலப் பிரச்னைகளுக்கும் சேர்த்து கவர் அளிக்கும், அதிக பாலிசி தொகைக் கொண்ட, விபத்து மரணக் காப்பீட்டு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய சீனியர் சிட்டிசன் திட்டங்களில் கவர் செய்யலாம்.
  • இதுதவிர, நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் சென்றிருக்கையில், உங்கள் வீட்டில் திருட்டு-கொள்ளை, தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இழப்பீடு பெற ஆட் ஆன் இன்ஷூரன்ஸ் செய்து கொள்ளலாம்.
  • ஆன்லைன் சேவைகள், கிளெய்ம் நடைமுறைகள், டால்பிரீ எண் சேவை, கட்டண முறைகள், மருத்துவமனை நெட்வொர்க் உள்ளிட்ட விஷயங்களை கவனிக்கவும்.
  • மருத்துவம், விபத்து, பாஸ்போர்ட் மற்றும் லக்கேஜ் இழப்பு, தனிப்பட்ட இழப்புகள், பயணம் ரத்தாதல் என, பல கவர்கள் ஒரே பாலிசியில் அடங்கியிருக்கும். ஆனால், ஒவ்வொரு கவருக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கிளெய்ம் பெறுவதில் வெவ்வேறு நடைமுறைகள் இருக்கும். ஆகவே, பயணத்திற்கு முன்பாக கிளெய்ம் நடைமுறைகளை படித்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • இன்ஷூரன்ஸ் பாலிசி தொடர்பான ஆவணங்களையும், இன்ஷூரன்ஸ் கம்பெனி ஹெல்ப்லைன் மற்றும் தேர்ட் பார்ட்டி அட்மின் தொலைப்பேசி ஆகியவற்றையும் பயணத்தின் போது எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.
  • – செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g