அவசியம் அறிந்திருக்க வேண்டிய 5 ஆண்ட்ராய்டு ஃபோன் செட்டிங்ஸ்

அவசியம் அறிந்திருக்க வேண்டிய 5 ஆண்ட்ராய்டு ஃபோன் செட்டிங்ஸ்

ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன் பயன்படுத்துகிறவர்களில் பெரும்பாலானவர்கள், அதன் அடிப்படை வசதிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். நமக்கு உதவக் கூடிய நிறைய அம்சங்கள் ஆண்ட்ராய்டில் இருந்தாலும்,  அவற்றை பற்றித் தெரியாததால் நாம் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. ஆண்டுராய்டு மெனுவில், என்னென்ன செட்டிங்குகளை நமக்கு உதவக்கூடிய வகையில், மாற்றி அமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம். 

G – போர்டில் மாற்றம்!

மெசேஜ்கள் டைப் செய்யவும், தேடவும் ‘G போர்டு’ செயலி வசதியாக இருப்பதால், பெரும்பாலானோர் அதையே விரும்பிப் பயன்படுத்துகிறோம். இந்நிலையில் நீங்கள் வேகமாக தட்டச்சு செய்யும் நபராக இருந்தால், உங்கள் வேகத்தை ஜிபோர்டில் இருக்கும் எண்கள் வரிசை தடுத்து நிறுத்தும். இதற்கான தீர்வாக, எண்களுக்கான ஒரு தனிப்பட்ட வரிசையை கீபோர்டில் வைத்துக்கொள்ள ஜிபோர்டு அனுமதிக்கிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது,  ஜிபோர்டு அமைப்புகளுக்கு சென்று, பிரிஃப்பரன்ஸ் அமைப்பில் எண் வரிசைக்கான மாற்றை ஆன் செய்யவும். அப்போது எழுத்துக்கள் தனியாகவும், எண்களின் அமைப்பு தனியாகவும் மாறிவிடும். வேகமாக மெசேஜ் அல்லது மெயில் டைப் செய்யும் போது, எண்களையும் எழுத்துகளையும் தொந்தரவு இல்லாமல் டைப் செய்ய முடியும்.

ஆன் ஸ்கிரீன் சீக்ரெட்ஸ்!

லாக் செய்யப்பட்ட நிலையில் உள்ள திரையிலேயே, போனுக்கு வரும் அறிவிப்புகளை நாம் தெரிந்து கொள்ளலாம் என்பது யாரும் அறிந்ததே. ஆனால் நமக்கு வரும் செய்தி மிகவும் முக்கியமானதாக இருந்தால், அது அடுத்தவர்கள் பார்க்கும்படி பாதுகாப்பில்லாமல் இருந்தால் நன்றாகவா இருக்கும்? இதைத் தவிர்க்க, நமக்கு வரும் மெசேஜ்கள் ஆன் ஸ்கிரீனில் தெரிவதை மறைத்து வைக்கவும் ஒரு ஆப்ஷன் இருக்கிறது. அதனால் செட்டிங்ஸ் -க்கு சென்று லாக் ஸ்கிரீன் & பாஸ்வேர்ட் என்னும் பகுதியில், திரையில் எந்த மெசேஜையும் காட்டாதபடி இருக்கும் ஆப்ஷனை ஆன் செய்து வைக்கவும். இது மிகவும் உபயோகமான செட்டிங்ஸ் மாற்றமாகும்.

குரோம் முகவரி பாரை கீழே கொண்டு வருதல்

உங்களுக்கு ஒரு பெரிய திரையுடன் கூடிய மொபைல்போன் இருந்தால், ஒவ்வொரு முறையும் மேலே இருந்து கீழே உள்ள கீபோர்டிற்கு வந்து தட்டச்சு செய்வது கடினமாகத் தெரியும். இந்நிலையில் நீங்கள் ஒரு குரோம் பயனராக இருந்தால், மேலே உள்ள முகவரி பாரை கீழே கொண்டு வர முடியும். இதைச் செய்ய, கூகுள் குரோம் அப்ளிகேஷனை திறந்து, அதில் முகவரி பாரில் “chrome://flags” என்று டைப்  செய்யவும். அமைப்பின் கீழே “குரோம் ஹோம் ஆண்ட்ராய்டு” என்கிற ஆப்ஷனுக்கு சென்று, குரோம் முகவரி பாரை கீழே கொண்டு வரலாம்.

தனிப்பட்ட விளம்பரங்களுக்கு ‘நோ’

நமது எல்லா செயல்பாடுகளையும் கூகுள் பின்தொடர்ந்து, நம்மை முழுமையாக அறிந்து கொள்கிறது. உங்கள் அந்தரங்க விஷயங்களின் மீது அதிக கவனம் செலுத்தும் நபராக நீங்கள் இருந்தால், தனிப்பட்ட விளம்பரங்களைப் பெறுவதில் இருந்து வெளியேறி விடுங்கள். இதற்கு செட்டிங்குக்குள் சென்று, கூகுள் விளம்பரங்கள் மற்றும் தனிப்பட்ட விளம்பரங்களில் இருந்து வெளியேறுவதை இயக்கவும். இது பலருக்கும் தெரிவதில்லை. அதனாலேயே பல்வேறு சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள்.

உடனடி ஆட்டோ லாக் 

உடனடி ஆட்டோ லாக் ஆப்ஷனை  ஆக்டிவேட் செய்வதன் மூலமாக, உங்கள் ஃபோனை தொலைந்தாலோ அல்லது தவறான நபர்களிடம் கிடைத்தாலோ, தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கலாம். இதனால் உங்கள் தகவல் திருடப்படுவதையும் தடுக்கலாம். இதற்கு உங்கள் திரையின் டைம்அவுட் நேரத்தை மிகவும் குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடு போனாலோ, போனுக்குள் இருக்கும் தரவுகள் வெளியாகாமல் இருக்கும். அதற்குள் செக்யூரிட்டி ஆப்ஷன்களை பயன்படுத்தி, போனில் இருக்கும் தரவுகளை அளித்துவிடலாம். ஆனால் அந்த செக்யூரிட்டி ஆப்ஷன்களை உங்களின் ஸ்மார்ட்போனில் எப்போதும் இயக்கத்தில் இருப்பது போலவே அமைத்துக் கொள்வது நல்லது.

– தன்யதீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g