உங்கள் சருமத்துக்கு ஏற்ற சோப் எது?

சருமத்துக்கு ஏற்ற சோப், சிவப்பழகு அதிகரிக்கும் சோப், கிருமிகள் தொற்றை தடுக்கும் சோப், வசீகரமூட்டும் சோப், இப்படி வகைவகையான நூற்றுக்கணக்கான குளியல் சோப்புகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. இதில் உங்களுக்கு பொருத்தமான சோப்பை தேர்ந்தெடுப்பது எப்படி?

இந்திய குடும்பங்களில் மாதாந்திர மளிகைப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு, குளியல் சோப்கள் அத்தியாவசியமான பொருட்களாக உள்ளன. காஸ்மெடிக்ஸ், டாய்லெட்டரி பொருட்களில் ஒன்றாக கருதாமல், சோப்பை அத்தியாவசியமான பொருட்களுடன் சேர்த்திருப்பது, உடலை சுத்தம் செய்ய உதவும் பொருள் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான். ஆனால், இன்று உடலை சுத்தப்படுத்துதல் என்பதைத் தாண்டி, சருமப் பாதுகாப்பு, சருமப் பிரச்னைகள், அழகு கூட்டுதல், நறுமணமூட்டுதல் என, பல்வேறு பயன்களை அளிக்கும் புதுப்புது சோப்கள் வந்துவிட்டன. 10 ரூபாய் விலையில் இருந்து 700, 800 ரூபாய் விலை கொண்ட சோப்கள் வரை கிடைக்கின்றன.

சோப்பை எப்படி தேர்ந்தெடுப்பது?

எல்லாருக்கும் ஏற்ற சோப் என்று ஒன்றை மட்டும் சொல்ல முடியாது. காரணம் ஒவ்வொரு மனிதரின் சருமமும் தனித்துவமானது. ஒவ்வொருவரின் சருமமும் ஒவ்வொரு வகையானதால், சருமத்தின் தன்மைக்கு ஏற்பவே சோப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். எண்ணெய் பசை கொண்ட ஆய்லி ஸ்கின், ஈரப்பதம் குறைவான உலர்ந்த ‘ட்ரை ஸ்கின்’, சிறிய விஷயங்களுக்கு கூட ஒவ்வாமை வினையாற்றும் ‘சென்சிடிவ் ஸ்கின்’, ஈரப்பதம் மற்றும் வறட்சி என இரண்டு தன்மைகளும் கொண்ட ‘காம்பினேஷன் ஸ்கின்’ என, சருமம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டிருப்பதால், அதை மையமாக வைத்து, இன்று பல்லாயிரம் கோடி ரூபாய் சந்தைமதிப்பு கொண்ட வர்த்தகமாக, சோப் தயாரிப்பு வளர்ந்திருக்கிறது.

சரி, உங்கள் சருமத்துக்கு ஏற்ற சோப்பை எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்? சரியான சோப்பை நீங்கள் தேர்ந்தெடுக்காவிட்டால் அல்லது உங்கள் சருமத்துக்கு அந்த சோப் ஒத்துக்கொள்ளவில்லை எனில், அதனால் சருமத்துக்கு ஒவ்வாமையும், சரும நோய்களும் ஏற்படலாம். சில மோசமான சோப்கள் வேறு நோய்களை கூட ஏற்படுத்தலாம். டிவியில் வரும் விளம்பரங்களை அப்படியே கண்மூடித்தனமாக நம்பாமல், கொஞ்சம் கவனத்துடன் சோப்பை தேர்ந்தெடுத்தால், பல உடல்நலப் பிரச்னைகளை தடுத்திட முடியும். அதற்கு நாம் சருமம் பற்றிய விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், சருமப் பிரச்னை வரத் தொடங்கிவிட்டால், அது சரியாவதற்கு நீண்டகாலம் தேவைப்படும். முடிவில் அது உங்கள் அழகிய, பளபளக்கும் சருமத்துக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

ஆயில் ஸ்கின் சருமம் கொண்டவர்களுக்கு:

சருமத்தில் சீபம் எனப்படும் எண்ணெய் இயற்கையாகவே சுரக்கிறது. சருமத்துக்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து பராமரிப்பது, இதன் முக்கிய பணி. இந்த சீபம் சுரக்கும் அளவு, நபருக்கு நபர் வேறுபடும். ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு, இந்த அளவு அதிகமாக இருக்கும். இவர்களுக்கு முகப்பருக்கள், கட்டிகள் வரும் வாய்ப்பு அதிகம்.

இந்த வகை சருமம் கொண்டவர்கள், அடிக்கடி முகம் கழுவுவதுடன், ஸ்ட்ராங் சோப்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சோப் வாங்கும்போது, அதன் உட்பொருட்கள் பட்டியலைப் பார்க்கவும். சீ சால்ட், ஓட்மீல், பிரவுன் சுகர் அல்லது பீச் பிட்ஸ் போன்றவை இருந்தால் தேர்ந்தெடுக்கலாம். இவை உங்கள் சருமத்துக்கு ஊறுவிளைவிக்காமல், கூடுதலாக இருக்கும் எண்ணெய்ப்பசையை நீக்குவதுடன், சருமத்துக்கு ஏற்பட்ட சேதத்தையும் குறைக்கும். உங்கள் சருமம் அதிக சென்சிடிவ் தன்மை கொண்டிருக்கவில்லை எனில், மைல்டான எக்ஸ்ஃபோலியேட்டிங் சோப்பை வாரத்துக்கு 2 முதல் 4 முறை பயன்படுத்தலாம்.

நீங்கள் பயன்படுத்தும் சோப்பானது சருமத்தின் இழைவு (texture) மீது சரியான விளைவை ஏற்படுத்த வேண்டும். அந்த சோப்பு சரியானதில்லை எனில், சருமத்தில் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை விளைவுகளை ஏற்படுத்தும். மாய்ஸ்சரைஸிங் தன்மை இல்லாத சோப் பயன்படுத்தும் போது, குளித்த பிறகு உடலை வறண்டுப் போகச் செய்துவிடும். இதனால் உங்கள் முகம் பளப்பளப்பாக மிருதுவாக காட்சியளிக்கையில், உங்கள் உடல் சருமம் மிகவும் உலர்ந்து  காணப்படும் என்பது நினைவிருக்கட்டும்.

ட்ரை ஸ்கின் கொண்டவர்களுக்கு:

சருமத்துக்கு ஈரப்பதத்தை அளித்து, மென்மையாக பராமரிக்கும் சீபம் சுரப்பு, தேவையான அளவைவிட குறைவாக இருக்கும்போது, அந்தச் சருமம் உலர் சருமம் (ட்ரை ஸ்கின்) ஆகிறது. உலர் சருமத்துக்கான சோப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது, அந்த சோப்பில் மாய்ஸ்சரைஸிங் தன்மைகள் கொண்ட உட்பொருட்கள் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சோப்புகளில் பாரபின், லானோலின், கிளிசரின் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. அதிகமாக பயன்படுத்தப்படும் மாய்ஸ்சரைஸிங் சோப், கிளசரின் கலந்ததுதான். ஆகவே கிளிசரின் உள்ள சோப்பு சிறந்த தேர்வாக இருக்கும்.

இந்த சோப்கள் எரிச்சலை உண்டாக்காதது மட்டுமல்ல, சருமத்தின் இயற்கையான ஈர்ப்பதத்தினையும் நீக்காது. சருமத்தை சுத்தப்படுத்தியவுடன், சருமத்தின் மீது ஒரு மெல்லிய படலத்தை விட்டுச்செல்லும். இது காற்றிலுள்ள ஈரத்தை உட்கவர்ந்து சருமத்தின் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைக்கும். வெஜிடபிள் என்ணெய்கள், கோக்கா பட்டர், கற்றாழை (ஆலோ வேரா), தேங்காய் எண்ணெய், ஜொஜோபா எண்ணெய் மற்றும் அவகாடோ போன்றவை கலந்திருக்கும் சோப்களையும் தேர்ந்தெடுக்கலாம். சுருக்கமாக சொல்வதானால், மாய்ஸ்சரைஸிங் தன்மை கொண்டது என்று குறிப்பிட்டிருக்கும் சோப்களை தேர்ந்தெடுங்கள். இவை சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை பராமரிப்பதுடன், நீர்ச்சத்தையும் பாதுகாத்து சருமத்தை மென்மையாக்கும்.

சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு:

சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு, மார்க்கெட்டில் ஏராளமான சோப் வகைகள் கிடைக்கின்றன. ஆனால், அதில் pH அளவுகள் சரியாக உள்ளதா, ரசாயன நிறமிகள் மற்றும் வாசனைப் பொருட்கள் இல்லாமல் இருக்கின்றதா என்பதையெல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள், ரெகுலர் சோப்பை பயன்படுத்த வேண்டாம். லிபிட் ஃப்ரீ கிளென்சர்கள் அல்லது ஹெர்பல் சோப்களை, மாதிரிக்கு சோதித்துப் பார்த்து பிறகு பயன்படுத்தலாம்.

காம்பினேஷன் ஸ்கின் கொண்டவர்களுக்கு:

வறண்ட தன்மை, எண்ணெய்ப்பசை என இரண்டு தன்மைகளும் கலந்த சரும வகைதான், காம்பினேஷன் ஸ்கின். உங்களுடைய சருமம் இந்த வகையாக இருந்தால், நீங்கள் ஆயில் ஸ்கின் மற்றும் ட்ரை ஸ்கின் சருமங்களுக்கான பிரத்யேகமான சோப்புகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் ஆயில் சருமத்துக்குரிய சோப்பு, வறண்ட பகுதியை மேலும் வறண்டதாகவும், டிரை ஸ்கின் சோப்புகள், எண்ணெய்ப் பசை கொண்ட இடத்தை மேலும் ஈரப்பதம் மிக்கதாகவும் மாற்றிவிடும். ஆகவே காம்பினேஷன் சருமம் கொண்டவர்களுக்கு, கிளிசரின் சோப்புகள் சிறந்த தேர்வு.

நார்மல் ஸ்கின் கொண்டவர்களுக்கு:

இது காம்பினேஷன் சருமத்துக்கு நேரெதிரான தன்மை கொண்டது. இந்த சருமத்தில் அதிக வறட்சியும் இருக்காது, அதிக எண்ணெய் சுரப்பும் இருக்காது. இதற்கு ட்ரை ஸ்கின் மற்றும் ஆயில் ஸ்கின் சோப்கள் இரண்டையும் தவிர்த்து, ஹெர்பல் சோப்களை தேர்ந்தெடுக்கலாம்.

டி.எஃப்.எம் & pH அளவையும் கவனிக்க வேண்டும்

சோப்பில் இருக்கும் மொத்தக் கொழுப்பின் அளவு (TFM – Total Fatty matter) தான் டி.எஃப்.எம்., என்று வரையறுக்கப்படுகிறது. சாதாரணமாக குளியல் சோப்கள் ஆல்கலி(alkali), கொழுப்பு அமிலம், கிளென்சிங் மற்றும் பேஸ் பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன. இந்திய அரசின் பி.ஐ.எஸ் தர நிர்ணய விதியின் படி, குளியல் சோப்பில் எத்தனை சதவீதம் தாவர கொழுப்பு சேர்க்கப்பட்டு உள்ளது என்பதை குறிப்பிட வேண்டும். அதிக அளவு இயற்கை எண்ணெய் உள்ள சோப் உடலுக்கு நல்லது. எனவே கொழுப்பின் அளவை கொண்டு, சோப்களை 3 தரங்களில் (GRADE) பிரிக்கின்றனர். சோப் உறையில் இந்த விவரம் குறிப்பிடப்பட வேண்டும்.

TFM அளவு 75% க்கு மேல் GRADE 1
TFM அளவு 70 – 75% க்குள் GRADE 2
TFM அளவு 69% க்கு குறைவு GRADE 3

என வகைப்படுத்தப்பட்டுள்ளது. டி.எஃப்.எம். அதிகம் கொண்ட சோப் தரமானது என்று புரிந்துகொள்ளலாம்.

pH என்பது அமில-கார சமநிலையை குறிக்கும். நமது சருமத்தின் pH அளவு 5.5 ஆகும். மார்க்கெட்டில் கிடைக்கும் பெரும்பாலான சோப்புகளின் pH அளவு பெரும்பாலும் 7-9 என்ற அளவில் இருக்கிறது. இவற்றை தவிர்த்து, நமது சருமத்தின் pH அளவுக்கு நெருக்கமான  pH அளவு கொண்ட சோப்களை தேர்ந்தெடுக்கலாம்.

எந்த வகைச் சருமம் கொண்டவர்களாக இருந்தாலும், இவற்றை கவனிக்கவும்:

  • சோப்பை நேரடியாக சருமத்தின் மீது பயன்படுத்தக்கூடாது. அதை நீருடன் கலந்து நுரையுடன் வருவதை தான், சருமத்தில் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும்.
  • அதிக அமிலத்தன்மை அல்லது pH அளவு கொண்ட சோப்களை தவிர்க்கவும்.
  • அளவுக்கு அதிகமான ரசாயனங்கள் கலந்த சோப்களை தவிர்க்கவும். குறிப்பாக பாரபின்கள், சல்ஃபேட்கள் போன்ற ரசாயன உட்பொருட்கள் இருப்பவற்றை தவிர்க்கவும்.
  • 100 சதவீதம் ஃபேர்னஸ் அளிப்பதாக உறுதியளிக்கும் சோப்களை நம்ப வேண்டாம். இவற்றில் நிச்சயம் ரசாயனங்கள் அதிகம் கலந்திருக்கும்.
  • மிக அதிக வாசனை அல்லது அதிக நிறம் கொண்ட சோப்களை தவிர்க்கவும்.
  • எந்த சரும வகையாக இருந்தாலும், அதிலுள்ள மாய்ஸரைசிங் ஏஜென்ட்கள் எவை என்பதை பார்க்கவும்.
  • முடிந்தவரை இயற்கை உட்பொருட்கள் கொண்டவற்றை தேர்ந்தெடுக்கவும். ஆர்கானிக் சோப்புகளும் சிறந்தவை தான்.
  • விலை அதிகமான சோப் என்றால், அதிக நன்மைகள் கொடுக்கும் என்றும் அர்த்தமில்லை. விளம்பரங்கள், ஃபேன்சியான பேக்கிங்குகள் இவற்றைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்.
  • அதிக நுரை தரும் சோப்பு, நன்கு சுத்தப்படுத்தும் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. மாறாகவும் இருக்கலாம்.

உங்கள் சரும வகையை கண்டறியும் முறை:

மைல்ட் க்ளென்சர் கொண்டு உங்கள் முகத்தை நன்கு சுத்தம் செய்து உலர விடவும். வேறு எந்த பொருட்களையும் முகத்தில் பயன்படுத்தக் கூடாது. அப்படியே 30 நிமிடங்கள் விடவும். பின், உங்கள் கன்னங்கள், முகவாய், நெற்றி போன்ற இடங்களில் ஏதேனும் பளபளப்பு தெரிகிறதா என்று பாருங்கள். மீண்டும் ஒரு 30 நிமிடங்கள் கழித்து, உங்கள் சருமம் உலர்ந்து விட்டதா என்று பாருங்கள், குறிப்பாக சிரிக்கும் போது அல்லது வேறு முக அசைவுகள் கொடுக்கும் போது. உங்கள் சருமம் இறுக்கமாக இருப்பதாக உணர்ந்தால், அது ட்ரை ஸ்கின் ஆக இருக்கும். உங்கள் மூக்கு, நெற்றி ஆகிய பகுதிகளில் மட்டும் கவனிக்கத்தக்க அளவுக்கு பளபளப்பு இருந்தால், உங்கள் சருமம் நார்மல்/ காம்பினேஷன் ஸ்கின் ஆக இருக்கக் கூடும். மூக்கு, நெற்றி இவற்றுடன் உங்கள் கன்னங்களிலும் பளபளப்பு தெரிந்தால், உங்கள் சருமம் ஆய்லி ஸ்கின் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.

கண்ணாடி முன் நின்று எங்கு பளபளப்பு தெரிகிறது என்று பார்ப்பதற்கு பதிலாக, அந்தப் பகுதிகளில் ப்ளோட்டிங் பேப்பர் (உறிஞ்சு தாள்) கொண்டு ஒற்றி எடுத்து,  எண்ணெய்ப்பசை ஒட்டியிருக்கிறதா இல்லையா, எவ்வளவு ஒட்டியிருக்கிறது என்பதை வைத்து முடிவு செய்துகொள்ளலாம்.

– செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g