உலகம் போற்றும் வாரணாசியின் நெசவுக் கலை

கங்கை நீர் ததும்பும் வாரணாசி, ஃபேஷன் துறையின் முக்கிய மைல்கல். ஆன்மிகம், கலாச்சாரம் என பின்னிப் பிணைந்த அதே வாரணாசியில்தான், ஃபேஷனின் வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது. கொட்யூர் டிசைனர்களான அனிடா டாங்ரே, தருண் தஹிலானி, சப்யாசாச்சி, ரோஹித் பால் என, இன்னும் பலரது வடிவமைப்புகளில் இருக்கும் பிரம்மாண்ட கைவேலைபாடுகள் மற்றும் எம்பராய்டரிகளைக் கண்டு வியந்திருக்கிறீர்கள் என்றால், அதற்கு வாரணாசி நெசவாளர்கள்தான் காரணம்.

பனாரஸ் , காசி என பன்முகப் பெயர்கள் கொண்ட வாரணாசியை நெசவாளர்களின் கோட்டை எனலாம். இங்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நெசவாளர்கள் இருக்கின்றனர். குறிப்பாக வாரணாசியின் மதன்புரா, அலைபுரா, பிஜ்னோர், பரபங்க்கி, முபாரக்பூர், ராம்நகர், லோஹ்டா மற்றும் கோட்வா போன்ற இடங்களில் தான், 45,ஆயிரத்திற்கு மேற்பட்ட நெசவாளர்கள் வாழ்கின்றனர். பாரம்பரிய நெசவாளர்களும் இங்குதான் இருக்கின்றனர்.

சப்யாசாச்சி முகர்ஜி பேஷன் டிசைனர்

இந்தியாவின் மெயின்ஸ்ட்ரீம் பேஷன் டிசைனர்கள் தொடங்கி ஹாட் கொட்யூர் டிசைனர்கள் வரை இங்குதான் தங்களின் தனித்துவ டிசைன்களால் ஆடைக்கு அழகு சேர்க்கின்றனர். “உலக அளவில் பாரம்பரிய கைத்தறி கலைகள் இன்றளவும் டிமாண்டை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், அதற்கு வாரணாசி நெசவாளர்கள்தான் காரணம். உலகிலேயே நெசவில் கைத்தேர்ந்த கலைஞர்கள், ஃபேப்ரிக் உற்பத்தியாளர்கள் வாரணாசியில் மட்டும்தான் இருக்கின்றனர். அதை நான் பெருமையாக நினைக்கிறேன்” என வாரணாசி குறித்து பிரபல டிசைனர் ரீத்து குமார் லாக்மே ஃபேஷன் வீக்கில் கூறியிருக்கிறார்.

இன்றைய தலைமுறைப் பெண்களிடையே புடவைக் கட்டும் பழக்கம் குறைந்துவிட்டது. எனவே அந்த பாரம்பரியக் காலாசாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திற்காக, சப்யாசாச்சி ’சேவ் தி சாரி’ விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தி வருகிறார். அதில் தன்னுடைய பிரம்மாண்ட வேலைபாடுகள் கொண்ட புடவைகளுக்கான ப்ரொக்கேட் மற்றும் ஜரிகை வேலைபாட்டிற்கு வாரணாசியைதான் நாடுகிறார். இதன்மூலம் பாரம்பரிய பேட்டர்ன் மற்றும் கைத்தறியை மீட்டெடுக்கும் முயற்சியையும் செய்து வருகிறார்.

எம்பராய்டரி மற்றும் மினுமினுக்கும் கற்கள் பதித்த பேட்டர்ன்களால் அசத்தும் ரோஹித் பால், அதற்கான கை வேலைபாடுகள் மற்றும் ஃபேப்ரிக் தேர்வுக்கு வாரணாசியையே நாடுகிறார். அவர் ஒரு பேட்டியில் “என்னுடைய ஆடை வடிவமைப்பிற்கு வாரணாசி நெசவாளர்களை நாடும்போது, அவர்களுடனேயே அமர்ந்து கதைப் பேசி நட்புறவோடு இருப்பேன். எனக்கு தெரியாத பல டெக்னிக்குகளை அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வேன். அந்த அளவிற்கு நெசவு குறித்த அறிவை கொண்டிருக்கின்றனர்” என்று கூறினார்.

புருஷூ ஆரி, ஃபேஷன் டிசைனர்

இப்படி டிசைனர்கள் எல்லோரும் கொண்டாடும் வாரணாசி, அதன் கலை மற்றும் தனித்துவத்தால் நிலைத்து நிற்கிறதென்றால் அது மிகையல்ல. “பவர் லூம்களின் ஆட்சி கைத்தறியை நசுக்கினாலும், இன்றளவும் வாரணாசியில் அதற்கான முக்கியத்துவம் குறையவில்லை” என்கிறார் பேஷன் டிசைனர் புருஷூ ஆரி. இவர் இந்தியாவின் முதல் ஜெண்டர் நியூட்ரல் ஃபேஷன் லேபிளைக் கொண்டு வந்தவர்.

ஃபேஷன் துறையில் இத்தனைப் புகழ்பெற்ற வாரணாசியின் தனித்துவம், அதன் வடிவமைப்பு மற்றும் வேலைபாடுகள் தான். ஜரிகை மற்றும் ப்ரொக்கேட் டிசைன்களுக்கு முதன்மையாக இருக்கிறது. தறியில் நெய்தாலும், கை வேலைப்பாடுகளைப் போல அவை அத்தனை நேர்த்தியாகவும் தனித்தன்மையுடனும் இருக்கும்.

இதற்கு முக்கிய காரணம் தறியில் இவர்களின் தனித்திறன். இங்கு நெய்யப்படும் ப்ரொக்கேட் டிசைன்கள் உலக அளவில் சிறப்பு பெற்றவை.  ஜம்தானி, ஜங்லா, கட் ஒர்க், டச்சோய், டிஷூ, மஷ்ரூ, ரங்கட், சுடி பனாரசி, நல் பேர்வா , கின்காப் என 10 வகையான ப்ரொக்கேட் டெக்னிக்குகளை பிரத்யேகமாகக் கையாளுகின்றனர். இதிலேயே கின்காப் ப்ரொக்கேட் மிகப் பிரபலம்.

இது முகலாயர்கள் காலத்தில், பாரசீகர்களின் தாக்கத்தால் இந்தியாவிற்குள் வந்த கைத்தறி வேலைப்பாடு. இது முற்றிலும் சில்க் ஃபேப்ரிக் கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகளால் நெய்யப்படுகிறது. இந்த வேலைப்பாடு கொண்டதுதான் பனாரசி புடவை. அதேபோல் “ஜம்தானி காஞ்சீபுரம் பட்டாடைகளின் வேலைபாட்டை ஒத்ததாக இருக்கும். இருப்பினும் ஃபேப்ரிக்கின் தரம் மற்றும் நிறத்தில் மாற்றம் இருக்கும். வண்ணங்களில் சிவப்பு மற்றும் பிங்க் நிறம்தான் இங்கு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் புடவை காண்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும்” என்கிறார் டிசைனர் புருஷூ ஆரி.

ரீத்து குமார் ஃபேஷன் டிசைனர்

அதேபோல் தங்கச் ஜரிகைக் கொண்டு நெய்யப்பட்ட புடவையை ’ஹிரன்யா’ என்று அழைக்கின்றனர். அவை, அந்த காலத்தில் அரசக் குடும்பத்தினர் மற்றும் கோவில்களுக்கு நெய்து தரப்பட்டது. ஆனால் இன்று ஹிரன்யா ஆடைகளின் உற்பத்தி குறைந்துவிட்டது. ஜரிகை மற்றும் ப்ரொக்கேட் வேலைப்பாடுகளைப் போன்றே, ஃபேப்ரிக் உற்பத்திற்கும் வாரணாசி சிறப்பு பெற்றது. இன்று உலகம் முழுவதும் இந்திய கலாச்சார உடைகள் மிளிர்கிறதென்றால் அதில் அதிகபட்சம் வாரணாசி ஃபேப்ரிக்காகத்தான் இருக்கும். இதற்கு மிகப்பெரிய வரலாறே இருக்கிறது.

வாரணாசியில் பட்டு மற்றும் பருத்தி துணி நெசவு எந்த அளவுக்கு பிரபலம் என்பது பற்றி ஒரு சுவாரசியமான விஷயம் சொல்லப்படுவதுண்டு. சில பரம்பரைக் கதைகளின் படி, வாரணாசி தான் புத்தரின் தந்தை அரசாண்ட ‘காசி’ நாடு. இளவரசராய் இருந்த புத்தர், ஆடம்பரங்களையும் உலகியல் வாழ்க்கையையும் துறந்தபோது, காசியின் சிறந்த நெசவாளர்கள் தயாரித்த பட்டாடைகளை துறந்துவிட்டு எளிய ஆடையை தேர்ந்தெடுத்ததார். புத்தர் வாழ்ந்த காலகட்டத்தில், காசியில் பட்டு நெசவும், பருத்தி நெசவும் உன்னத நிலையில் இருந்ததாக ஜாதக புராணம் கூறுகிறது. காசியின் பருத்தித் துணிகள் நுணுக்கமாக நெய்யப்பட்டவையாக, மென்மையாக, முழுமையாக வெண்மை நிறத்துக்கு பிளீச் செய்யப்பட்டு, மெல்லியதாகவும் மிருதுவாகவும் இருந்ததாக, அது மேலும் கூறுகிறது.

கிமு 5-ம் மற்றும் 6-ம் நூற்றாண்டுகளில், காசியில் உற்பத்தி செய்யப்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த பருத்தி மற்றும் பட்டாடைகள், உலகின் விலையுயர்ந்த மதிப்புமிக்க விற்பனை பொருளாக இருந்ததாக தெரிய வருகிறது. புத்தர் மறைந்தபோது, அவரது உடல், காசியிலிருந்து தருவிக்கப்பட்ட புத்தம் புதிய பருத்தித் துணியில் போர்த்தப்பட்டது என்று ‘டெக்ஸ்டைல் ஆர்ட்  ஆஃப் இந்தியா’ என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. .


ஃபேப்ரிக் மட்டுமல்லாது, அதில் நெய்யப்படும் பேட்டர்ன்களும் வாரணாசியின் முக்கிய தனித்துவம். பேட்டர்ன்களைப் பொறுத்தவரை, இன்றைய ஃபேஷன் வளர்ச்சியால் எண்ணிலடங்கா டிசைன்களைக் கொண்டிருக்கிறது. அவற்றுள் பாரம்பரிய பேட்டர்ன்களைத்தான் இன்றைய டிசைனர்களான சப்யாசாச்சி, அனிதா டாங்ரே ஆகியோர் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

ரோஹித் பால்,  ஃபேஷன் டிசைனர்

விலங்குகள் பேட்டர்ன்களில் மான், புலி, யானை மற்றும் வேட்டையாடும் காட்சிகள் , கிருஷ்ணர், ராமர் [போன்ற கடவுளரின் உருவங்கள், இயற்கையை போற்றும் விதமாக மாங்காய், இலைகள், பூக்கொடிகள் என இவர்களின் பேட்டர்ன்கள் தனித்துவம். அதேபோல் இது புட்டாஸ் பேட்டர்னுக்கும் பெயர்போன இடம். புட்டாஸ் பேட்டர்னிலேயே பாதாம், மேங்கோ, நிலா என, 7 வகையான புட்டாஸ் இருக்கின்றன. 16ஆம் நூற்றாண்டின் முகலாய ஆட்சிக்குப் பின் பாப்பி , ரோஜா, மல்லி , தாமரை, ஸ்வான், புல்புல் போன்ற டிசைன்கள், புறா, மயில், சூரிய உதயம், மறைவு, என மாற்றம் கண்டது.

இஸ்லாமிய பேட்டர்ன்களான பாரசீக டிசைன்கள் மற்றும் ஜாலி டிசைன்கள் அதிகமாக நெய்யப்பட்டது. அப்போது ஜாலி பேட்டர்ன், இந்திய பேஷனுக்கு புதிய மறுமலர்ச்சியை கொண்டு வந்தது. அவை துருக்கி நாட்டின் ப்ரொக்கேட் ஸ்டைலை தழுவியது. அந்த பேட்டர்ன்கள் மேலை நாடுகள் பயன்படுத்திய விக்டோரியன் பாணி பேட்டர்ன்கள் மற்றும் ஜியோமெட்ரிக்கல் பேட்டர்ன்களை ஒத்ததாக இருந்தது என்று டிசைனர்கள் கூறுகின்றனர். பொதுவாகவே முகலாயர்கள் ஆடை ஆபரணங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்ததால், அந்த சமயத்தில் வாரணாசியின் கைத்தறி ஆடைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவினர்.

“வாரணாசி நெசவாளர்களின் வாழ்வாதாரமான இந்த கலையை, உலகம் முழுவதும் இந்திய டிசைனர்கள் கொண்டு சேர்க்கின்றனர் என்றால் அதன் பாரம்பரியம்தான் காரணம். அது கலாச்சார அடையாளமாக மட்டுமல்ல, விவசாயத்துக்கு அடுத்து, இந்தியாவின் இரண்டாம் முதுகெலும்பாக நெசவுத்தொழில் இருக்கிறது” என பெருமைக் கொள்கிறார் புருஷூ ஆரி.

– ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g